Ad Widget

பிரதமர் வருகையை புறகணிக்கிறது வடமாகாணசபை

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க யாழ்ப்பாணத்தில் இன்று கலந்து கொள்ளும் நிகழ்வில் வடக்கு மாகாண சபையினர் பங்கேற்க மாட்டார்கள் என்று நம்பகரமாக தெரிய வருகின்றது.

வடக்கு மாகாண முதலமைச்சருக்கு உரிய முறையில் அழைப்பு விடுக்கப்படவில்லை. அதையடுத்து வடக்கு மாகாணசபையினர் இந்தத் தீர்மானத்தை எடுத்துள்ளனர் என்று தெரியவருகின்றது.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மூன்று நாள் பயணமாக யாழ்ப்பாணத்திற்கு இன்று வருகின்றார். அவர் யாழ்ப்பாணத்தில் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்கவுள்ளார். காலை 9 மணிக்கு நாகவிகாரை யில் வழிபாடு செய்யும் பிரதமர் ரணில் விக்கிரம சிங்க, அதனைத் தொடர்ந்து வீரசிங்கம் மண்டபத்தில் வைத்து கர்ப்பிணித் தாய்மாருக்கு போசணை உணவுப் பொதி வழங்கும் நிகழ்வில் கலந்து கொள்வார்.

இதன் பின்னர் யாழ்.மாவட்டச் செயலகத்தில் நிகழ்வுகள் நடைபெறவுள்ளன. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்ப்பாணம் – கிளிநொச்சி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களுடனும், புனர்வாழ்வு பெற்ற முன்னாள் போராளிகள், பெண்களைத் தலைமைத்துவமாகக் கொண்ட குடும்பங்கள், மீள்குடியமர்வு தொடர்பிலான சந்திப்புகள் போன்றவை நடைபெறவுள்ளன. மீனவ பிரதிநிதிகளையும் அவர் சந்தித்துப் பேசவுள்ளார்.

மதிய போசனத்தின் பின்னர், பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரிக்குச் செல்லும் பிரதமர் அங்கு சந்திப்புக்களை மேற்கொள்ளவுள்ளார். பின்னர் நல்லை ஆதீன குருமுதல்வரை சந்திப்பார். நல்லூர் ஆலயத்துக்குச் சென்று வழிபாடுகளில் பங்கேற்ற பின்னர், யாழ்.மறை மாவட்ட ஆயர் தோமஸ் சவுந்தர நாயகத்தைச் சந்திக்கவுள்ளார். அதனைத் தொடர்ந்து, தென்னிந்திய திருச்சபையின் பேராயர் டானியல் தியாகராஜாவை சந்திக்கவுள்ளார்.

இறுதியில் முஸ்லிம் மதத் தலைவர்களை பிரதமர் சந்திக்கவுள்ளார். பிரதமர் ரணிலின் வடக்கு நிகழ்ச்சிநிரலில், வடக்கு முதலமைச்சருடன் எந்தவொரு சந்திப்பும் உள்ளடக்கப்படவில்லை. வீரசிங்கம் மண்டபத்தில் இடம்பெறும் நிகழ்வுக்கு கூட முதலமைச்சரை விருந்தினராகவும் அழைக்கவுமில்லை.

கடந்த சில வாரங்களாக முதலமைச்சருக்கும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையில் பனிப்போர் நிலவி வருகின்றது. இந்தியாவின் தந்தி தொலைக்காட்சிக்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வழங்கிய நேர்காணலில், வடக்கு முதலமைச்சர் பொய் சொல்கின்றார் என்றும் அவரை யாழ்ப்பாணத்துக்குச் செல்லும் போது சந்திக்க மாட்டேன் என்றும் குறிப்பிட்டிருந்தார். அதற்கு முதலமைச்சரும் பதிலடி கொடுத்திருந்தார்.

கடந்த 23 ஆம் திகதி ஜனாதிபதி, பிரதமர் கலந்து கொண்ட நிகழ்வில், முதலமைச்சர் கலந்து கொண்டிருந்தாலும், பிரதமரும் – முதலமைச்சரும் நேருக்கு நேர் பேசிக் கொள்ளவில்லை.

இந்தப்பின்னணியில், பிரதமர் ரணிலின் யாழ்ப்பாணப் பயணத்தின் போது முதலமைச்சர் ஒதுக்கப்பட்டுள்ளார் என்று தெரியவருகின்றது. அதனால் வடக்கு மாகாண சபையினர் பிரதமரின் இன்றைய நிகழ்வுகளில் பங்கெடுக்க மாட்டார்கள். ஆனாலும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கெடுப்பார்கள் என்று தெரிவிக்கப்படுகின்றது.

Related Posts