பிரிட்டனில் அகதி அந்தஸ்துப் பெற்றுப் பின்னர் நிரந்தர வதிவிட உரிமைக்கு விண்ணப்பிப்பவர்களின் விண்ணப்பங்களை மீண்டும் உத்தியோகபூர்வ மீள்பரிசீலனைக்கு உட்படுத்தும் புதிய கொள்கை அல்லது நடைமுறை ஒன்றினை உள்துறை அலுவலகம் வெளியிட்டிருக்கிறது.
பிரித்தானிய உள்துறை அலுவலகத்தினால் நேற்றையதினம் வெளியிடப்பட்டுள்ள இந்தப் புதிய கொள்கை அல்லது நடைமுறையின் பிரகாரம் பிரித்தானியாவில் முதன் முதலாக அகதி அந்தஸ்துப்பெற்று ஐந்து வருடங்களின் பின்னர் நிரந்தர வதிவிட உரிமைக்காக விண்ணப்பிப்போரின் அனைவரினதும் கோரிக்கைகளை மீள்பரிசீலனைக்கு உட்படுத்தப்படவிருக்கிறது.
அகதி அந்தஸ்து வழங்கப்பட்டு ஐந்து வருடங்கள் கழிந்தவர்கள் விண்ணப்பிக்கும் பட்சத்தின் அவர்களுக்கான நிரந்தவதிவிட உரிமை அதன் தொடர்ச்சியாக வழங்கப்படும் நடைமுறை ஒன்றே இதுவரை பிரித்தானியாவில் நிலவிவந்தது.
ஆனால் குடிவரவுக் கொள்கைகளில் மேலும் இறுக்கமான நடைமுறைகளை அறிமுகப்படுத்தும் வகையில் நேற்றையதினம் வெளியான இந்தக் கொள்கை அல்லது நடைமுறையின் பிரகாரம், ஏற்கனவே அகதி அந்தஸ்து வழங்கப்பட்டு, அடிப்படையில் அவசியமான ஐந்து வருடங்களைக் கழித்தவர்கள் நிரந்தர வதிவிடக்கோரிக்கைக்கு விண்ணப்பிக்கும்போது, அவர்கள் மீண்டும் சொந்த நாடுகளுக்குத் திருப்பி அனுப்பப்பட்டால் அவர்களுக்கு ஆபத்துக்கள் இன்னமும் இருக்கின்றனவா என்பது குறித்து மீளாய்வு செய்யப்படவிருக்கிறது.
இந்த மீளாய்வு இடம்பெறும்போது குறித்த நாட்டில் அப்போது உள்ள களநிலைமைகளும் கருத்திற்கொள்ளப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இதன் பிரகாரம், பாதுகாப்பு இன்னமும் தேவைப்படுபவர்களுக்கான நிரந்தரவதிவிட உரிமை இயல்பாகவே வழங்கப்படும் என்று அதில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இதுவிடயத்தில், கனதியான அறிவுறுத்தல்களும், வழிகாட்டல்களும் குறித்த விண்ணப்பங்களைக் கையாளும் அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டிருப்பதாகத் உள்துறை அலுவலகம் தெரிவித்திருக்கிறது.
குறிப்பாக, குறித்த நாட்டில் ஒரு கட்சி பதவி நீக்கப்பட்டுப் புதிய கட்சி அமர்த்தப்படுவது அல்லது புதிய அரசு ஒன்று தேர்ந்தெடுக்கப்படுவது மட்டுமே அங்கு திருப்பி அனுப்பப்படும் புகலிடக்கோரிக்கையாளர்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்தாது என்பதனைக் கவனத்திற்கொள்ளவேண்டும் என்று தனது அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ள உள்துறை அலுவலகம், குறித்த நாட்டில் ஏற்படும் மாற்றம் தற்காலிகமானதாக அன்றி, காத்திரமானதாகவும், குறித்த புகலிடக்கோரிக்கையாளர்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்துவதாகவும் அமையவேண்டும் என்றும் தெரிவித்திருக்கிறது.
இந்தப்புதிய நடைமுறை குறித்துக் கருத்துவெளியிட்டுள்ள சட்டவல்லுனர்கள், நடமுறையில் சில மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளபோதிலும், இது இலங்கையிலிருந்து வந்து அகதி அந்தஸ்துப் பெற்றவர்களைப் பொறுத்தவரை நிரந்தவரவிட உரிமை என்பது மீள்பரிசீலனையின் பின்வழங்கப்படும் என்றும் எவரும் புகலிடக் கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டுத் இலங்கைக்குத் திருப்பி அனுப்பப்படுவார்கள் என்ற அச்சம் தமக்கு இல்லையென்றும் தெரிவித்திருக்கிறார்கள்.