Ad Widget

பிரேமானந்தாவின் சகாக்களை விடுவிக்கக் கோரி மோடிக்கு விக்கி கடிதம்!

சர்ச்சைக்குரிய பாலியல் வழக்குக் குற்றவாளியான சுவாமி பிரேமானந்தாவின் சகாக்கள் மூவரை புழல் சிறையிலிருந்து விடுதலை செய்யுமாறு வடக்கு மாகாண முதலமைச்சர் நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியைக் கடிதம் மூலம் கோரியிருக்கின்றார் என்று செய்தி வெளியிட்டுள்ள இந்திய ஊடகங்கள், வடக்கு முதல்வரின் கோரிக்கை குறித்து அதிர்ச்சியும் ஆச்சரியமும் வெளியிட்டிருக்கின்றன.

திருச்சியில் ஆச்சிரமம் அமைத்து செயற்பட்டு வந்தவரான இலங்கையைச் சேர்ந்த சுவாமி பிரேமானந்தா என்பவரும் அவரது சகாக்களான மூவரும் (கமலானந்தா, பாலன் எனப்படும் பாலேந்திரன், சதீஷ் எனப்படும் சதீஷ்குமார்) சிறுமியர் உட்பட 13 பெண்களை பாலியல் பாலாத்காரம் செய்தனர் என்றும் ஆச்சிரமவாசி ஒருவரை திட்டமிட்டுக் கொலை செய்து புதைத்தனர் என்றும் குற்றம் சுமத்தப்பட்டு நீதிமன்றத்தினால் விசாரிக்கப்பட்டு, இரட்டை ஆயுள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டனர்.

இவர்களது மேன்முறையீடுகளை விசாரணை செய்த இந்திய உச்சநீதிமன்றம் மேன்முறையீட்டைத் தள்ளுபடி செய்ததுடன் இரட்டை ஆயுள்தண்டனையை உறுதி செய்தது.

மேற்படி சுவாமி பிரேமானந்தாவின் பாலியல் லீலைகள் குறித்து 90களில் தமிழக ஊடகங்களில் – சினிமா உட்பட அனைத்திலும் – கதை, கதையாகப் பேசப்பட்டது. அந்த சுவாமியே நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரனின் குரு என்றும் கூறப்படுகிறது.

கூட்டங்களின்போது வடக்கு முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன் “குருப்பிரம்மனே…!” என்று தனது உரைகளின் ஆரம்பத்தில் குறிப்பிட்டுத் தியானிப்பது இந்த குருவையே என்றும் தெரிவிக்கப்படுகின்றது. இந்த சுவாமியின் ஆச்சிரம செயற்பாடுகளில் நீதியரசர் விக்னேஸ்வரன் அதீத ஈடுபாடு காட்டி வருபவர். இரட்டை ஆயுள் தண்டனையை அனுபவித்த சுவாமி பிரேமானந்தா கூடலூர் சிறையில் நோய்வாய்ப்பட்டு 2011இல் உயிரிழந்தார்.

அதுவரை அடிக்கடி சிறைக்குச் சென்று அவரைத் தரிசித்து வந்தார் நீதியரசர் விக்னேஸ்வரன். சுவாமியோடு சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட ஏனைய மூவரும் தொடர்ந்து சிறையில் உள்ளனர். இந்த மூவரையும் விடுவிக்கும்படி கோரியே இப்போது இந்தியப் பிரதமருக்கு கடிதம் எழுதியிருக்கின்றார் வடக்கு முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன்.

இலங்கையின் முன்னாள் உயர்நீதிமன்ற நீதியரசரான சி.வி.விக்னேஸ்வரன், அந்தக் கடிதத்தில் குறிப்பிட்ட விடயங்கள் குறித்து இந்திய அதிகாரிகள் அதிர்ச்சியும் ஆச்சரியமும் அடைந்துள்ளனர் என்று புதுடில்லி ஊடகங்கள் தெரிவித்திருக்கின்றன.

‘மேற்படி மூவரும் இந்த வழக்கில் – குற்றங்களில் – தவறாக சம்பந்தப்படுத்தப்பட்டுள்ளனர். அவர்கள் மூவருமே குற்றமற்ற அப்பாவிகள். திருச்சி பிரேமானந்தா ஆச்சிரமமும் அதன் சொத்துக்களும் சரியாகப் பரிபாலிக்கப்படவேண்டும். ஆகவே இந்த மூவரையும் விடுதலை செய்ய வேண்டும்.’ – என்று விக்னேஸ்வரன் கோரியிருக்கின்றமை குறித்தே இந்திய அதிகாரிகள் ஆச்சரியமும் அதிர்ச்சியும் வெளியிட்டிருக்கின்றனர்.

