Ad Widget

பாடசாலை சமூகத்தால் சமூகச் சீரழிவுகளை கட்டுப்படுத்த முடியும் – எம்.சிறிதரன்

அதிபர்கள், ஆசிரியர்களை பொறுத்தவரை அன்றாடம் மாணவர்களின் நடத்தைகளை அவர்களின் ஊடாக பெற்றார்கள், குடும்ப நிலைமைகளை அறிகின்ற வாய்ப்பு அதிகம். மாணவர்களை அவர்களின் நிலைகளை அறிந்து அதற்கேற்ப அவர்களை வழிநடத்துகின்ற திட்டங்கள் செயற்பாடுகளை வளர்க்க வேண்டும். இதன்மூலம் அதிகரித்து வரும் சமூகச் சீரழிவுகளை கட்டுப்படுத்த பாடசாலை சமூகத்தால் முடியும் என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்தார்.

கிளிநொச்சி வலயத்துக்குட்பட்ட பாடசாலை அதிபர்களுக்கான செயலமர்வில் கிளிநொச்சி கல்வி வலயத்தில் வியாழக்கிழமை (11) நடைபெற்ற போது, அதில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் கூறுகையில்,

சமுதாயத்தின் முக்கிய பங்காளிகளாக பாடசாலை சமுகம் இருக்கின்றது. அதிலும் அதிபர்கள் ஆசிரியர்களுக்கு இதில் கூடிய பங்கு இருக்கின்றது. எமது மண்ணில் தொடர்ந்து கேள்விப்படும் செய்திகள் சிறுமிகள், யுவதிகள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொல்லப்படுவது. போதைப்பொருள் பாவனை, நடத்தை பிறழ்வுகள் என்பன ஆகும். இந்த விடயங்களை உற்றுநோக்கினால் இப்பொழுது அநேகமான சம்பவங்கள் அந்தந்த ஊர்காரர்களாலேயோ அல்லது உறவினர்களாலேயே தான் செய்யப்படுகின்றது.

இதுவரையும் நமது சமுகத்தின் பண்பாட்டில் கேள்விப்படாத அளவுக்கு மிகவும் கொடூரமான சிந்தனை மனோநிலை இப்பொழுதைய நம் சமூகத்துக்குள் ஏற்பட்டுள்ளது. ஒருவிதமான கட்டமைக்கப்பட்ட இனஅழிப்பு நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது. அது எம்மவர்களை வைத்தே நிகழ்த்தப்படுகின்றது. போதைப்பொருள் பாவனைக்கு அடிமையாகி இதை எமது சமூகத்தை சேர்ந்த இளைய சமுதாயம் செய்ய துணிகின்றது.

ஒரு காலத்தில் நாங்கள் பிரம்போடு திரியும் ஆசிரியர்களிடம் கட்டுப்பட்டு ஒழுக்கங்களை கற்றுக்கொண்டோம். ஆனால் இன்று அப்படியல்ல. சட்டதிட்டங்கள் ஆசிரியர்களை கட்டுப்படுத்தி வைத்திருக்கின்றது. இன்றைக்கு மாணவர்கள் அலைபேசிகளை மிகவும் சாதரணமாக பாவிக்கின்றார்கள்.

சிலர் ஒன்றுக்கு இரண்டு தொலைபேசிகளையும் பாவிக்கின்றார்கள். இதனூடாக இன்றைக்கு சமூக வலையத்தளங்களுடாக வெளிவரும் தகாதவைகளையும் மாணவர்கள் பார்க்கின்றார்கள். இது தொடர்பாக விழிப்புணர்வுடன் பாடசாலை சமூகம் இருக்கவேண்டியது இன்றைய காலத்தில் அவசியம்.

மாணவர்களை திசை திருப்பக்கூடிய சமுதாய நல்லொழுக்க விடயங்கள் தொடர்பான போட்டிகள், கலைநிகழ்வுகளுக்கு ஏற்பாடு செய்து அதில் மாணவர்களை ஈடுபட செய்து, நல்ல சமுதாயத்தின் முன்னோடியான விடயங்களில் ஈர்ப்பை ஏற்படுத்த வேண்டும். எமது படலைகள் தட்டுப்படும் வரை காத்திராமல் முன்கூட்டியே சில பாதுகாப்பு விடயங்களை செய்யவேண்டும்.

வேறு இடங்களில் வேறு ஆட்களுக்கு நடக்கின்றபோது மௌனமாக நாமிருப்பதன் மூலம் எம்மை நோக்கி அந்த ஆபத்துக்களை அழைக்கின்றோம். வித்தியா கொலை செய்யப்பட்டபோது கிளிநொச்சியில் ஒரு அதிபர் தான் முதன்முதலில் கேட்டார் இதற்கு எதிராக நாம் ஏதாவது செய்ய வேண்டுமென்று. அந்த சிந்தனை மிக முக்கியமானது அது சகலரிடமும் ஏற்பட வேண்டும். ஒரு மாணவி அல்லது மாணவன் பாடசாலைக்கு வரவில்லை என்றால் அதை உடனடியாக உணர்ந்து அதிபரோ வகுப்பாசிரியரோ அது பற்றி அறியவேண்டும்.

சிலவேளைகளில் பாடசாலைக்கு என புறப்பட்டு பாடசாலைக்கு வராதநிலை இருக்குமானால் அதை உடனடியாக அறிந்துகொண்டால் சில விபரீதங்களை கூட தடுக்க முடியும் இது ஒரு மேலதிக வேலை போல தெரிந்தாலும் இது எமது சந்ததிகளை, பிள்ளைகளை காப்பதற்கான வழிகளில் ஒன்று. பிள்ளைகள் தொடர்பாக இன்று விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்.

அவர்களின் பழக்க வழக்கங்கள் பிள்ளைகளை சந்திக்கின்ற நபர்கள் பிள்ளைகள் போகின்ற இடங்கள் தொடர்பான விழிப்புணர்வு அவசியம். பாடசாலைகளில் இது தொடர்பாக அதிபர்கள் ஆசிரியர்கள் பெற்றார்கள் நன்னடத்தை அதிகாரிகள் கிராம சேவகர்கள் இணைந்த ஒரு கூட்டுச்செயற்பாடு அவசியம்’ என தெரிவித்தார்.

Related Posts