Ad Widget

பிரிட்டன் முடிவு: கேமரன் பதவி விலகல், ஐரோப்பிய ஒன்றியத் தலைவர்கள் அதிர்ச்சி

ஐரோப்பிய ஒன்றிய வாக்கெடுப்பில் பிரிட்டிஷ் மக்கள் ஒன்றியத்திலிருந்து விலகவேண்டும் என்று அளித்த தீர்ப்பை அடுத்து, பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கேமரன் தான் பதவி விலகப் போவதாக அறிவித்திருக்கிறார்.

david_cameron

சற்று முன்னர் தனது 10, டௌனிங் வீதி இல்லத்துக்கு வெளியே ஊடகவியலாளர்களிடம் பேசிய டேவிட் கேமரன், எதிர்வரும் அக்டோபரில் தான் பிரதமர் பதவியிலிருந்து விலகப் போவதாக அறிவித்திருக்கிறார்.

ஐரோப்பிய ஒன்றியத்தில் பிரிட்டன் தொடர்ந்து இருக்கவேண்டுமா என்ற கருத்தறியும் வாக்கெடுப்பின் இறுதி முடிவுகள் அறிவிக்கப்பட்டவுடன் , கேமரன் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.

வரும் ஒரு சில மாதங்களுக்கு பிரிட்டனை வழி நடத்தப் போவதாக அவர் தெரிவித்தார்.

இந்தக் கருத்தறியும் வாக்கெடுப்பின்போது டேவிட் கேமரன் , ஐரோப்பிய ஒன்றியத்திலேயே பிரிட்டன் தொடர்ந்து இருக்கவேண்டும் என்று வலியுறுத்தி பிரசாரம் செய்து வந்தார். ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் விலகினால், அதற்கு பொருளாதார மற்றும் பாதுகாப்பு விளைவுகள் இருக்கும் என்றும் அவர் எச்சரித்திருந்தார்.

ஐக்கிய ராஜ்ஜியத்தில் உள்ள இங்கிலாந்தும் , வேல்ஸும் பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேற வேண்டும் என்று வாக்களித்தன; லண்டன், ஸ்காட்லாந்து மற்றும் வட அயர்லாந்து ஆகியவை ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வெளியேறக்கூடாது என்று வாக்களித்தன.

இதேவேளை ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வெளியேற வேண்டும் என்று பிரிட்டனில் நடந்த கருத்தறியும் வாக்கெடுப்பின் முடிவுகள் குறித்து ஐரோப்பிய ஒன்றிய அரசியல் தலைவர்கள் அதிர்ச்சி தெரிவித்திருக்கிறார்கள்.

_uk_referendum

ஐரோப்பிய நாடாளுமன்றத் தலைவர் ,மார்ட்டின் ஷுல்ஸ், இந்த முடிவைத் தான் மதிப்பதாகவும், ஆனால் ஐரோப்பிய ஒன்றியத்தையும் யுரோ நாணயத்தையும் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு தமக்கு இருப்பதாகவும் கூறியிருக்கிறார்.

இது பிரிட்டனுக்கும் ஐரோப்பாவுக்கும் ஒரு சோகமான நாள் என்று ஜெர்மனியின் வெளியுறவு அமைச்சர் , பிராங்க் வால்டர் ஸ்டெயின்மெயர் கூறியிருக்கிறார்.

frank_walter_shteinmaye

ஆனால் பிரன்ஸிலும், நெதர்லாந்திலும் உள்ள தீவிர வலது சாரிக் கட்சிகளின் தலைவர்கள் தங்களது நாடுகளிலிலும், இதே போல கருத்துக்கணிப்புகள் நடத்தப்படவேண்டும் என்று கோரியிருக்கிறார்கள்.

அமெரிக்க அதிபர் ஒபாமாவுக்கு இந்த முடிவு குறித்து தெரியப்படுத்தப்பட்டதாகவும் அமெரிக்க அதிகாரிகள் நிலைமையை கவனித்து வருவதாகவும் வெள்ளை மாளிகைக்காகப் பேசவல்ல அதிகாரி ஒருவர் கூறினார்.

Related Posts