Ad Widget

புங்குடுதீவு இறுப்பிட்டி கிராமத்தில் விவசாய பண்ணை

புங்குடுதீவு  இறுப்பிட்டி 5ம் வட்டாரத்தில் தெற்கே கலைவாணி வீதி வடக்கில் கடிதப்பிட்டி- கேரதீவு வீதி கிழக்கில்  கேரதீவு கடற்கரை வீதி மேற்கில் இறுப்பிட்டி பிரதான வீதியால் சூழப்பட்ட பிரதேசத்தினை  முழுமையாக விவசாயப்பண்ணையாக்கும் முயற்சி ஒன்று கிருஸ்ணா என்றழைக்கப்படும்  சுப்பையா கிட்டினன் என்ற லண்டன் வாழ் புலம்பெயர் முதலீட்டாளர் ஒருவரால் முன்னெடுக்கப்படுகின்றது. அவருடன் மேலும் சிலரும் இணைந்திருப்பதாக கூறப்படுகின்றது அதற்காக அந்த வீதிகள் அகலமாக்கப்பட்டு  கம்பி வேலி அமைத்து பிரதேசம் தனிமைப்படுத்தப்படுகின்றது.

உள்ளே வரும் தனியார் காணிகளில் பெரும்பாலானவற்றுகான அனுமதியை வெளிநாடுகளில் வசிக்கும் அந்தக்காணி உரிமையாளர்கள் முதலீட்டாளருக்கு வழங்கி உள்ளதாக முதலீட்டாளர் தரப்பில் தெரிவிக்கப்படுகின்றது. இலங்கையில் வசிக்கும் காணி உரிமையாளர்கள் சிலர் குறித்த காலத்திற்கு பண்ணை நடவடிக்கைக்கு குத்தகைக்கு வழங்க முன்வந்துள்ளனர் .

பருவமழை தவிர்ந்த காலத்தில், குழாய்க்கிணறுகள் ஊடாகவும் குளங்கள் அமைப்பதன் ஊடாகவும் தேவையான நீர் பெறப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.குறுகிய காலத்தில் உருவாக்கப்பட்டு நீண்டகால பலன்தரக்கூடிய பல்வேறு பயிரினங்கள் நாட்டப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சில குடியிருப்பாளர்கள் தமது காணியில் தாங்களே பயிரிட விரும்பியுள்ளனர்.

குறித்த பிரதேசத்தில் உருவாக்கப்படும் பண்ணையில் இருந்து பெறப்படும் வருமானம் புங்குடுதீவின் அபிவிருத்திக்காக பயன்படுத்தப்படும் என்றும் முதல் 2 வருடங்களிற்கு பண்ணையில் பராமரிப்பாளர்களுக்கான செலவினத்தை  முதலீட்டாளர் வழங்குவார் எனவும் அதன்பின் பண்ணையில் இருந்து வரும் வருமானம்   புங்குடுதீவின் அபிவிருத்திக்காகவும்  பிறிதோரு இடத்தில் பண்ணை அமைப்பதற்கும் பயன்படுத்தப்படும் கூறப்படுகின்றது.

பண்ணை அமைவதாயின் குறித்த நிலப்பரப்பில் உள்ள காணி உரிமையாளர்களின் சம்மதம் பெறப்படவேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. காணி உரிமையாளர்கள்  வந்து உரிமை கோரினால் அவை அவர்களுக்கு மீள  வழங்கப்படும் என்றும் முதலீட்டாளர் தரப்பில் தெரிவிக்கப்படுகின்றது எனினும் விரும்புவோர் சட்டரீதியான உடன்படிக்கையினை மேற்கொள்வது பின்னாளில் ஏற்படக்கூடிய சட்டச்சிக்கல்களை தவிர்க்கும் என கிரமத்தினை தற்போது வதிவோர் தெரிவித்தனர்

இதேவேளை நடுவுத்திறுத்தி கிராமத்திலும் வேறு சிலரால் அவ்வாறான பண்ணை அமைக்கும் பணி ஒன்று இடம்பெறுவதாக தெரிவிக்கப்படுகின்றது

புங்குடுதீவில் பல்வேறு குளங்களும் சில நன்னீர் தேக்கங்களும் பாலங்களும் அரசினால் புனரமைக்கப்பட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுகொண்டிருக்கின்றது.

மடத்து வெளியில் பொலிஸ் நிலையம் அமைப்பதற்கு  காணி ஒன்று குத்தகைக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் அங்குள்ள வீடு ஒன்று  தன்னுடைய செலவில் புனரமைக்கப்படுவதாகவும் மேற்படி முதலீட்டாளர்   தெரிவித்தார்

Related Posts