Ad Widget

பிள்ளைகளின் செயற்பாடுகளை உன்னிப்பாக கவனியுங்கள் , பெற்றோர்களுக்கு பொலிஸாரின் ஆலோசனை

யாழ்.குடாநாட்டு மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு பொலிஸாராகிய நாம் என்றும் தயாராக இருக்கின்றோம் என யாழ்ப்பாணம் தலைமைப் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி யு.கே.வூட்லர் தெரிவித்தார்.

சிறுவர் துஸ்பிரயோகத்திலிருந்து பிள்ளைகளை பாதுகாப்பது தொடர்பில் விழிப்புணர்வு கலந்துரையாடல் ஒன்று இன்று யாழ்ப்பாணம் திருக்குடும்ப கன்னியர் மடத்தில் மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களுக்கும் இடம்பெற்றது. அதன்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

நான் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்திற்கு வருகை தந்து இரண்டு மாதங்கள் கடந்து விட்டன. குறித்த காலப்பகுதியில் பொதுமக்களுடன் கலந்துரையாடுதல், பாடசாலையினருடன் கலந்துரையாடுதல் மற்றும் பலருடன் கலந்துரையாடியுள்ளேன்.

அதனூடாக இங்குள்ள பிரச்சினைகளை கேட்டறிந்து கொண்டேன். ஆயிரக்கணக்கிலான முறைப்பாடுகளும் கிடைத்துள்ளன.

இந்த நாட்டில் நடைமுறைப்படுத்துவதற்கு அரச சட்டக்கோவை உள்ளது. அந்தவகையில் அரச உத்தியோகத்தர் என்ற வகையில் எனது கடமையை செய்ய நான் தயாராக உள்ளேன். அதேபோல நீங்கள் உங்களுடைய கடமையை சரிவர செய்ய வேண்டும்.

இங்கு பாலியல் துஸ்பிரயோகம், போதைப்பொருள் பாவனை மற்றும் சட்டவிரோத செயல்களை செய்தல் என்பன அதிகரித்துக் காணப்பட்டமையினால் அவற்றில் இருந்து யாழ்ப்பாண மக்களை பாதுகாக்க நான் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டேன். அவற்றில் ஒரு அங்கம் தான் உங்களை நான் சந்தித்து கலந்துரையாடுவதும்.

அத்துடன் ஒவ்வொருநாளும் மாலை 5மணிக்கு பின்னர் நகரிலும் மற்றும் வீதிகளிலும் கூடும் மாணவர்களை இனங்கண்டு வீட்டுக்கு அனுப்பிவைக்கும் நடைமுறையை ஏற்படுத்தியுள்ளேன்.

பாடசாலைகளுக்கு அருகில் பெட்டிக்கடைகள் மற்றும் ஐஸ்கிறீம் கடைகள் என்பனவற்றினை அகற்றுமாறு கோரியுள்ளேன். ஏனெனில் குறித்த விற்பனை நிலையங்களிலேயே போதைப்பொருள்கள் மாணவர்களுக்கு விநியோகம் செய்யப்படுகின்றது என எனக்கு முறைப்பாடு கிடைக்கப்பெற்றது.

மேலும் பெற்றோர்களாகிய நீங்கள் உங்கள் பிள்ளைகள் பாடசாலைக்கு கொண்டு செல்லும் புத்தகப்பை மற்றும் அவர்கள் பயன்படுத்தும் தொலைபேசி என்பனவற்றை சோதித்து பார்க்க வேண்டும்.

ஏனெனில் பாடசாலைக்கு செல்வதாக கூறி செயல்லும் பிள்ளைகளின் புத்தகப் பையில் சிவில் உடைகளையும் எடுத்துச் செல்கின்றனர். வீட்டில் இருந்து வந்து தங்களது பாடசாலை சீருடைகளை மாற்றி விட்டு சிவில் உடையில் வெளியில் திரிகின்றனர். இவ்வாறான சம்பவங்களையும் நாங்கள் யாழ்ப்பாணத்தில் கண்டுள்ளோம்.

அத்துடன் பிள்ளைகள் மீது வைத்துள்ள பாசத்தின் காரணத்தினால் அவர்களுக்கு தொலைபேசிகள் , இணையத்தள வசதிகள் உள்ளிட்டவற்றை பெற்றுக் கொடுக்கிறீர்கள். ஆனால் அது பிழையில்லை. எனினும் பிள்ளைகளைக் கவனிக்க பெற்றோருக்கு நேரம் போதாதுள்ளமையே தவறு.

எனவே பெற்றோர்கள் உங்கள் பிள்ளைகளின் எதிர்காலத்தை கவனத்தில் கொண்டு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இதேபோல மாணவர்களும் தங்களுடைய எதிர்காலத்தை முன்னேற்ற பாதையில் கொண்டு செல்ல கல்வியில் ஆர்வம் காட்டவேண்டும்.

மேலும் தற்போது களவு போகின்ற சம்பவங்களும் அதிகரித்துள்ளது. எனவே உங்களது உடமைகளை பாதுகாப்பது ஒவ்வொருவரது கடமையுமே. அதிகமாக தங்க நகைகளை அணிந்து செல்ல வேண்டாம். அதற்குப் பதிலாக கவரிங் நகைகளை அணிந்து செல்லுங்கள் அதனால் ஆபத்துக்கள் பொருட் சேதங்களையும் தவிர்த்துக் கொள்ளமுடியும் என்று நான் கேட்டுக்கொள்கின்றேன்.

அத்துடன் மாணவர்களும் சரி பெற்றோர்களும் சரி போக்குவரத்து விதிமுறைகளை சரியாக கவனத்தில் கொள்ளுங்கள் . வீதியில் செல்லும் போது கட்டாயம் தலைக்கவசம் அணிந்து சென்று உயிர்ச்சேதத்தை தவிர்த்துக் கொள்ளுங்கள் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

Related Posts