செம்மணி மனித புதைகுழி முறையான விசாரணைகளை மேற்கொண்டுள்ளோம் ; கண்டெடுக்கப்பட்ட நகைகள் வடக்கு அபிவிருத்திக்கு பயன்படுத்தப்படும் – ஜனாதிபதி

அண்மையில் கண்டுப்பிடிக்கப்பட்ட செம்மணி மனித புதைகுழி தொடர்பில் முறையான விசாரணைகளை மேற்கொண்டுள்ளோம். ஆணைக்குழு அமைத்து உண்மையை மூடி மறைக்கவில்லை. உண்மையை கண்டறியும் அவசியம் எமக்கு உண்டு. விடுதலை புலிகள் காலத்தில் கண்டுப்பிடிக்க தங்க நகைகளை உரிமையாளர்களுக்கு வழங்க நடவடிக்கை எடுத்துள்ளோம். இருப்பினும் அது இயலாமல் உள்ளது. அந்த நகைகளை பணமாக மாற்றி வடக்கு மாகாண அபிவிருத்திக்கு பயன்படுத்த தீர்மானித்துள்ளோம் என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.

இராணுவத்தினர் குற்றமிழைத்திருந்தால் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பது இராணுவத்தினரை வேட்டையாடுதல் என்று குறிப்பிட முடியாது. 11 மாணவர்களை கடத்தி காணாமலாக்கிய சம்பவம் தொடர்பில் முறையான விசாரணைகள் மேற்கொள்ளப்படுகிறது. குற்றவாளி வெகுவிரைவில் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படுவார். சட்டத்தை சரியாக செயற்படுத்தும் போது இராணுவ பழிவாங்கள் என்று கோசம் எழுப்ப வேண்டாம் எனவும் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற 2026 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தில் பாதுகாப்பு அமைச்சு மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சுக்கான குழு நிலை விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,

நாட்டில் இராணுவ கட்டமைப்பை நவீனமயப்படுத்த வேண்டும்.இலங்கையில் மீண்டொரு போதும் யுத்தம் ஒன்று தோற்றம் பெறாது. வெளியக ஆக்கிரமிப்புக்களும் இடம்பெறாது.தொழில்நுட்ப அச்சுறுத்தல்கள் மற்றும் கடல் எல்லை பாதுகாப்பு குறித்து விசேட கவனம் செலுத்த வேண்டும். ஆகவே அச்சுறுத்தல்களின் வடிவத்துக்கு அமையவே இராணுவத்தை தயார்ப்படுத்த வேண்டும்.

இராணுவத்தை மறுசீரமைப்பதற்கு சர்வதேச ஒத்துழைப்புகள் கிடைக்கப்பெற்றுள்ளன. இந்தியா 70 ஜீப் வண்டிகளையும், வழங்கியுள்ளது. 2026 ஆம் ஆண்டு நவீன 10 விமானங்களை வழங்குவதற்கு அமெரிக்கா மற்றும் அவுஸ்ரேலியா வழங்க இணக்கம் தெரிவித்துள்ளது.

நாட்டின் நல்லிணக்கம் உறுதிப்படுத்த உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும். உண்மையை கண்டறிய வேண்டும்.,குற்றங்களுக்கு தண்டனை வழங்குவதை தவிர்க்க முடியாது. உரிய சட்ட நடவடிக்கைகள் எடுக்கும் போது கடந்த காலங்களில் குறிப்பிட்டதை போன்று இராணுவத்தினரை வேட்டையாடுதல் என்ற எதிர்ப்பு தோற்றம் பெறும்.

11 மாணவர்களை கடத்திச் சென்ற விவகாரத்தில் கடற்படையின் உயர் அதிகாரி மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்ததற்கும், மாணவர்களை கடத்தி காணாமலாக்கியதற்கும் இடையில் எவ்வித தொடர்பும் கிடையாது. கடற்படையின் கௌரவத்தை பாதுகாக்க இந்த குற்றச்சாட்டு தொடர்பில் முறையான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு உண்மை வெளிப்படுத்தப்படும். கடற்படை மீது உண்மையாக பற்றுக் கொண்டுள்ளவர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்க போவதில்லை.இதனை இராணுவ பழிவாங்கல் என்று குறிப்பிட வேண்டாம்.

கடந்த கால படுகொலைகள் தொடர்பில் புலனாய்வு அதிகாரிகள் மீது குற்றஞ்சாட்டப்படுகிறது. இந்த குற்றச்சாட்டை திருத்திக் கொண்டு முன்னோக்கிச் செல்வதா அல்லது அதே குற்றங்களுடன் இருப்பதா என்பதை தீர்மானிக்க வேண்டும். நான் இதனை மறைப்பதால் சர்வதேசம் அறியாமல் இருக்காது. கடந்த காலங்களில் இடம்பெற்ற சர்ச்சைக்குரிய படுகொலைகள் குறித்து முறையான விசாரணைகள் மேற்கொள்ளப்படுகிறது. லசந்த விக்கிரமதுங்க படுகொலை குறித்து முறையான விசாரணைகளை மேற்கொண்டுள்ளோம்.பாதுகாப்பு பிரிவு முழுமையாக தூய்மைப்படுத்தப்படும்.

