Ad Widget

பாலியல் குற்றம் புரிபவர்களை காப்பாற்ற முயற்சிக்க வேண்டாம்!

பாலியல் குற்றங்கள் ஆபத்தானவை, பாலியல் வன்புணர்வு புரிபவர்களை காப்பாற்ற முயற்சிக்க வேண்டாமென, யாழ் மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் கல்விச் சமூகத்தினரிடம் வேண்டுகோள்விடுத்துள்ளார்.

யாழ் மாவட்டத்தில் மாணவர்கள் மீதான குற்றச்செயல்கள் குறித்து சட்ட ரீதியான நீதி கொள்கை விடயங்களை அதிபர்களுக்கு தெளிவுபடுத்தும் கலந்துரையாடல் ஒன்று, நேற்று திங்கட்கிழமை நடைபெற்றது.

அம் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற இந்த கலந்துரையாடலில், கலந்துகொண்டு, சட்டம் பற்றி விளக்கமளிக்கும் போதே, இளஞ்செழியன் இவ்வாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அவர் மேலும் கூறியதாவது,

யாரையும் குற்றம் காண்பதற்காக இந்த கலந்துரையாடல் நடைபெறவில்லை. அதிபர்கள், ஆசிரியர்கள் எவரெஸ்ட் சிகரத்தில் வைத்து வணங்க வேண்டியவர்கள்.

ஆசிரியர் மீது குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டால், உடனடியாக வாக்குமூலம் பதிவு செய்யலாம் அல்லது வாக்குமூலம் பதிவு செய்யாது, உடனடியாக பாதிக்கப்பட்டவரின் பெற்றோருக்கு தெரியப்படுத்தி பின்னர், பெலிஸாருக்கு அறிவிக்க வேண்டும்.

குற்றச் செயல்களை சமாதானம் செய்து வைக்க முடியாது. பாலியல் வன்புணர்வு குற்றங்களில், பாடசாலை பழைய மாணவர் சங்கங்களோ, அபிவிருத்தி சங்கங்களோ தலையிடக் கூடாது.

பழைய மாணவர் சங்கம் மற்றும் அபிவிருத்தி சங்கங்களின் கருத்துக்களை மாணவர்கள் விடயத்தில் கிரகிக்க வேண்டாமென அவர் இதன்போது வலியுறுத்தினார்.

மேலும், மாணவர்களுக்கும் அபிவிருத்தி குழுவினருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அபிவிருத்திச் சங்கத்தினர் அபிவிருத்தி பற்றியே சிந்திக்க வேண்டுமே தவிர, மாணவர்களின் ஒழுங்க விழுமியங்களில் தலையிட வேண்டிய அவசியம் இல்லை.

பாலியல் வண்புணர்வு குறித்து மாணவர்களினால் முறையிடப்பட்டால், நிர்வாக ரீதியாக கல்விப் பணிப்பாளருக்கும், கடமையின் நிமித்தம் பொலிஸாருக்கும் தெரிவிக்க வேண்டிய பொறுப்பு இருக்கின்றது.

எதிர்காலத்தில் இவ்வாறு அதிபர்கள் செய்யத் தவறினால், சாட்சியங்களை மறைத்த குற்றச்சாட்டில் நீதிமன்றிற்கு விசாரணைக்கு அழைக்கப்படுவீர்கள்.

பாலியல் வன்புணர்வு குற்றம் ஆபத்தானவை. அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் பாலியல் வன்புணர்வு குற்றம் செய்பவர்கள் அல்ல. ஆனால், 5 வீதமானவர்கள் குற்றம் செய்கின்றார்கள். அந்த 5 வீதமானவர்களையும் இல்லாது ஒழிக்க வேண்டியவர்கள் அதிபர்கள், ஆசிரியர்கள் கல்வி உயர் அதிகாரிகள் என்பதனை மறவாதீர்கள்.

பாலியல் வன்புணர்வு குற்றம் செய்பவர்களை காப்பாற்றுவதற்கு முயற்சிக்க வேண்டாம். அவ்வாறு பாதுகாப்பது சட்ட முரணான செயற்பாடு, பாடசாலைக்கு பிள்ளை வருகின்றார் என்றால், பாதுகாப்பு நீங்கள் தான். பாலியல் வன்புணர்வு குற்றங்களை தடுப்பதற்கு பாடசாலை மட்டங்களில் அதிபர்கள் சட்ட நடைமுறைகளை கையாள வேண்டுமென்றும் கூறினார்.

Related Posts