Ad Widget

பாதிக்கப்பட்ட இடங்களுக்கு குடிநீர் தருவதால் மட்டும் பிரச்சனையை தீர்க்க முடியாது – பாலகுமரன்

சுன்னாகம் பகுதியில் கழிவு எண்ணெய்யால் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு குடிநீர் தருவதால் மட்டும் பிரச்சினையை தீர்த்துவிட முடியாது.

குடிநீரை விட உணவுச்சங்கிலி மூலம் தான் பாதிப்புக்கள் ஏற்பட வாய்புக்கள் அதிகம் உள்ளது என யாழ். மருத்துவ பீட பீடாதிபதி ச.பாலகுமரன், சனிக்கிழமை (24) தெரிவித்தார்.

சுன்னாகம் சிவன் கோவில் திருமண மண்டபத்தில் சனிக்கிழமை (24) மதியம் சுற்றுச்சூழல் அமையத்தின் ஏற்பாட்டில் விசேட ஊடகவியலாளர் சந்திப்பு நடைபெற்றது.

இதில் கலந்து கொண்டு அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

சுன்னாகம் பகுதியில் 150 கிணறுகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் 109 கிணறுகளில் கழிவு எண்ணெய் கலந்திருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இது பல இடங்களில் விஸ்தரிக்கப்படும் தன்மை காணப்படுகின்றது.

வலிகாமம் நீர்ப்படுக்கையில் கழிவொயில் கலந்த குடிநீர் மக்களை சென்றடைய வாய்ப்பு உள்ளது.

அத்துடன் இது விவசாயம் செய்யும் நிலவளம் உள்ள பிரதேசம். உணவுச்சங்கிலி மூலம் இந்த கழிவு எண்ணெயில் இருக்கும் ஐதரோகாபன், பார உலோகங்கள் மக்களையும் மிருகங்களையும் அடைய வாய்ப்பு உள்ளது.

விவசாய உற்பத்தி பொருட்கள் யாழ் பிரதேச மக்களுக்கு மட்டுமல்ல அனைத்து பிரதேச மக்களுக்கும் கொண்டு செல்லப்படுகிறது.

இதனால் புற்று நோய், இரத்தச்சோகை, நரம்புமண்டல பாதிப்பு, சிறுநீரக பாதிப்பு, குறைபாடு உள்ள பிள்ளைகள் பிறப்பு என பல பாதிப்புக்கள் ஏற்படும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றது.

வேறு நாடுகளில் இவ்வாறான பாதிப்புக்கள் நிரூபிக்கப்பட்டுள்ளன. எனவே முதற் கட்டமாக நிலப்படுக்கையை உரிய முறையில் சுத்தம் செய்ய வேண்டும். நீரோட்டத்தில் கழிவொயில் எங்கு கலந்துள்ளது என்பதைக் கண்டறிந்து அதை அகற்ற வேண்டும்.

அவ்வாறு சுத்தம் செய்த பின்னர்தான் குடிநீர் பாவனை, விவசாய செய்கை என்பன மேற்கொள்ள முடியும் என்று எதிர்வு கூறப்படுகிறது. இன்னும் முடிவாகவில்லை.

மருத்துவபீடம் என்ற வகையில் எமக்கு பொறுப்பு உள்ளது. எனவே இந்த பிரச்சனை தொடர்பாக நீண்டகாலமாக விரிவாக ஆராய்ந்து முன்மொழிவுகளை வைத்துள்ளோம் சில காரணங்களால் அதை முன்னெடுத்துச்செல்ல முடியவில்லை.

ஆனால் இப்போது அனைவரின் ஆதரவுடனும் கூடிய அளவு பாதிக்கப்பட்ட பிரதேசங்களை கண்டறிந்து அங்கு இருப்பவர்களுக்கு நோய்த்தாக்கம் இரத்தச்சோகை எவ்வாறு இருக்கின்றது, பீனோலின் அளவு எவ்வாறு இருக்கிறது, பரம்பரை அலகில் மாற்றம் ஏற்பட வாய்;பிருக்கின்றதா? என மூன்று விடயங்களையும் உடனடியாக பரிசோதனை செய்வதற்கு திட்டமிட்டுள்ளோம்.

இந்த எதிர்வு கூறல் நிரூபிக்கப்படும் வரை எமது பணிகள் தொடரும். அத்துடன் யாழ் பல்கலைக்கழக அனைத்து பீடங்களும் இந்த விடயத்துக்கு ஆதரவாகவும் ஆர்வமாகவும் இருக்கிறார்கள்.

இந்த பிரச்சனை தொடராமல் இதற்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கு அனைத்து தரப்பினரும் ஒத்துழைக்க வேண்டும் என அவர் தெரிவித்தார்.

Related Posts