தாஜூதீனின் படுகொலை தொடர்பில் முறையான விசாரணைகளை மேற்கொண்டுள்ளோம். பாதுகாப்பு தரப்புடன் தொடர்புடைய அதிகாரிகள் விசாரிக்கப்படவுள்ளார்கள். இது படுகொலை என்பதை விசாரணை அதிகாரிகள் அண்மையில் எனக்கு உறுதிப்படுத்தினார்கள்.இதற்கு நீதியை பெற்றுக்கொடுக்க கூடாதா, குற்றவாளிகளை தண்டிக்கும் போது இராணுவ பழிவாங்கல் என்று குறிப்பிடாதீர்கள்.

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல்கள் பற்றியும் முறையான விசாரணைகள் மேற்கொள்ளப்படுகிறது. விசாரணைகளை மேற்கொள்ளும் போது நீதிமன்றத்தை நாடாமல் ஏன் குற்றச்சாட்டுக்களை மாத்திரம் முன்வைக்கின்றீர்கள். குண்டுத்தாக்குதல்கள் குறித்து பல கோணத்தில் விசாரணைகள் மேற்கொள்ளப்படுகிறது. இன்று நீதியை கோருகின்றவர்கள் அன்று எதனையும் செய்யவில்லை. 2019 ஆம் ஆண்டு ஆட்சிமாற்றத்தின் பின்னர் பல சாட்சியங்கள் அழிக்கப்பட்டுள்ளன.

இந்த ஒருவருட காலத்தில் பல குற்றங்கள் தொடர்பில் முறையான விசாரணைகளை மேற்கொண்டு குற்றவாளிகளை கண்டுப்பிடித்தோம். கடந்த கால குற்றங்கள் மற்றும் படுகொலைகள் இடம்பெற்றதன் பின்னர் ஆட்சிமாற்றம் ஏற்பட்டது.அதன் பின்னர் சாட்சியங்கள் அழிக்கப்பட்டன. இதனால் தான் இன்றும் விசாரணைகள் தொடர்கின்றன.ஆகவே முறையான சாட்சியங்களுடன் குற்றவாளிகள் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படுவார்கள்.எவருக்கும் அழுத்தம் பிரயோகிக்கவில்லை. குற்றச்சாட்டுகளுக்கு உள்ளானவர்களும் நீதிமன்றத்துக்கு சென்று நீதியை பெற்றுக்கொள்ளலாம்.

அண்மையில் கண்டுப்பிடிக்கப்பட்ட செம்மணி மனித புதைகுழி தொடர்பில் முறையான விசாரணைகளை மேற்கொண்டுள்ளோம். ஆணைக்குழு அமைத்து உண்மையை மூடி மறைக்கவில்லை. உண்மையை கண்டறியும் அவசியம் எமக்கு உண்டு. விடுதலை புலிகள் காலத்தில் கண்டுப்பிடிக்க தங்க நகைகளை உரிமையாளர்களுக்கு வழங்க நடவடிக்கை எடுத்துள்ளோம்.இருப்பினும் அது இயலாமல் உள்ளது. அந்த நகைகளை பணமாக மாற்றி வடக்கு மாகாண அபிவிருத்திக்கு பயன்படுத்த தீர்மானித்துள்ளோம்.

சானி அபேசகர பற்றி குற்றச்சாட்டுக்களை முன்வைக்கிறார்கள். சானி சிறந்த அரச அதிகாரி.இவரது விசாரணைகளை அடிப்படையாகக் கொண்டு உயர்நீதிமன்றம் பலருக்கு மரண தண்டனை தீர்ப்பளித்துள்ளது. கடுமையான தண்டனையளித்துள்ளது. ஆகவே இவ்வாறு திறமையான அரச அதிகாரியை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இளம் அதிகாரிகளுக்கு பயிற்சியளிக்க வேண்டும். தமது பக்கம் விசாரணைகள் திரும்பும் போது குற்றவாளிகள் சானி அபேசேகரவை விமர்சிக்கிறார்கள்.

இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் பணிப்பாளர் ரங்க திஸாநாயக்கவை விமர்சிக்கிறார்கள். ஊழல்வாதிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளும் போது அதில் தவறென்ன உள்ளது. சிறந்த அதிகாரிகளை பாதுகாப்பதற்கு பாராளுமன்றம் முழுமையான ஒத்துழைப்பு வழங்குவோம். விமர்சனங்களுக்கு கவனத்திற் கொள்ளாமல் கடமைகளை செய்யுங்கள் என்று அவர்களுக்கு நான் ஆலோசனை வழங்கியுள்ளேன்.

