Ad Widget

பாடுபட்டு உழைக்கத் தயாரில்லாத அரச உத்தியோகத்தர்கள் தொழிலை விட்டுச் செல்லலாம் – ஜனாதிபதி ரணில்

நாட்டிலுள்ள ஒவ்வொரு கிராம உத்தியோகத்தர் பிரிவுகளிலும் சுமார் 9 அரச உத்தியோகத்தர்கள் காணப்படுகின்றனர். இவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து விவசாயத்துறையை மேம்படுத்துவதற்கு பாடுபட வேண்டும்.

அவ்வாறு பாடுபட முடியாது எனக் கூறுபவர்கள் வீட்டுக்குச் செல்லலாம். எந்தவொரு வேலைகளிலும் ஈடுபடாதவர்களுக்கு சம்பளத்தை வழங்கிக் கொண்டிருக்க முடியாது என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

அநுராதபுர மாவட்ட அபிவிருத்தி சபை கூட்டம் ஞாயிற்றுக்கிழமை (21) இடம்பெற்ற போது இதனைத் தெரிவித்த ஜனாதிபதி அங்கு மேலும் குறிப்பிடுகையில் ,

கட்சி, இன, மத பேதமின்றி நாட்டிற்காக அனைவரையும் ஒன்றிணைக்கும் கடந்த காலப் பாடத்தை ஐக்கிய தேசியக் கட்சி கற்றுத் தந்துள்ளது.

எதிர்காலத்தில் நாட்டிற்காக அனைவரையும் ஒன்றிணைப்பதே அதன் நோக்கமாகும். ஐக்கிய தேசியக் கட்சியில் மீண்டும் இணைந்து கொள்ளுமாறு நான் யாருக்கும் அழைப்பு விடுக்கவில்லை.

எனினும் நாட்டை கட்டியெழுப்பும் பணியில் தாமதமின்றி இணைந்து கொள்ளுமாறு அழைப்பு விடுக்கின்றேன்.

இன்று நாட்டு மக்கள் மிகுந்த அழுத்தத்தில் உள்ளனர். வரலாற்றில் இத்தகைய அழுத்தம் இருந்ததில்லை. அந்த நிலையிலிருந்து நாம் வெளியேற வேண்டும்.

கடந்த ஆண்டை விட நமது பொருளாதாரம் வளர்ச்சி 8 சதவீதமாகக் குறைவடையும். இது வேகமாக இடம்பெற்றுக் கொண்டிருக்கிறது.

இதன் விளைவை அனைவரும் அனுபவிக்க வேண்டும். எனினும் இந்த நிலையை மாற்றியமைத்து மேம்படுத்த வேண்டும். இந்த பொருளாதார வளர்ச்சியை எவ்வாறு துரிதமாக மேம்படுத்துவது என்பது தொடர்பில் சிந்திக்க வேண்டும்.

விவசாயத்தை வெற்றிகரமாக முன்னெடுத்தால் வீழ்ச்சியடைந்த பொருளாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்ப முடியும். பெரும்போகத்திற்கு தேவையான உரங்களை வழங்கும் பணியில் ஈடுபட்டுள்ளோம்.

அதற்கான உதவிகள் பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளன. உர மானியமும் வழங்கப்படுகிறது. தேவையான விதைகள் வழங்கப்படும்.

விவசாய பணிகளுக்கு தேவையானளவு எரிபொருள் வழங்கும் பணி நடந்து வருகிறது. பெரும்போகத்தை மிகவும் வெற்றிகரமாக நிறைவு செய்தால் பொருளாதார அழுத்தத்தை குறைக்க முடியும்.

மீன்பிடி நடவடிக்கைகள் , தேயிலை, தென்னை, இறப்பர் என அனைத்திற்கும் தேவையான ஒத்துழைப்புக்கள் வழங்கப்படும். அடுத்த வருடம் இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையை மேலும் அதிகரிக்க முடியும் என நம்புகிறோம்.

