Ad Widget

பாலியாற்று விவசாயிகளுக்கு இலவசமாக விதைநெல் விநியோகம்

வடக்கு மாகாணசபையின் ஒரு வருட நிறைவையொட்டி மன்னார் பாலியாற்று விவசாயிகளுக்கு வடமாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் இலவசமாக விதைநெல்லை வழங்கிவைத்துள்ளார்.

இதற்கான நிகழ்ச்சி இன்று வெள்ளிக்கிழமை (10.10.2014) வெள்ளாங்குளம் பொதுநோக்கு மண்டபத்தில் பிரதி விவசாயப் பணிப்பாளர் பொ.அற்புதச்சந்திரன் தலைமையில் நடைபெற்றுள்ளது.

மன்னார் மாவட்டத்தில் ஏறத்தாழ 20,000 ஹெக்டயர் பரப்பளவில் நெற்செய்கை மேற்கொள்ளப்பட்டுவருகிறது. எனினும் இந்த வருடம் நிலவிய கடும் வரட்சி காரணமாக நெல் உற்பத்தி வெகுவாகப் பாதிக்கப்பட்ட மன்னார் மாவட்டத்தில் விதைநெல்லுக்குக் கடுமையான தட்டுப்பாடு நிலவிவருகிறது. இதனைக் கருத்திற்கொண்டு, மானாவாரிச் செய்கையாக புழுதி விதைப்பை மேற்கொண்டுவரும் பாலியாற்று விவசாயிகளுக்கு வடமாகாணசபையின் ஓராண்டு நிறைவையொட்டி வடமாகாண விவசாய அமைச்சின் பிரமாண அடிப்படையிலான நன்கொடை நிதியிலிருந்து 3.5 இலட்சம் ரூபா பெறுமதியில் 250 புசல் BG358 ரக விதைநெல் கொள்வனவு செய்யப்பட்டு விநியோகிக்கப்பட்டுள்ளது.

விதைநெல் வழங்கிவைக்கப்பட்டதன் பின்னர் பாலியாற்றின் உழுது பண்படுத்தப்பட்ட வயல் நிலத்தில் அமைச்சர் பொ.ஐங்கரநேசன் சம்பிரதாயபூர்வமாக புழுதி விதைப்பையும் ஆரம்பித்துவைத்துள்ளார்.

இந்நிகழ்ச்சியில் வடமாகாண விவசாய அமைச்சின் செயலாளர் யு.எல்.எம் ஹால்தீன், மாகாண விவசாயப் பணிப்பாளர் சி.சிவகுமார், விவசாயப்போதனாசிரியர் ஜெ.தே.மிராண்டா, பாடவிதான உத்தியோகத்தர் பிராங்போட் உதயச்சந்திரன், பாலியாறு விவசாய அமைப்பின் தலைவர் சி.திருஞானமூர்த்தி ஆகியோரும் பாலியாற்றின் விவசாயக் குடும்பங்களைச் சேர்ந்தவர்களும் கலந்துகொண்டிருந்தார்கள்.

2

3

5

9

10

Related Posts