Ad Widget

பிரதேச சபையின் தன்னிச்சையான செயற்பாட்டுக்கு எதிர்ப்பு

அண்மையில் விடுவிக்கப்பட்ட வலி. வடக்கின் பலாலி தெற்கு வயாவிளான் பகுதியில் உள்ள புனித இந்து மயானத்தினை இல்லாது செய்து, மலச்சுத்திகரிப்பு நிலையம் ஒன்றை அமைக்கும் நடவடிக்கைக்கு, அப் பகுதி மக்கள், நேற்று சனிக்கிழமை (01) எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

நான்கு கிராமசேவையாளர் பிரிவுக்கு உரித்தான மேற்படி பூனையன் காடு இந்து மாயனத்தினை அழித்து வலி. வடக்கு பிரதேச சபை மலச்சுத்திகரிப்பு நிலையம் ஒன்றினை அமைத்து வருகின்றது.

இதற்காக சடலங்கள் எரிக்கப்பட்ட இடத்தில் கல் அரிந்து அதன் புனிதத் தன்மையினை கெடுக்கும் நடவடிக்கையில் ஈடுபடுவதாக அம் மக்கள் தெரிவித்தனர்.

தமது முன்னோர்களின் சடலங்கள் இப் பகுதியிலேயே எரியூட்டப்பட்டதாகவும், இவ்வாறு இந்து மயானத்தில் புனிதத் தன்மையினைக் கெடுக்கும் நடவடிக்கையில் ஈடுபடுவதற்கு ஒரு போதும் அனுமதிக்க முடியாது எனத் தெரிவித்தனர்.

சடலங்களை எரியூட்டும் பகுதியில் மண், மற்றும் கற்கள் பறிக்கப்பட்டதனை மீண்டும் எடுத்து செல்லவேண்டும் என்ற பணியில் இருந்த ஊழியர்களுடன் தர்க்கத்தில் ஈடுபட்டனர்.

மேலும், இம் மயானத்துக்கு அருகிலிருந்த கல்லறைகளையும் பாரிய கனரக வாகனங்கள் மூலம் அழித்து இல்லாதொழித்துள்ளதாக அம் மக்கள் கூறினர்.

அத்துடன், இப் பகுதியில் காணி இல்லாத 120 குடும்பங்களுக்கு தலா 2 பரப்பு என்ற வீதம் காணிகள் பகிர்ந்து கொடுக்கப்பட்டுள்ளன. எனவே, மக்கள் மீள் குடியமர்வதற்கு தயாராகி வரும் இவ் வேளையில் இவ்வாறான திட்டம் இப் பகுதிக்குப் பொருந்தாத ஒன்றாக கருதப்படுகிறது.

மேலும், சுவாசம் சார்ந்த நோய்கள் வருவதுடன், மழைகாலங்களில் நிலத்தடி நீர் பாதிக்கப்படும் தன்மையும் உள்ளதாக கூறப்படுகிறது.

இது தொடர்பில் தெல்லிப்பளைப் பிரதேச செயலரைத் தொடர்பு கொண்டு கேட்ட போது, மக்கள் இத் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவிப்பது அவர்களின் எண்ணத்தை விளக்குகின்றது. மேலும், இத் திட்டத்தினை இவ் இடத்தில் கைவிட்டு வேறு ஓர் இடத்தில் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும். இது தொடர்பில் எழுத்து மூலம் தெரியப்படுத்த வேண்டும் என அவர் தெரிவித்தார்.

Related Posts