Ad Widget

பாடசாலை மாணவர்களை துஷ்பிரயோகம் செய்தால் ஆண்மை நீக்கம்!

பாடசாலை மாணவர்களை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்துபவர்களுக்கு ஆண்மை நீக்கம் செய்யப்பட வேண்டுமென, வடக்கு மாகாண சபை உறுப்பினர் ஆ.புவனேஸ்வரன் வலியுறுத்தியுள்ளார். இதனை மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கமும் ஆமோதித்துள்ளார்.

வடக்கு மாகாண சபையின் அமர்வில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

குறிப்பாக, வேலியே பயிரை மேய்வதைப் போன்று வடக்கு மாகாணத்தில் பாடசாலை மாணவர்களை ஆசிரியர்களே துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்துவதாக மாகாண சபை உறுப்பினர் குற்றஞ்சாட்டினார். இவ்வாறானவர்களுக்கே கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டுமென குறிப்பிட்ட புவனேஸ்வரன், அவர்களை சேவையில் இருந்தும் நீக்க வேண்டுமென வலியுறுத்தியுள்ளார்.

கிராமங்களிலேயே இவ்வாறான சம்பவங்கள் அதிகமாக காணப்படுகின்றதெனக் குறிப்பிட்ட புவனேஸ்வரன், அவ்வாறான குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்களை அதிகாரிகளும் அரசியல்வாதிகளும் பாதுகாக்கின்ற நடவடிக்கையிலும் ஈடுபடுவதாகக் குறிப்பிட்டார்.

கடந்த காலங்களில் நடைபெறாத இவ்வாறான சம்பவங்கள், யுத்தத்தின் பின்னரே அதிகரித்துள்ளதென்றும், இதனால் வடக்குச் சமூகம் பாரிய பாதிப்பை எதிர்கொண்டுள்ளதென்றும் குறிப்பிட்ட புவனேஸ்வரன், இவ்விடயம் தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டியது அவசியமென வலியுறுத்தியுள்ளார்.

Related Posts