Ad Widget

பிரதேச சபைகளின் கீழ் சுகாதாரப் பரிசோதகர்கள்

valy-south-pirethesasabaவடக்கில் 4 பிரதேசசபைகளுக்கு பொதுச் சுகாதார பரிசோதகர்களுக்கான வெற்றிடங்களை உருவாக்கித் தருவோம் என்று யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு இணைத் தலைவர்களினால் வாக்குறுதி கொடுக்கப்பட்டிருந்த நிலையில், அவ்வாறு வெற்றிடங்களை உருவாக்கித்தர முடியாது என்று முகாமைத்துவ சேவைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

வலி.வடக்குப் பிரதேச சபைக்குட்பட்ட பொதுச் சுகாதாரப் பரிசோதகருக்கும் அந்தப் பகுதி சுகாதார வைத்திய அதிகாரிக்கும் இடையிலான மோதலையடுத்து, பொதுச் சுகாதார பரிசோதகர்கள் பிரதேச சபைக்குள் இணைக்கப்படுவது தொடர்பான சர்சை எழுந்தது.

வட மாகாணத்தில் வலி. வடக்கு, வலி.தென் மேற்கு, நல்லூர் மற்றும் கரைச்சி ஆகிய பிரதேச சபைகளில் இணைக்கப்பட்டிருந்த பொதுச் சுகாதார பரிசோதகர்கள், உடனடியாகப் பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்கு மாற்றப்பட்டு, பொதுச் சுகாதார வைத்திய அதிகாரியின் கீழ் பணியாற்ற பணிக்கப்பட்டிருந்தனர்.

இதனையடுத்து வடக்கிலுள்ள பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டிருந்தனர். இரண்டு மாத காலத்துக்கும் மேலாக நீடித்த இந்தப் பணிப்புறக்கணிப்பு, யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் அதன் இணைத் தலைவர்களான வடக்கு முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் மற்றும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆகியோரின் உறுதிமொழியை அடுத்து கைவிடப்பட்டது.

மூன்று தினங்கள் பிரதேச சபைகளிலும், மூன்று தினங்கள் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையிலும் இவர்களை கடமையாற்ற வேண்டும் என்றும், இவர்களது நிர்வாக கடமைகள் பொதுச் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையின் கீழ் இருக்கும் எனவும், வடக்கிலுள்ள சகல பிரதேச சபைகளுக்கும் பொதுச் சுகாதார பரிசோதகர் வெற்றிடங்கள் ஏற்படுத்தித் தரப்படும் எனவும் கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது.

ஆனாலும் கொழும்பில் நேற்று முன்தினம் நடந்த முகாமைத்துவ சேவைகள் திணைக்களத்தின் வெற்றிடங்கள் மீளாய்வுக் கலந்துரையாடலில், பிரதேச சபைகளுக்கு பொதுச் சுகாதார பரிசோதகர்களை இணைக்க முடியாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாநகர சபை மற்றும் நகர சபைகளுக்கே பொதுச் சுகாதார பரிசோதகர்களை இணைக்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Posts