பிரபாகரன் தெய்வமாக போற்றப்படுகின்றார் : கோட்டா

தமிழீழ விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரன் தெய்வமாக போற்றப்படுவதாக முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

பிரபாகரனுக்கு எதிராக கருத்து வெளியிடுவோரை சமூக வலைத்தளங்களில் இதுவரை பார்க்க முடியவில்லை எனவும் அது குறித்து கவலை அடைவதாகவும் அவர் கூறியுள்ளார்.

பிரபாகரன் தெய்வம் போல் நடத்தப்படுகின்ற போதிலும் மஹிந்த ராஜபக்ச, ஆட்கொலை புரிந்தவர் எனவும் திருடர் எனவும் கூறப்படுவதாக அவர் கடுமையான விமர்சனம் வெளியிட்டுள்ளார்.

அதேபோன்று இராணுவ வீரர்கள், பாதுகாப்பு செயலாளர் கோட்டாபாய ராஜபக்ச ஆகியோரும் ஆட்கொலை புரிந்தவர்கள் எனவும் திருடர்கள் எனவும் கூறப்படுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அன்று யுத்தக் குற்றங்களில் ஈடுபட்டவர்களே இன்று வெற்றியாளர்களாக மாறியுள்ளதாகவும் மனித உரிமை பாதுகாவலர்களாக இன்று காட்டிக் கொள்ள முயற்சிப்பதாகவும் கோட்டாபய ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.

ஸ்ரீலங்கா தொடர்பான ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் செய்த் ராத் அல் ஹுசைனின் அறிக்கையில் மேலதிகமான அல்லது புதிய கடமைப்படும் விடயங்கள் எதுவும் முன்வைக்கப்படவில்லை என ஸ்ரீலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளது.

தமிழீழ விடுதலைப் புலிகளை அங்கீகரித்தவர்களே இன்று தமிழ் தேசிய கூட்டைமைப்பில் உள்ளதாகவும் இவ்வாறான நபர்களே மனித உரிமைகளை பாதுகாப்பதற்கு தற்போது குரல்கொடுப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பிரித்தானிய படைவீரர்கள் இழைத்த யுத்தக் குற்றங்கள் தொடர்பில் அந்த நாட்டு பிரதமர் பாராமுகமாக இருப்பதாகவும் கோட்டாபய ராஜபக்ச விமர்சனம் வெளியிட்டுள்ளார்.

ஸ்ரீலங்கா விடயத்தில் தேவையற்ற தலையீடுகளை மேற்கொள்வதற்கு பிரித்தானியா முயற்சிப்பதாகவும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கண்டனம் வெளியிட்டுள்ளார்.

நாட்டின் நிலைமைகளை மேலும் மோசமாக்கும் வகையிலான நடவடிக்கைகளை எடுப்பதற்கு பதிலாக, மனித உரிமை நிலைமைகளின் அடிப்படையில் நாட்டின் கண்ணியத்தை உறுதிசெய்யும் வகையில் ஸ்ரீலங்கா பாதுகாப்பு அமைச்சு தனது பங்களிப்பை வழங்க வேண்டும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Related Posts