Ad Widget

பாதாளக் குழுக்களின் பாணியில் இளைஞர்கள் மாறிவருகின்றனர் – அங்கஜன்

angajanபாதாளக் குழுக்களின் பாணியில் இளைஞர்கள் மாறிவருவதனை அவதானிக்க முடிகின்றது. இதனை உடனடியாகத் தடுக்க வேண்டும். யாழ்.பெருந்துடுப்பாட்ட போட்டிகளின் போதான அசம்பாவிதங்களுக்கு காரணமானவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படவேண்டும்’ என யாழ்ப்பாணப் பொலிஸாரினைக் கேட்டுக்கொள்வதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் யாழ்.மாவட்ட அமைப்பாளரும் வடமாகாணசபை உறுப்பினருமான அங்கஜன் இராமநாதன் குறிப்பிட்டுள்ளார்.

இவ்விடயம் தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,

‘வட்டுக்கோட்டை யாழ்.கல்லூரி – யாழ் புனித பத்திரிசியார் கல்லூரி ஆகிய அணிகளுக்கிடையில் நடைபெற்ற பொன் அணிகளின் போர், யாழ்.மத்திய கல்லூரி யாழ்.பரியோவான் கல்லூரி அணிகளுக்கிடையில் நடைபெற்ற வடக்கின் மாபெரும் துடுப்பாட்டம் ஆகியவற்றின்போது இடம்பெற்ற அசம்பாவிதங்கள் யாழ்ப்பாண இளைஞர்கள் மத்தியில் அதிகரித்துவரும் சீர்கேடான செயற்பாடுகளை வெளிச்சம் போட்டு காட்டும்வகையில் அமைந்திருக்கிறன.

இவ்வாறான செயற்பாடுகளை அனுமதிப்பது எதிர்காலத்தில் யாழ்ப்பாண சமூகத்தில் பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தும் ஆபத்தினை கொண்டிருக்கிறது. பாதாளக் குழுக்களின் பாணியில் இளைஞர்கள் மாறிவருவதனை அவதானிக்க முடிகின்றது. இதனை உடனடியாகத் தடுக்க வேண்டும். இந்த இரண்டு அசம்பாவிதங்களுக்கும் காரணமானவர்களை சரியாக இனங்கண்டு கைதுசெய்து அவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுப்பதற்கான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்று யாழ்.மாவட்ட பொலிசாரினை நான் வேண்டிக்கொள்கிறேன்.

இதுதொடர்பில் பொலிஸ்மா அதிபருடனும் நான் பேசவிருக்கிறேன். இவற்றுக்கு காரணமானவர்கள் தண்டிக்கப்படுவதன் மூலமே எதிர்காலத்தில் இவ்வாறான செயற்பாடுகள் இடம்பெறாமல் தடுக்க முடியும். விளையாட்டில் வெற்றி தோல்வி சகஜம் என்று புரிந்து கொள்ளமுடியாமல் உள்ளதாலேயே அடாவடித்தனங்களும் வன்முறைகளும் தலை தூக்குகின்றன. எனவே இத்தகைய சீர்கேடான நடவடிக்கைகளை முளையிலே கிள்ளி எறிதல் வேண்டும்.

இதேவேளை, சம்பந்தப்பட்ட பாடசாலைகளின் அதிபர்கள் மற்றும் பழைய மாணவர்கள் சங்கத்தினர் இந்த விடயத்தில் கூடிய கவனம் செலுத்தி உரிய நடவடிக்கை எடுப்பதற்கு ஒத்துழைக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கின்றேன்’ என அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டிருந்தது.

பொன் அணிகளின் போர் என வர்ணிக்கப்படும் புனித பத்திரிசியார் (சென்.பற்றிக்ஸ்) கல்லூரிக்கும் வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரி அணிக்கும் இடையிலான 26ஆவது ராஜன் கதிர்காமர் வெற்றிக்கிண்ண ஒருநாள் துடுப்பாட்டப் போட்டி சனிக்கிழமை (15) வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரியின் பிக்நெல் மைதானத்தில் நடைபெற்றுகொண்டிருந்த போது ரசிகர்களுக்கு இடையில் ஏற்பட்ட கைகலப்பில் ஒருவர் பலியாகியமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி அணிக்கும் சென்.ஜோன்ஸ் கல்லூரிக்கும் இடையில் நடைபெற்று வந்த வடக்கின் மாபெரும் போர் துடுப்பாட்டப் போட்டியில் நடுவர் கொடுத்த ஆட்டமிழப்பு தொடர்பாக எழுந்த சர்ச்சை காரணமாக போட்டி கைவிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related Posts