Ad Widget

பாதிக்கப்பட்ட மக்களை வைத்து சூதாடும் அரசியல் வாதிகளுக்கு எமது பண்பாடுகள் தெரியுமா?;-பேராசிரியர் சிவநாதன்

sivanathanவடக்கில் உள்ள மக்கள் யாரும் ஏழைகள் அல்ல அவர்கள் வாழ்ந்த நிலமும் அவர்களைச் சார்ந்த கடலும் அவர்களுக்கு உரியது. அரசியல் அதிகாரம் கொண்டவர்கள் யாரும் அவர்களுக்குரியவற்றை பறித்துவிட முடியாது அவ்வாறு பறிப்பது ஜனநாயகமும் அல்ல அரசியல் சூதாட்டம் செய்பவர்கள் அவர்களைப் பகடைக்காயாக பாவிக்கப் பார்க்கின்றனர் என யாழ்.பல்கலைக்கழக கலைப்பீட பீடாதிபதி வி.பி.சிவநாதன் தெரிவித்தார்.

தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்தின் ஏற்பாட்டில் இடம்பெயர்ந்து நலன்புரி நிலையங்களில் வாழும் பாடசாலை மாணவர்கள் 650 பேருக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு யாழ்ப்பாணம் மருதனார்மடம் விவசாயக் கல்லூரியில் நேற்று இடம்பெற்றது. இதில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அவர் அங்கு மேலும் தெரிவித்ததாவது,

தெற்கில் இருந்து வடக்கிற்கு வருகின்ற அரசியல்வாதிகள் ஏழைமக்கள் , ஒடுக்கப்பட்டுள்ளவர்கள், இடம்பெயர்ந்தவர்களை வைத்து சூதாடுகின்றனர். அவர்களுக்கு அது ஒரு விளையாட்டாக அமையலாம் ஆனாலும் இதில் பாதிக்கப்படுபவர்கள் எமது மக்கள் தான்.

ஆனாலும் தெற்கில் இருந்து வந்து எமது மக்களுக்காக சேவையினை வழங்கும் தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கம் போன்ற அமைப்புக்கள் வரவேற்கப்பட வேண்டியவை.

வடக்கு கிழக்கில் உள்ள மீனவர்கள் மற்றும் பாதிக்கப்பட்ட குடும்பங்களுடைய நிலைகளை ஏற்கனவே அறிந்திருந்தாலும் நேரடியாக வந்து பார்ப்பதன் ஊடாக சிறுவர்கள் கல்வி கற்கும் சந்தர்ப்பம், விளையாடும் சந்தர்ப்பம், தமது வீடுகளில் இருக்கும் சந்தர்ப்பம் மற்றும் நல்ல சூழலில் வாழும் சந்தர்ப்பம் ஆகியவற்றை இழந்து இருப்பது உறுதிப்படுத்தப்படும்.

மக்களது பிரச்சினைகளை சொன்னால் இதற்கு முன்னர் அரசியலாகவே பேசப்பட்டது. ஆனால் அது தற்போது யதார்த்தமாக காணப்படுகின்றது.

எனவே எல்லோருக்கும் அரசியல் உரிமை வேண்டும் அவர்களுக்கு வழங்கப்படுகின்ற உரிமைகள் வழங்கப்பட்டால் தங்களைத் தாங்களே வளர்த்துக் கொள்ளும் வல்லமையினைப் பெற முடியும். உரிமை இல்லாதவரைக்கும் தெற்கின் முதலாளிகளும் இந்தியாவின் முதலாளிகளும் தான் வடக்கினை ஆழ்வார்கள்.

எனவே வடக்கில் வாழும் மக்கள் யாரும் ஏழைகள் கிடையாது. அவர்களது நிலமும் அவர்களுக்கான கடலும் அவர்களுக்கு உரியது. அரசியல் அதிகாரம் கொண்டவர்கள் யாரும் பறித்து விடவும் முடியாது.

அவ்வாறு பறித்து செல்வது என்பது ஜனநாயகமும் அல்ல. இலங்கையில் உள்ள அனைவருக்கும் ஊரும் உண்டு கிராமமும் உண்டு. ஆனாலும் இந்தக் குழந்தைகளை பார்த்து உங்கள் ஊர் எது? உங்கள் கிராமம் எது? என்று கேட்டால் நாங்கள் நலன்புரி நிலையங்களில் வாழ்கிறவர்கள் என்று கூறுவதா அல்லது அகதிகள் என்று கூறுவதா இவர்கள் ஊரும் இல்லாத கிராமமும் இல்லாத அடையாளம் இல்லாதவர்களாகவே மாற்றப்படுகின்றனர்.

சூதாட்டம் தெரிந்த அரசியல்வாதிகளுக்கு தந்தையும் தாயும் வாழ்ந்த பூர்வீகமான நிலம், எமது மொழி , எமது பண்பாடு , எமது அறம், எமது வரலாறு எங்கே தெரியப்போகின்றது. இவர்கள் அரசியல் எனும் சூதாட்டத்தினை ஆடி பணம் உழைக்க மட்டுமே தெரிநிதவர்கள்.

அடுத்து வடக்கின் வசந்தம் திட்டத்தின் ஊடாக நன்மை அடைபவர்கள் யார் வடக்கின் வசந்தம் என்பதில் வீதிகள் போடப்பட்டதே தவிர வடக்கு மக்கள் பயணடைந்தார்களா இல்லை இதில் பயன்பெற்றவர்கள் அரசியல் வாதிகள் தான்.

என்னைப் பொறுத்தவரை இந்தப் பெரு வீதிகள் மிகவிரைவாக கொழும்பில் இருந்து இங்கு வரும் முதலாளிகள் எமது சந்தையில் பல இலட்சம் ரூபாக்களை அள்ளிக்கொண்டு செல்லும் பாதையாகவே உள்ளதே தவிர இது இங்குள்ள மக்களுக்கு பொருளாதாரத்தினை அள்ளிக்கொடுக்கும் பாதையல்ல எமது வாய்ப்புக்களை அழிக்கின்ற பாதையாகவே அமைவதுடன் தெற்கிலிருந்து கொண்டுவரப்படும் பணம் அங்கேயே திரும்பி செல்கின்றது.

எனவே எமது சுபீட்சமான எதிர்காலத்தைப் பெறுவதற்கு அனைவரும் ஒன்று திரண்டு போராட வேண்டும். நாங்கள் பட்ட பாடுகள் இந்த சிறுவர்களுக்கு தெரியாது. நாங்கள் பட்ட பாடுகளை இந்த சிறுவர்கள் அனைவரும் விளங்கிக் கொண்டால் தான் நல்ல மனிதர்களாக நல்ல இதயம் கொண்டவர்களாக எதிர்காலத்தில் இருக்க முடியும் என்றார்.

Related Posts