இப்போது ஏற்றுமதி துறையிலிருந்து வருமானம் கிடைக்கப் பெறுகிறது. ரூபாயின் பெறுமதி நிலைபேறு தன்மையை அடையும் போது , இலங்கை மத்திய கிழக்கு நாடுகளின் பணத்தை நேரடியாக பெற்றுக்கொள்ளும்.

எனவே பெரும்போகத்தில் சிறந்த விளைச்சலைப் பெற கடுமையாக உழைப்போம். இப்போது நமக்கு இருக்கும் ஒரே உதவி நாம்தான்.

வெளியாட்களின் உதவிகள் ஏற்கனவே கிடைத்துவிட்டன. இந்தியா , அமெரிக்கா மற்றும் உலக வங்கி என அனைத்து தரப்பினரும் எமக்கு உதவிகளை வழங்கியுள்ளன. இவற்றிடமிருந்து கிடைக்கப் பெற்ற உதவிகளுடன் விவசாய புரட்சியை ஆரம்பிப்போம்.

இப்பணியில் குறிப்பாக உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்களுக்கு பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. இதன் போது காணப்படும் குறை , நிறைகளைக் கண்டறிந்து அவற்றை அவர்க மாவட்டத்திற்கு பொறுப்பான பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு தெரியப்படுத்த வேண்டும். அதனை அவர்கள் பாராளுமன்றத்திற்கு அறிவிப்பார்கள்.

கீழ் மட்டத்தில் ஏராளமான அரசு அதிகாரிகள் உள்ளனர். ஒரு கிராம அலுவலர் பிரிவுக்கு சுமார் 9 அரச அலுவலர்கள் இருப்பதாக நினைக்கிறேன். அவர்கள் கிராம அலுவலர் பிரிவுகளை தொகுதிகளாகப் பிரித்து செயற்பட வேண்டும். அவ்வாறு பாடுபட்டு வேலை செய்ய விரும்புபவர்கள் அதனை செய்யலாம். முடியாதவர்கள் வீட்டிற்குச் செல்லலாம். எந்த வேலைகளையும் செய்யாதிருப்பவர்களுக்கு ஊதியத்தை வழங்கிக் கொண்டிருக்க முடியாது.

உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களாக இப்பணியை தொடருங்கள். இது தொடர்பில் முன்னாள் எம்.பி.க்களும் சிறப்பாக செயற்பட வாய்ப்பு உள்ளது. அனைவரும் இணைந்து இந்த பணியை செய்வோம். அரசாங்கத்திடம் இருந்து எல்லாவற்றையும் எதிர்பார்க்கக் கூடாது. இந்தப் பொருளாதாரப் பிரச்சினைகளுக்கு அரசியல்வாதிகள் தீர்வு காண வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர். நாம் அதை செய்ய வேண்டும். மக்கள் ஒன்றிணைந்து இந்த அழுத்தத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்று கேட்டுக் கொள்கின்றனர். அந்த செய்தியை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

பழைமை அரசியலை கடைப்பிடிப்பதில் அர்த்தமில்லை. பாராளுமன்றத்தில் கட்சி மாறினாலும் நாட்டின் பிரச்சினைகள் தீர்ந்துவிடும் என்று மக்கள் நினைக்கவில்லை. அதனால் தான் இளைஞர்கள் தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர். ஆரம்பத்தில் முன்னெடுக்கப்பட்ட அமைதி போராட்டங்கள் பின்னர் , வன்முறையாக மாற்றமடைந்தது. அனைத்து கட்சிகளுடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து அனைவருடனும் இணைந்து பயணிக்கவே விரும்புகின்றேன். நாட்டை கட்டியெழுப்புவதற்கு நாம் இணைந்து பணியாற்றும்போது, புதிய அரசியல் கோட்பாடு கிடைக்கும். பழைய வழியில் செல்ல முடியாது. ஒரு புதிய முறைக்கு செல்லலாம். அனைவரும் இந்தப் பொறுப்பை ஏற்றுச் செயல்படுவோம் என்றார்

Related Posts