“நீதித் துறையின் உயர் சேவையில் இருந்த நீதியரசர் விக்னேஸ்வரனுக்கு இந்திய நீதித்துறையின் முறைமை குறித்து நன்கு தெரியும். கீழ் நீதிமன்றத்தினால் குற்றவாளிகளாகக் காணப்பட்டு மேல் நீதிமன்றத்தினால் அது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அத்தகைய விடயத்தில் குற்றவாளிகள் தவறான முறையில் இந்த வழக்கில் தொடர்புபடுத்தப்பட்டுள்ளனர் என்றும் அவர்கள் அப்பாவிகள் என்றும் விக்னேஸ்வரன் குறிப்பிடுவது இந்திய நீதித்துறையையே கேலிக்குள்ளாக்குவது போன்றது” என்று அந்த அதிகாரிகள் கூறுகின்றனர்.

இலங்கையிலிருந்து 1983 கலவரங்களை அடுத்து இடம்பெயர்ந்த சுவாமி பிரேமானந்தா திருச்சி அருகே பாத்திமா நகரில் ‘சுவாமி பிரேமானந்தா ஆச்சிரமத்தை’ ஆரம்பித்தார். இலங்கையில் இருந்து இடம்பெயர்ந்த பெண்கள் பலர் ஆச்சிரமத்தில் தங்கவைக்கப்பட்டிருந்தனர்.

90 முற்பகுதிகளில் ஆச்சிரமத்தில் தங்கியிருந்த ஒரு பெண் அங்கிருந்த தப்பியமையை அடுத்து பல திடுக்கிடும் அந்தரங்கங்கள் அம்பலமாகின. கைதுசெய்யப்பட்ட சுவாமி பிரேமானந்தா மீது 1994 இல் பல்வேறு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. ஆச்சிரமத்தில் தங்கியிருந்த ஈழத்தமிழ்யுவதிகள் 13 பேரை பாலியல் பலாத்காரம் செய்தமை உட்பட பல விடயங்கள் அடுக்கடுக்காக முன்வைக்கப்பட்டன.

இந்த அத்துமீறல்களை எதிர்த்தவர் என்று கூறப்படும் ஆச்சிரமவாசியான ரவி என்பவரின் சடலம் தோண்டி எடுக்கப்பட்டது. அவரை திட்டமிட்டுக் கொலை செய்தார் என்றும் சுவாமி பிரேமானந்தா மீது குற்றம் சுமத்தப்பட்டது.

சுவாமி பிரேமானந்தாவினால் பாலியல் பலாத்காரத்துக்கு உட்படுத்தப்பட்டவர் என்று கூறப்படும் ஒரு யுவதி கருவுற்றிருந்த நிலையில் மரபணுச் சோதனை மூலம் அந்த கருவுக்கு சுவாமி பிரேமானந்தாவே காரணம் என்பதும் நீதிமன்றத்தில் உறுதிப்படுத்தப்பட்டது.

இக்கொடூரங்களுக்கு உதவி, ஒத்துழைத்தனர் என்ற அடிப்படையில் ஏனைய மூவருக்கும் சுவாமி பிரோனந்தாவுடன் சேர்த்து 1997 ஓகஸ்ட் 21ஆம் திகதி இரட்டை ஆயுள்தண்டளை பட்டுக்கோட்டை நீதிமன்றினால் விதிக்கப்பட்டது.

சிறைவிதிக்கப்பட்ட கமலானந்தாவின் மனைவியான டாக்டர் சந்திரதேவிக்கு இந்தப் பாலியல் கொடூரங்களுக்கு உள்ளாக்கப்பட்ட பெண்களின் கருக்களை சட்டவிரோதமாகக் கலைத்த குற்றத்துக்காக 39 மாத சிறைவாசமும் 30ஆயிரம் ரூபா அபராதமும் விதிக்கப்பட்டது. அவர் சிறைவாசம் முடித்து தற்போது வெளியே வந்துள்ளார்.

சுவாமி பிரேமானந்தாவுக்கு இரட்டை ஆயுள் சிறைத்தண்டனையுடன் 66 லட்சத்து 40ஆயிரம் ரூபா அபராதமும் விதிக்கப்பட்டது. சுவாமி பிரேமானந்தா சிறையிலேயே மரணமானார். ஏனைய மூவரும் தங்களது 40 ஆண்டு கால சிறைவாசத்தில் 16 ஆண்டுகளைப் பூர்த்தி செய்துள்ளனர்.

அவர்களை விடுவிக்கும்படியே வடக்கு முதலமைச்சர் நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் இப்போது இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை கடிதம் மூலம் வலியுறுத்திக் கேட்டிருக்கின்றார். இந்த விவகாரம் குறித்து பிரபல புதுடில்லி ஊடகம் ஒன்று மின்னஞல்சல் மூலம் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனிடம் விளக்கம் கேட்டதாகவும் அதற்கு பதிலளிக்க அவர் மறுத்துவிட்டார் என்றும் கூறப்படுகின்றது.

Related Posts