Ad Widget

பிஞ்சுகளின் இரத்தத்தினால் சிவப்பேறிய மண்ணின் மீதே இன்று மாடிக்கட்டடங்கள் – வடக்கு முதல்வர்

கொத்துக் குண்டுகள் மூலமும் எறிகணைகள் மூலமும் எமது பிஞ்சுகள் குலைகுலையாக அறுத்து நிலத்தில் வீழ்த்தப்பட்டு அவர்களின் உடல்களிலிருந்து சிந்திய இரத்தத்தினால் சிவப்பேறிப் போன மண்ணில் தான் இன்று மாடிக்கட்டடங்கள் முளைத்துள்ளன என வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி. விக்கினேஸ்வரன் தெரிவித்தார்.

கிளிநொச்சி மலையாளபுரத்திலுள்ள அன்னை சாரதாதேவி வித்தியாலயத்தின் கட்டடத்திறப்பு விழா நேற்று இடம்பெற்றது. அதில் அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

புதிய கட்டடத்தை திறந்து வைப்பதில் பெருமகிழ்ச்சி அடைகின்றேன். இப்பாடசாலை மாணவர்கள் கிடுகினால் வேயப்பட்ட ஓலைக் கொட்டில்களில் கடந்த 3 ஆண்டுகளாக தமது கல்வி நடவடிக்கைகளை மேற்கொண்டுவந்தனர்.

அவ்வாறு இருந்த போதிலும் அவர்களின் கல்வி முன்னெடுப்புக்கள் எதுவித குறைகளுமின்றி வளர்ச்சியுற்று இன்று 350 ற்கும் மேற்பட்ட பிள்ளைகளையும் 15 ஆசிரியர்களையும் கொண்ட ஒரு பாடசாலையாகத் திகழ்ந்து வருவது பெருமையளிக்கின்றது.

1977ஆம் ஆண்டு மற்றும் 1983ல் நடைபெற்ற இனக்கலவரங்கள் காரணமாக மலையகப்பகுதிகளில் இருந்து இடம் பெயர்ந்து வந்த மிகக் கூடுதலான மக்கள் கிளிநொச்சிப் பகுதியில் அமைந்துள்ள பாரதிபுரம், மலையாளபுரம், கிருஷ்ணபுரம், ஆகிய பகுதிகளில் குடியமர்ந்தனர்.

இவர்களுடைய பிள்ளைகளின் கல்வி நடவடிக்கைகளுக்காகப் பாரதிபுரத்திலே பாரதி வித்தியாலயம் என்கின்ற பாடசாலை ஆரம்பிக்கப்பட்டது.

எனினும் 1000 பாடசாலைத் திட்டத்தின் கீழ் அதனுடைய ஆரம்பப்பிரிவு தனியானவொரு அலகாக இயங்க வேண்டிய கட்டாயச் சூழ்நிலைக்கு உள்ளாக்கப்பட்டது.

ஆரம்பப் பிரிவைத் தனியலகாக வேறொரு இடத்தில் ஆரம்பிக்கும்படி அதிகாரிகளின் தொடரழுத்தங்கள் இருந்து வந்தன.

இராணுவக் கெடுபிடிகள் போன்ற பல சிரமங்களுக்கு மத்தியில் அக்காலத்தில் அதிபராக இருந்த திரு.இராஜேந்தின் அவர்களின் கடுமையான முயற்சியின் காரணமாக 5 ஏக்கர் காணியை இப்பாடசாலைக்காகப் பெற்றுக் கொண்டனர்.

அதில் 100 அடி நீளம் 25 அடி அகலக் கொட்டில் ஒன்றையும் அதே போன்று 50-25 அளவிலான இன்னொரு கொட்டிலையும் அமைத்து இப்பாடசாலை பாரதி ஆரம்பப் பாடசாலை என்ற பெயருடன் ஆரம்பிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

எனினும் ஏற்கனவே பாரதி வித்தியாலயம் என்கின்ற பாடசாலை இயங்கிக் கொண்டிருந்தமையால் இப் பெயரில் ஒரு ஆரம்பப் பாடசாலையைத் தொடங்க முடியாது என அறிவுறுத்தப்பட்டது.

அதனையடுத்து அன்னை சாரதாதேவி ஆரம்பப் பாடசாலை என்ற பெயரில் இப்பாடசாலையைப் பதிவு செய்யப்பட்டது.

இன்று நல்ல முறையில் இப்பாடசாலை இயங்கி வருகின்றமை இது இங்குள்ள ஆசிரியர்களினதும் அதிபரினதும் கடுமையான உழைப்பையும் ஊக்கத்தையும் எடுத்துக் காட்டுகின்றது.

நான் இப்பகுதிக்குச் சுமார் ஒரு வருடத்திற்கு முன்னர் குறைகேள் கூட்டமொன்றில் கலந்து கொள்வதற்காக வந்திருந்தேன். அப்போது இப்பாடசாலை பற்றிய மிகவேதனைக்குரிய குறிப்பொன்றை இப்பாடசாலையின் அதிபர் எமக்கு வழங்கி இருந்தார்.

2006 – 2009 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் இப்பகுதியில் சுமார் 120 பாடசாலைப் பிள்ளைகள் கொத்துக் குண்டுகள் மூலமாகவும் எறிகணைகள் மூலமாகவும் கொன்று குவிக்கப்பட்டனர் என்றும் 200 பிள்ளைகள் தாய் அல்லது தகப்பனை அல்லது இருவரையும் இழந்த மாணவர்களா உள்ளனர் எனவும் 30 பிள்ளைகளின் நிலைமை என்னவென்று இதுவரை தெரியாது என்றும் கூறியிருந்தார்.

இவ்வாறு கொத்துக் குண்டுகள் மூலமும் எறிகணைகள் மூலமும் எமது பிஞ்சுகள் குலைகுலையாக அறுத்து நிலத்தில் வீழ்த்தப்பட்டு அவர்களின் உடல்களில் இருந்து சிந்திய இரத்தத்தினால் சிவப்பேறிய மண்ணில்த்தான் இன்று 150 அடி நீளத்தையும் 25 அடி அகலத்தையும் கொண்ட 6 வகுப்பறைகள், ஒரு காரியாலய அறை, ஒரு களஞ்சிய அறை என்பனவற்றைக் கொண்ட இந்தக் கட்டடத் தொகுதி மிக அழகாக 6.2 மில்லியன் ரூபா செலவில் மிக நேர்த்தியாக அமைக்கப்பட்டு இருக்கின்றது.

இறந்து போன அந்தச் சிறார்களை இவ்விடத்தில் மனதில் நிறுத்தி அவர்கள் ஆத்மா சாந்தியடைய வேண்டும் என்று மனதுள் பிரார்த்திப்போமாக!

காணாமல் போனவர்கள் இன்னும் உயிரோடிருந்தால் கல்லூரி அதிபருடன் தொடர்பு கொள்ள வேண்டும் என்று அவர்களிடம் ஒரு கோரிக்கையை விடுவோமாக!

இப்பாடசாலை ஒரு அழகிய கட்டிடத் தொகுதியைக் கொண்டுள்ள போதிலும் கழிப்பறைகள் எதுவும் இங்கு அமைக்கப்பட்டிருப்பதாகத் தெரியவில்லை. இது மிகவும் பாரியதொரு குறைபாடாக நான் கருதுகின்றேன்.

உரியவர்கள் இவ்விடயத்தில் கூடிய கவனம் செலுத்தி சில கழிப்பறைகளை இங்கு அமைப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

Related Posts