பிரபாகரனுக்கு நந்திக்கடலில் ஒரு நினைவுத்தூபி அமைக்கப்பட வேண்டும் என்று ஞானசார தேரர் கூறியமை துட்டகைமுனு அன்று கையாண்ட விடயமாகும் என கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் கி.துரைராஜசிங்கம் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு – ஏறாவூர்ப்பற்று சவுக்கடி தமிழ் கிராமத்தில் இடம்பெற்ற தமிழினப் படுகொலையின் 27ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இதை குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்து கருத்து தெரிவித்த அமைச்சர்,
“இரண்டாயிரம் வருடத்துக்கு முன் எல்லாளனுக்கும் துட்டகைமுனுவுக்கும் இடையில் நடந்த போரில் எல்லாளன் தவறி விழுந்தான்.
அவர் துட்டகைமுனுவால் கொல்லப்படவில்லை. ஆனால் அவ்வாறு தவறி விழுந்த எல்லாளனை வாளால் வெட்டவில்லை, எட்டி உதைக்க வில்லை, கடலில் எறியவில்லை, அவரது வீரத்தை மதித்தான், அவரை தலை வணங்கி பொலன்னறுவையில் ஒரு நினைவுத்தூபியை அமைத்தான் துட்டகைமுனு.
இப்பொழுது பொதுபல சேனா இயக்கத்தின் பிக்கு ஒருவர் சொல்லுகின்றார் பிரபாகரனுக்கு நந்திக்கடலில் ஒரு நினைவுத்தூபி அமைக்கப்பட வேண்டும் என்று. இது வரவேற்கத்தக்க விடயம். இது துட்டகைமுனு அன்று கையாண்ட விடயம்.
எவ்வாறு இந்த யுத்தம் நடைபெற்றது? இதற்கு ஆணையிட்டவர் யார்? எந்த வகையில் அந்த ஆணை இருந்தது என்கின்ற விடயங்கள் தொடர்பாக ஆராயப்பட்டு சர்வதேச நியமங்களின் அடிப்படையில் இதற்கு ஒரு முடிவு காணப்படவேண்டும்.
எமது தலைமைத்துவம் ஆளுமை கொண்ட தலைமைத்துவம், உலக நாடுகளினால் அங்கீகரிக்கப்பட்ட தலைமைத்துவம், இந்த நாட்டின் அரசினால் அங்கீகரிக்கப்பட்ட தலைமைத்துவம், இவர்கள் காட்டுகின்ற வழியில் சென்று நாம் ஒரு விடிவை பெற வேண்டும், இழந்த சுதந்திரத்தை நாம் பெற்று வாழ வேண்டும்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.