Ad Widget

பாலியல் குற்றச்சாட்டில் அதிபர் கைது!!

கிளிநொச்சி பன்னங்கண்டி பாடசாலையின் அதிபர் தனது பாடசாலையில் கல்வி பயிலும் தரம் ஒன்பது மாணவியுடன் பாலியல் ரீதியாக தவறாக நடக்க முயன்றதாக தெரிவித்து கிளிநொச்சி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த சனிக்கிழமை பாடசாலைக்கு சென்ற அதிபர் குறித்த மாணவியின் மூத்த சகோதரியை பாடசாலைக்கு வருமாறு அவர் பொறுப்பாக இருந்து நடத்துகின்ற தொண்டு நிறுவனம் ஒன்றின் மாலை நேர வகுப்பு தொடர்பில் பேச வேண்டும் என்று அழைப்பு விடுத்திருக்கின்றார்.

ஆனால் குறித்த மாணவியின் மூத்த சகோதரி யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்ள சென்றுள்ளமையினால் அந்த தகவலை அதிபருக்கு தெரியப்படுத்த மாணவி பாடசாலைக்கு சென்றுள்ளார்.

இதன் போதே தனிமையில் இருந்த அதிபர் குறித்த ஒன்பதாம் ஆண்டு மாணவி மீது தவறாக நடக்க முற்பட்டுள்ளார்.

இதனால் மாணவி குழப்பமடைந்து அதிபரின் பிடியிலிருந்து விடுப்பட்டு வெளியேறிய போது 1500 பணத்தை வழங்கி வெளியில் தகவலை கூற வேண்டாம் என்றும் தெரிவித்துள்ளார்.

ஆனால் மாணவி பணத்தை பெற்றுக் கொள்ளவில்லை. இதேவேளை நேற்று செவ்வாய்கிழமை விடுமுறை நாளன்றும் அதே பாடசாலையில் கல்வி பயிலும் தரம் ஏழு மாணவன் ஒருவரிடம் குறித்த மாணவியை பாடசாலைக்கு வருமாறு அதிபர் தகவல் அனுப்பியுள்ளார். ஆனால் மாணவி செல்லவில்லை.

இந்த நிலையில் குறித்த மாணவி சக மாணவிகளிடம் அதிபர் இவ்வாறு தன்னோடு நடந்து கொண்டதாகவும் எனவே உங்ளையும் அதிபர் அழைத்தால் செல்ல வேண்டாம் என்றும் கூறியுள்ளார். அத்தோடு நேற்று செவ்வாய்க்கிழமை தனது பெற்றோர்களிடம் காரணம் தெரிவிக்காமல் இனி பாடசாலைக்கு செல்லமாட்டேன் எனத் தெரிவித்துள்ளார்.

இதன் போதே குறித்த சம்பவம் பற்றி மாணவியின் நண்பி ஒருவரினால் பாதிக்கப்பட்ட மாணவியின் பெற்றோரிடம் தகவல் தெரிவிக்கப்பட்டமையினை அடுத்து இன்று புதன்கிழமை பாடசாலைக்கு முன்பாக பெற்றோர்கள் ஒன்று திரண்டதோடு பொலிஸாருக்கும் தகவல் அனுப்பட்டது.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த கிளிநொச்சி பொலிஸார் ஆரம்ப கட்ட விசாரணைகளுக்குப் பின்னர் பாடசாலை அதிபரான சந்தேக நபர் நாகராசா உதயகுமார் என்பவரை கைது செய்துள்ளனர்.

மேலும் கிளிநொச்சி வலயக்கல்விப் பணிப்பாளர் க.முருகவேல் கரைச்சி கோட்டக் கல்வி அதிகாரி அமிர்தலிங்கம் ஆகியோரும் பாடசாலைக்கு விஜயம் செய்து நிலைமைகளை ஆராய்ந்துள்ளனர்.

மலையகத்தில் இருந்து வன்செயல்களால் பாதிக்கப்பட்டு வந்த மக்களே பன்னங்கண்டி பிரதேசத்தில் வாழ்கின்றனர். இவர்கள் இன்றும் மிக ஏழைகளாக வாழ்ந்து வரும் நிலையில் பாடசாலையின் சில ஆசிரியர்கள் இந்த சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த மக்களை நோக்கி ஸ்டேட் (தோட்டக்காட்டு மக்கள்) மக்கள் நாகரீகம் இல்லாதவர்கள் என்று மிக மோசமாக பிரதேசவாதம் பேசியுள்ளமையும் பெரும் கண்டனத்திற்குள்ளாகியுள்ளது.​

Related Posts