Ad Widget

பாதுகாப்பு சேவை ஒப்பந்தங்கள்: வட மாகாண சபை முறைகேடு!

வடக்கு மாகாண சபையின் சில அமைச்சுக்களின் கீழ் சுமார் ஒன்பது கோடி ரூபா பெறுமதியான பாதுகாப்பு மற்றும் துப்புரவு சேவைகளை வழங்குவதில் ஒழுங்கீனம் இடம்பெற்றிருப்பதாகத் தெரிவித்து தனியார் பாதுகாப்பு சேவை நிறுவனம் ஒன்று நீதிமன்றுக்குச் சென்றிருக்கின்றது.

north-provincial-vadakku-npc

வடக்கு மாகாண சுகாதார அமைச்சின் கீழ் சுமார் 3 கோடி 35 லட்சம் ரூபா பெறுமதியான ஒப்பந்தமும் – வடக்கு கல்வி அமைச்சின் கீழ் சுமார் 5 கோடி 25 லட்சம் ரூபா பெறுமதியான ஒப்பந்தமும் வழங்குவதிலேயே ஒழுங்கீனமும் முறைகேடுகளும், நீதிக்குப் புறம்பான நடைமுறைகளும் இடம்பெற்றிருக்கின்றன என யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ‘கோல்டன் ஈகிள்’ பாதுகாப்பு சேவை நிறுவனம், யாழ்ப்பாணம் மேல்நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்வதற்கான ஒழுங்குகளை முன்னெடுத்துள்ளது.

வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், வடக்கு மாகாண சுகாதார சேவைகள் அமைச்சர், வடக்கு சுகாதார அமைச்சின் செயலாளர், வடக்கு மாகாண ஆளுநர், வடக்கு மாகாண முதலமைச்சர் ஆகியோரை எதிர்மனுதாரர்களாகக் குறிப்பிட்டு உறுதிகேள் எழுத்தாணை, ஆணையீட்டு எழுத்தாணை ஆகியவற்றுக்கான் விண்ணப்பம் அடங்கிய முதலாவது வழக்கு ஏற்கனவே தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்கை ஏற்றுக்கொண்டுள்ள யாழ். மேல்நீதிமன்றம் மேற்படி வழக்கில் குறிப்பிடப்பட்டுள்ள தரப்புக்கு ஒப்பந்தம் வழங்கியமைக்கு எதிரான இடைநிறுத்திவைக்கும் கட்டளை ஒன்றைப் பிறப்பிப்பது குறித்து எதிர்வரும் 6ஆம் திகதி விசாரணை நடத்துவதற்கும் தீர்மானித்திருக்கின்றது.

இதேவேளை, வடக்கு கல்வி அமைச்சினால் வழங்கப்பட்டுள்ள ஒப்பந்தத்துக்கு எதிரான தமது வழக்கு அடுத்த வார முற்பகுதியில் தாக்கல் செய்யப்படவிருக்கின்றது என்ற மேற்படி பாதுகாப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.

வடக்கு மாகாண சபையின் முதலமைச்சர் அலுவலகமும், பிற அமைச்சுகளும் ஓர் அடிப்படையில், நியாயமானமுறையில் இத்தகைய ஒப்பந்தங்களை வழங்க, மாகாண சபையின் கீழ் இயங்கும் வேறு சில அமைச்சுகளும் பிரிவுகளும் ஒன்றுக்கொன்று முரணான – தவறான – விதிமுறைகளை மேற்கோள்காட்டி ஒப்பந்தங்களை தவறான முறையில் – நீதிக்குப் புறம்பான வகையில் – தம் விருப்புக்கேற்ப வழங்குகின்றன என மேற்படி பாதுகாப்புச் சேவை நிறுவனம் குற்றஞ்சுமத்தியுள்ளது.

Related Posts