Ad Widget

புடினின் சர்வதேச பிடியாணை தொடர்பில் பிரேசில் தகவல்!!

அடுத்த வருடம் பிரேசில் தலைநகரில் இடம்பெறவுள்ள ஜி20 உச்சிமாநாட்டில் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் கலந்துகொண்டால் அவர் கைதுசெய்யப்படமாட்டார் என பிரேசில் ஜனாதிபதி லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வா தெரிவித்துள்ளார்.

அடுத்த ஜி20 மாநாட்டில் கலந்துகொள்ளுமாறு புடினிற்கு அழைப்பு விடுக்கப்படும் என தெரிவித்துள்ள அவர் புடினால் பிரச்சினைகள் இன்றி பிரேசில் வரமுடியும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இந்தியாவில் இடம்பெறும் ஜி-20 மாநாட்டில் ஏன் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் கலந்துகொள்ளவில்லை என்ற கேள்வி எழுந்துள்ளது.

மார்ச் மாதம் சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் விளாடிமிர் புடினிற்கு எதிராக பிடியாணையை பிறப்பித்தது. அவர் உக்ரைனில் யுத்த குற்றங்களில் ஈடுபட்டார் என குற்றம்சாட்டியுள்ளது.

இதன் காரணமாக ரஷ்யாவுக்கு வெளியே சென்றால் தான் கைதுசெய்யப்படும் நிலையை புடின் தவிர்க்க விரும்புகின்றார்.

ஆபிரிக்காவில் சமீபத்தில் இடம்பெற்ற பிரிக்ஸ் மாநாட்டை அவர் தவிர்த்தார். கடந்த வருடம் ஐசிசியின் பிடியாணைக்கு முன்னரே அவர் பாலியில் இடம்பெற்ற ஜி-20 மாநாட்டில் கலந்துகொள்ளவில்லை.

உக்ரைன் விவகாரம் தொடர்பில் சர்வதேச அரங்கில் தனிமைப்படுத்தப்படுவதை அவர் தவிர்க்க விரும்புகின்றார் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

வாக்னர் குழுவின் கிளர்ச்சி காரணமாக ரஷ்யாவில் புடினின் பிடியில் தளர்ச்சி ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், புடினிற்கு பதிலாக ரஷ்ய வெளிவிவகார அமைச்சர் ஜி20 மாநாட்டில் கலந்துகொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Posts