Ad Widget

புகையிரத சேவைகளில் ஏற்பட்டுள்ள மாற்றம் : முல்லைத்தீவு மக்களுக்கு நற்செய்தி!

எதிர்வரும் 21ஆம் திகதி முதல் மாங்குளம் புகையிரத நிலையத்தில் கடுகதி புகையிரதங்கள் உட்பட்ட அனைத்து புகையிரதங்களும் நிறுத்தப்படும் என புகையிரத திணைக்களம் அறிவித்துள்ளது.

முறிகண்டி மற்றும் மாங்குளம் ஆகிய இரண்டு புகையிரத நிலையங்களில் முல்லைத்தீவு மாவட்ட மக்கள் புகையிரத சேவைகளை பெற்று வருகின்றனர்.

இந்த இரண்டு புகையிரத நிலையங்களில் முல்லைத்தீவு மாவட்டத்தின் மக்களுக்கான புகையிரத சேவைகளை பெற்றுக் கொள்ளக்கூடிய பிரதான புகையிரத நிலையமாக மாங்குளம் புகையிரத நிலையம் காணப்படுகின்றது.

இருப்பினும் மாங்குளம் புகையிரத நிலையத்தில் ஆசன முற்பதிவு வசதிகள் இல்லாமையாலும் கடுகதி புகையிரதம் நிறுத்தப்படாமையாலும் மக்கள் மாத்திரமன்றி அரச அதிகாரிகளும் புகையிரத சேவையை பெற கிளிநொச்சி அல்லது வவுனியா புகையிரத நிலையங்களுக்கே செல்லவேண்டிய நிலை ஏற்படுவதால் பல்வேறு இன்னல்களுக்கு முகம்கொடுத்து வந்தனர்

இந்நிலையில் இந்த இரண்டு சேவைகளையும் வழங்குமாறு பவ்வேறு தரப்பினராலும் தொடர்ச்சியாக கோரிக்கை விடுக்கப்பட்டது.

இந்தநிலையில் எதிர்வரும் 21ஆம் திகதி முதல் மாங்குளம் புகையிரத நிலையத்தில் கடுகதி புகையிரதங்கள் உட்பட்ட அனைத்து புகையிரதங்களும் நிறுத்தப்படும் என புகையிரத திணைக்களம் அறிவித்துள்ளது.

இதற்கமைய திணைக்களத்தால் வெளியிடப்பட்ட நேர அட்டவணைப்படி 05.10 க்கு கொழும்பு கோட்டையில் இருந்து புறப்படும் குளிரூட்டப்பட்ட கடுகதி ரயில் 10.42 மணிக்கு மாங்குளத்தை வந்தடைந்து காங்கேசன்துறை நோக்கி புறப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம் வெள்ளிக்கழமைகளில் யாழ் நிலா இரவு 10.00 மணிக்கு புறப்பட்டு அதிகாலை 4.20 க்கு மாங்குளத்தை வந்தடைந்து காங்கேசன்துறை நோக்கி புறப்படவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஞாயிற்று கிழமைகளில் காங்கேசன்துறையில் இருந்து மதியம் 1.15 க்கு புறப்படும் குளிரூட்டிய கடுகதி புகையிரதம் மாங்குளத்திற்கு 2.54 ற்கு வந்தடைந்தது கொழும்பை நோக்கி செல்லவுள்ளது.

அதேநேரம் ஒவ்வொரு ஞாயிற்று கிழமைகளிலும் யாழ் நிலா புகையிரதம் காங்கேசன்துறையில் இருந்து இரவு 9.30 க்கு புறப்பட்டு மாங்குளத்திற்கு இரவு 11.20 க்கு வந்தடைந்து கொழும்பு நோக்கி செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஏற்கனவே நிறுத்தப்பட்டுவந்த அனைத்து புகையிரதமும் வழமைபோல் நிறுத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது

இந்நிலையில் புகையிரத திணைக்களத்துக்கு நன்றி தெரிவிப்பதோடு விரைவில் ஆசன ஒதுக்கீட்டு வசதியையும் ஏற்படுத்தி தர வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Posts