Ad Widget

பீடாதிபதியின் உறுதிமொழியையடுத்து தடுத்துவைக்கப்பட்ட விரிவுரையாளர்கள் விடுவிப்பு

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நுண்கலைப்பீட மாணவர்களின் பகிஷ்கரிப்புப் போராட்டம் காரணமாக நுண்கலைப்பீட வளாகத்துக்குள் தடுத்துவைக்கப்பட்ட விரிவுரையாளர்களை, அங்கு சென்ற கலைப் பீடாதிபதி வி.பி.சிவநாதன் உறுதிமொழி வழங்கி மாணவர்களின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்தார்.

மருதனார்மடத்தில் உள்ள நுண்கலைப் பீடத்தில் கல்வி கற்கும் மாணவர்களுக்கான பரீட்சைகள் கடந்த காலத்தில் சீராக நடைபெறவில்லை, ஏனைய பீடங்களுக்கு பரீட்சைகள் முடிவுற்றுள்ள போதிலும் நுண்கலைப் பீடத்தில் வரைதலும் வடிவமைத்தலும் துறைக்கு பரீட்சைகள் நடைபெறவில்லை, மற்றும் தமது துறைக்கான இணைப்பாளரை நியமனம் செய்யவில்லை போன்ற குறைகளை நிவர்த்தி செய்யக் கோரி இந்த அடையாள வகுப்பு பகிஷ்கரிப்பை நடத்தினர்

கடந்த 16ஆம் திகதியும் இவர்கள் தமது கோரிக்கைகளை முன்வைத்து போராடியபோது, அவர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என பல்கலைக்கழக நிர்வாகம் வழங்கிய உறுதிமொழியை அடுத்து தமது போராட்டத்தைக் கைவிட்டனர். 2 வாரங்கள் ஆகியும் தங்களின் கோரிக்கைகள் எதுவும் இதுவரையில் நிறைவேற்றப்படவில்லை எனக்கூறி மாணவர்கள் மீண்டும் கடந்த 26ஆம் திகதி மீண்டும் முகங்களில் பல வடிவங்களை வரைந்து போராட்டம் செய்தனர்.

தங்கள் கோரிக்கைகளை பல்கலைக்கழக நிர்வாகம் தொடர்ந்தும் அலட்சியம் செய்து வருவதையடுத்து, செவ்வாய்க்கிழமை(31) போராட்டம் முன்னெடுத்தனர். முற்பகல் 10 மணிக்கு முன்னெடுக்கப்பட்ட போராட்டம் 4.30 மணியையும் தாண்டி இடம்பெற்றதால், நுண்கலைப்பீடத்துக்குள் இருந்த விரிவுரையாளர்கள் வெளியில் செல்வதற்கு மாணவர்கள் அனுமதியளிக்கவில்லை.

இதனைத் தொடர்ந்து அவ்விடத்துக்கு சென்ற பீடாதிபதி, மாணவ மன்றப் பிரதிநிதிகள், துறைத்தலைவர்கள், விரிவுரையாளர்களை உள்ளடக்கிய சந்திப்பொன்றை நடத்தி, அதில் பிரச்சினைகளுக்கு முடிவை பெற்றுத்தருவதாக எழுத்துமூலம் அறிவித்ததையடுத்து, மாணவர்கள் போராட்டத்தை கைவிட்டனர்.

Related Posts