Ad Widget

பாலச்சந்திரனுடன் நின்ற என் மகனைக் காணவில்லை! ஆணைக்குழு முன் தந்தையார் கதறல்!!

“வன்னியில் 2009ஆம் ஆண்டு இறுதிப் போர் நடைபெற்றபோது எனது மகன் ஐங்கரன், விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் இளைய மகன் பாலச்சந்திரனுடன் நின்றார் எனவும், 2009 ஆம் ஆண்டு மே மாதம் 18 ஆம் திகதி பாலச்சந்திரனுடன் அவரை இராணுவத்தினர் கைதுசெய்தனர் என்றும் நேரில் கண்டவர்கள் என்னிடம் கூறினர். ஆனால், பாலச்சந்திரன் இராணுவத்தினரால் சுட்டுக் கொலைசெய்யப்பட்ட புகைப்படங்கள் வெளியாகியிருந்தன. அதில் இளைஞர்கள் சிலரின் சடலங்களும் அருகில் இருந்தன. எனினும், அவற்றில் எனது மகன் இருப்பானோ என்று பார்த்தேன். அதில் எனது மகனைக் காணவில்லை. எனது மகன் எங்கே? அவனை மீட்டுத் தாருங்கள்.”

– இவ்வாறு ஜனாதிபதி ஆணைக்குழு முன் கதறியழுதவாறு சாட்சியமளித்தார் காணாமல்போகச் செய்யப்பட்ட ஐங்கரனின் தந்தை மார்க்கண்டு அருளானந்தம்

காணாமல்போகச் செய்யப்பட்டோரைக் கண்டறியும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் அமர்வு தெல்லிப்பழை பிரதேச செயலகத்தில் நேற்று நடைபெற்றது. அதில் சாட்சியமளிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“எனது மகன் 2002ஆம் ஆண்டு விடுதலைப் புலிகள் அமைப்பில் இணைந்து, கேணல் கடாபியின் அனைத்துலக தொடர்பாடல் பிரிவில் இருந்தார். 2006ஆம் ஆண்டு காலப்பகுதியில் எமது வீட்டுக்கு இராணுவச் சீருடையுடன் வந்திருந்த ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியைச் (ஈ.பி.டி.பி.) சேர்ந்தவர்கள், என்னைத் துப்பாக்கி முனையில் மிரட்டி என் மீது தாக்குதல் நடத்தினர்.

இது தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யச் சென்றபோது, தாங்கள் சிறைச்சாலையில் வந்து தஞ்சமடையவேண்டும் என்று அவர்கள் எனக்குக் கூறினர். சிறையில் இருப்பது எனக்கு விருப்பமின்மையால், நாங்கள் குடும்பமாக தலைமறைவாக வாழத் தொடங்கினோம்.

இந்நிலையில், 2009ஆம் ஆண்டு இறுதிப் போர் நடைபெற்ற போது எனது மகன் பாலச்சந்திரனுடன் நின்றார் எனவும், 2009ஆம் ஆண்டு மே மாதம் 18ஆம் திகதி பாலச்சந்திரனுடன் அவரை இராணுவத்தினர் கைது செய்தனர் என்றும் நேரில் கண்டவர்கள் என்னிடம் கூறினர்.

ஆனால், பாலச்சந்திரன் இராணுவத்தினரால் சுட்டுக் கொலைசெய்யப்பட்ட புகைப்படங்கள் வெளியாகியிருந்தன. அதில் இளைஞர்கள் சிலரின் சடலங்களும் அருகில் இருந்தன. எனினும், அவற்றில் எனது மகன் இருப்பானோ என்று பார்த்தேன். அதில் எனது மகனைக் காணவில்லை. எனது மகன் எங்கே? அவனை மீட்டுத் தாருங்கள்” – என்று கதறியழுதார்.

Related Posts