Ad Widget

புங்குடுதீவில் சட்டத்தை மதிக்காத குழுவொன்று செயற்படுகின்றது

யாழ்ப்பாணம் புங்குடுதீவு பகுதியில் சட்டத்தை மதிக்காத சிறு குழுவொன்று செயற்படுகின்றது என வடமாகாண சிரேஸ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் லலித் ஏ ஜெயசிங்க தெரிவித்தார்.

யாழ். தலைமைப் பொலிஸ் நிலையத்திலுள்ள பிரதிப் பொலிஸ்மா அதிபர் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை (29) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில்,

புங்குடுதீவில் மாணவி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து கடந்த 19ஆம் திகதி மக்களுடன் ஒரு கலந்துரையாடலை பொலிஸார் அங்கு நடத்தினர். அங்கு பொலிஸ் நிலையம் அமைப்பதற்கு 1 ஏக்கர் காணி தருவதாக கல்விமான்கள் கூறியிருந்தனர்.

இது தொடர்பான கலந்துரையாடல் முன்னெடுக்கப்படுவதற்கு, அங்கு சட்டத்தை மதிக்காத சிறு குழுவினரால் கூட்டத்தில் குழப்பம் ஏற்படுத்தப்பட்டது. பொலிஸ் நிலையம் அமைப்பதற்கான பேச்சு தொடர்ந்து அங்கு முன்னெடுக்கப்படவில்லை.

குழப்பம் விளைவிக்கும் குழு தொடர்பில் குற்றப்புலனாய்வு பிரிவினருக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. அது தொடர்பான நடவடிக்கைகளை அவர்கள் செய்வார்கள்.

புங்குடுதீவு மக்கள் தமக்கு பொலிஸ் நிலையம் வேண்டும் என்று எதிர்பார்க்கின்றனர். சட்டத்தை மதிக்காத குழுவை விட்டு, குழப்பமற்ற சந்திப்புக்கு முன்வந்தால், தொடர்ந்து அங்கு பொலிஸ் நிலையம் அமைப்பதற்கான பேச்சுக்கள் இடம்பெற்று பொலிஸ் நிலையம் அமைக்கலாம்.

மேலும் இது போன்று காரைநகர் பகுதியிலும் பொலிஸ் நிலையம் அமைப்பதற்கான காணி தருவதாக மக்கள் தெரிவித்திருந்தனர். இதனைத் தொடர்ந்து பொலிஸ் திணைக்களத்துடன் கலந்துரையாடி பொலிஸ் நிலையம் அமைப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படுகின்றது.

மக்களின் தேவை கருதி மக்கள் இடம்தரும் பட்சத்தில் அப்பகுதியில் சி தர பொலிஸ் நிலையம் அமைக்க முடியும் என்றார்.

Related Posts