குற்றங்கள் மற்றும் மோசடிகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கும் போது அரச அதிகாரிகளை விமர்சிப்பதையும்,போலியான குற்றச்சாட்டுக்களை முன்வைப்பதையும் தவிர்த்துக் கொள்ள வேண்டும் என்று குறிப்பிட்டுக் கொள்கிறேன்.பாதாளக் குழுக்களுக்கும் அரசியல் தரப்பினருக்கும் இடையில் தொடர்புண்டு என்பது ஒன்றும் புதிதல்ல, ஒருசில பாதாளக்குழுவினர் அரசியல்வாதிகளுக்கும் நிதி வழங்கியுள்ளார்கள், ஊடகங்களுக்கும் நிதி வழங்கியுள்ளார்கள். ஊடகங்களுக்கும், பாதாளக் குழுக்களுக்கும் இடையிலான தொடர்பு வெகுவிரைவில் வெளிப்படுத்தப்படும்.

பெத்தகானே சஞ்ஜீவ முன்னாள் ஜனாதிபதியின் காவலாளியாக இருந்தார், சொத்தி உபாலி முன்னாள் ஜனாதிபதி பிரேமதாசவிடம் இருந்தார்.இது தான் உண்மை இதனை எவராலும் மறுக்க முடியுமா, அரசியல் ஆதரவுடன் வளர்ச்சிப் பெற்ற பாதாளக் குழுக்கள் இன்று போதைப்பொருள் வர்த்தகத்துடன் தொடர்புப்பட்டுள்ளது.இதனை அழிக்க வேண்டுமா இல்லையா என்பதை பாராளுமன்றம் தீர்மானிக்க வேண்டும்.

அரசியல் கருத்தை புறக்கணித்து விட்டு வெலிகம சம்பவத்தை தேடிப்பாருங்கள். களுத்துறை பகுதியில் பாதாளக் குழுக்கள் அரசியல் கட்சி ஒன்றை ஆரம்பிக்கவிருந்தார்கள். யாழ்ப்பாணத்திலும் இவ்வாறான தன்மையே காணப்பட்டது. இளைஞர் யுவதிகள் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளார்கள்.பாதாள குழுக்களையும், போதைப்பொருளையும் அழிக்காமல் பொருளாதாரத்தை ஒருபோதும் மேம்படுத்த முடியாது.இதற்குரிய கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

அரச அதிகாரிகளில் குற்றவாளிகளும் உள்ளார்கள் என்பதை அறிவேன்.அவர்களுக்கு எதிராகவும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.போதைப்பொருளுக்கு எதிராக அரசாங்கம் எடுக்கும் நடவடிக்கைகளுக்கு நாட்டு மக்கள் முழுமையான ஒத்துழைப்பு வழங்குகிறார்கள்.ஆனால் எதிர்க்கட்சிகள் எதிராக செயற்படுகின்றன. நாட்டு மக்கள் இவர்களுக்கு எதிராக செயற்பட வேண்டும். பாதாள குழுக்கள் ,போதைப்பொருள் கலாசாரத்தை முன்கொண்டுச் செல்வதற்கு இனி இடமளிக்க போவதில்லை.

சட்ட விரோதமான முறையில் ஈட்டப்பட்ட சொத்துக்களை அரசுடமையாக்கும் சட்டம் இயற்றப்பட்டுள்ளது. உரிய நடவடிக்கை எடுக்கப்படும். குற்றவாளிகளை பாதுகாக்கவும், தவறான விடயங்களை வெளியிடுவதற்கும் ஒருசில ஊடகங்கள் முன்னிலையில் இருந்து செயற்படுகின்றன. நாட்டு மக்களும் இந்த உண்மையை நன்கு அறிவார்கள். அவர்களுக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்கப்படும்.

ஊழலுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும். முன்னாள் நிதியமைச்சர் வழக்குக்கு முன்னிலையாகாமல் தலைமறைவாகியுள்ளார். எதிர்வரும் 21 ஆம் திகதி நீதிமன்றத்துக்கு முன்னிலையாகுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தூய்மையானவர்கள் என்று பேசித் திரிபவர்கள் தாராளமாக நீதிமன்றம் செல்லலாம். நீதிபதிகளின் பதவி விலகல் பற்றி பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்பட்டது. நீதிபதிகள் மீது முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கள் குறித்து அவர்களிடம் விசாரிக்கப்படும் போது தாம் சுயமாகவே பதவி விலகுவதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். ஏனெனில் குறித்த குற்றச்சாட்டின் பாரதூரத்தை அவர்கள் நன்கு அறிவார்கள்.ஆகவே எதிர்க்கட்சி தெரியாத விடயங்களை பற்றி பேசக்கூடாது.

இஸ்ரேலிய சுற்றுலா பயணிகள் பற்றி பாராளுமன்றத்திலும் கூச்சலிடுகிறார்கள்.இலங்கைக்கு வரும் சுற்றுலா பயணிகளை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு அரசாங்கத்துக்கு உண்டு. எதிர்க்கட்சியினர் புதுமையானவர்களாக உள்ளார்கள். சுற்றுலாத்துறை சேவை கைத்தொழிலை மேம்படுத் த உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.அரச அதிகாரிகள் சட்டத்தின் பிரகாரம் செயற்பட வேண்டும் என்பதை குறிப்பிட்டுக் கொள்கிறேன் என்றார்.

Related Posts