Ad Widget

பீதியில் யாழ். மக்கள்! வாள்வெட்டுக் குழுவின் தாக்குதலால் எட்டு பேர் படுகாயம்!!!

யாழ்ப்பாணத்தில் நேற்றிரவு நான்கு இடங்களில் இடம்பெற்ற வாள்வெட்டுச் சம்பவங்களில், எட்டு பேர் படுகாயமடைந்து யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கோண்டாவில், அறுகால்மடம், நல்லூரடி மற்றும் மானிப்பாய் ஆகிய பகுதிகளில், நேற்று (செவ்வாய்க்கிழமை) இரவு இரண்டு மணித்தியாலங்களுக்குள் இச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, மானிப்பாய் சங்குவேலி பகுதியில் முச்சக்கர வண்டியில் சென்றுகொண்டிருந்தவர் மீது வாள்வெட்டுத் தாக்குதல் நடத்தப்பட்டபோது, சாரதி தப்பிச் சென்று அருகிலுள்ள வீடொன்றில் அடைக்கலம் புகுந்துள்ளார். எனினும், அவரை துரத்திச் சென்ற வாள்வெட்டுக் குழு, வீட்டில் இருந்தவர்கள் மீதும் மீதும் தாக்குதல் நடத்தியுள்ளது.

இதில், முச்சக்கர வண்டி சாரதியான மானிப்பாய் குச்சி ஓடையைச் சேர்ந்த ஆனந்தராசா ஜெனீஸ்கரன் (வயது – 35), இராசதுரை ரவிசங்கர் (வயது – 40), ரவிசங்கர் பகீரதன் (வயது – 15) மற்றும் சங்குவேலி பிள்ளையார் கோவிலடியைச் சேர்ந்த பாலசுப்பிரமணியம் சிவகுருநாதன் (வயது- 54) ஆகிய நால்வர் படுகாயமடைந்தனர்.

அத்தோடு, ஆனைக்கோட்டை ஆறுகால்மடம் பகுதியில் உள்ள வீடொன்றினுள் புகுந்த 10 பேர் கொண்ட கும்பல் ஒன்று, வீட்டில் இருந்த பொருட்களை அடித்து நொறுக்கியுள்ளதோடு, தாக்குதலும் மேற்கொண்டுள்ளனர். இதில், குலசிங்கம் குலபிரதீபன் (வயது – 35) என்பவர் படுகாயமடைந்துள்ளார்.

இதேவேளை கோண்டாவில் டிப்போவிற்கு முன்பாக உள்ள உணவகம் ஒன்றினுள் உட்புகுந்த கும்பல், உணவகத்தில் உணவருந்திக்கொண்டு இருந்தவர்களை வெளியேறுமாறு அச்சுறுத்திவிட்டு உணவகத்தில் இருந்த தளபாடங்கள் உள்ளிட்ட பொருட்களை அடித்து நொறுக்கியுள்ளது. அதன் பின்னர், குறித்த கடையில் பணியாற்றி வந்த புத்தூர் கிழக்கைச் சேர்ந்த செல்வராசா மணிமாறன் (வயது – 27) என்பவரை வாளினால் வெட்டிவிட்டு தப்பிச் சென்றுள்ளது.

மேலும், நல்லூர் முடமாவடியிலுள்ள வீடொன்றுக்குள் புகுந்த கும்பல் அங்கிருந்த பொருட்களை சேதப்படுத்தியதோடு, வீட்டில் இருந்த ராஜன் மற்றும் லக்ஷ்மன் ஆகிய இருவரை வெட்டிக்காயப்படுத்தியுள்ளது. அத்தோடு, வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளையும் கொள்ளையிட்டுச் சென்றுள்ளது.

யாழ்ப்பாணத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து இவ்வாறு வாள்வெட்டுக் குழுவினர் தாக்குதல் நடத்தி வருகின்ற நிலையில், மக்கள் பீதியில் உறைந்துள்ளனர். சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம், கோப்பாய் மற்றும் மானிப்பாய் பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். எனினும், இதுவரை எவரும் கைதுசெய்யப்படவில்லை.

Related Posts