Ad Widget

பாடசாலை நீர்த்தாங்கியில் நஞ்சுத்திரவம் கலப்பு: சந்தேகத்தில் இருவர் கைது

ஏழாலை ஸ்ரீ முருகன் வித்தியாலய நீர்த்தாங்கியில் நஞ்சுத்திரவம் கலக்கப்பட்டமை தொடர்பில், அப் பாடசாலையின் கடமை நேர, இரு காவலாளிகளையும் சந்தேகத்தில் நேற்று (23) கைது செய்துள்ளதாக சுன்னாகம் பொலிஸார் தெரிவித்தனர்.

கைதான இருவரும் ஏழாலை மயிலங்காட்டு பகுதியினை சேர்ந்தவர்கள் என பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலை அடுத்து, விசாரணைகளை மேற்கொண்ட இரகசிய பொலிஸார், பாடசாலையின் காவலாளிகள் இருவரையும் நேற்றயதிளம் (23) அவர்களது வீடுகளில் வைத்து கைது செய்துள்ளனர்.

கைதான இருவரையும் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகள் மேற்கொண்டு வரும் பொலிஸார், இச் சம்பவம் அரசியல் உள்நோக்கத்திற்காக செய்யப்பட்டுள்ளது என தெரிவித்தனர்.

மேலும், பாடசாலையில் நஞ்சுத்திரவம் ஊற்றப்பட்டமை தொடர்பில் பிரதேச அரசியல்வாதி ஒருவருக்கு தொடர்பு உள்ளமை, பொலிஸ் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

கடந்த (19) திகதி, மேற்படி பாடசாலையின் நீர்த்தாங்கியில் நஞ்சுத்திரவம் கலந்த நீரை பருகிய 26 மாணவர்கள் பாதிப்புக்குள்ளாகி, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வீடு திரும்பியிருந்தனர்.

இச் சம்பவம் தொடர்பில் குற்றவாளிகளை கைது செய்யுமாறு கோரிய பாடசாலை மாணவர்கள் பெற்றோர்கள், மற்றும் நலன் விரும்பிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Posts