Ad Widget

பாடசாலை அனுமதிக்கு பணம் பெற்ற அதிபர்களுக்கு எதிராக நடவடிக்கை

crimeபாடசாலைகளில் மாணவர்களை அனுமதிப்பதற்கு அபிவிருத்திச் சங்கம் மற்றும் பழைய மாணவர் சங்கம் ஆகியவற்றின் வங்கிக் கணக்கில் பணத்தை வைப்புச் செய்வித்து பற்றுச்சீட்டை ஆவணமாகப் பெற்றுக் கொண்ட பாடசாலை அதிபர்கள் தொடர்பாக மேலிடத்துக்கு முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அவர்களுக்கு எதிராக விரைவில் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகத் தெரியவருகிறது.

தரம் 1 மற்றும் மாணவர்களைப் பாடசாலையில் அனுமதிப்பதற்கு எந்தவிதமான நன்கொடையோ,அன்பளிப்போ பெற்றுக்கொள்ளக்கூடாது என கல்வி அமைச்சு சுற்றறிக்கை மூலம் கண்டிப்பான உத்தரவு பிறப்பித்திருப்பதோடு இந்த விடயம் தொடர்பாக பாடசாலை அபிவிருத்திச் சங்கத்தையோ, பழைய மாணவர் சங்கத்தையோ பயன்படுத்தக்கூடாது எனவும் வலியுறுத்திக் கூறியிருந்தது.

கல்வி அமைச்சின் சுற்றறிக்கைக்கும் வலியுறுத்தலுக்கும் மாறாகப் பாடசாலை அபிவிருத்திச் சங்கத்தின் வங்கிக் கணக்கு மற்றும் பழைய மாணவர் சங்கத்தின் வங்கிக் கணக்கு என்பனவற்றில் ரொக்கமாக பணத்தை வைப்புச் செய்து அதற்கான பற்றுச்சீட்டை ஆவணமாகப் பெற்றோரிடம் இருந்து பெற்றுக்கொண்டமை தொடர்பாக பல பாடசாலை அதிபர்களுக்கு எதிராக முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இந்த வகையில் மாணவர் அனுமதிக்கு பணம் பெற்ற பாடசாலைகள் வங்கிக் கணக்குகள் ஊடாக உள்வாங்கப்பட்டிருக்கும் நிதியை அடிப்படையாகக் கொண்டு மேல்விசாரணைகள் தொடரப்படவுள்ளன.

பாடசாலை அபிவிருத்திச் சங்கத்தினதும், பழைய மாணவர் சங்கத்தினதும் தலைவர் பதவியை பதவிவழியாக அதிபரே வகிக்கின்றார். இந்த வகையில் குறிப்பிட்ட காலப்பகுதியில் வைப்புச் செய்யப்பட்டுள்ள மற்றும் வங்கிக் கணக்குகளுக்கூடாக கையாளப்பட்டிருக்கும் கணக்குக்கு சம்பந்தப்பட்ட பாடசாலை அதிபர் காரணம் கூறவேண்டும்.

மாணவர் அனுமதி தொடர்பான நன்கொடை, அன்பளிப்பு பெறப்பட்டிருக்கும் இடத்து சம்பந்தப்பட்ட பாடசாலை அதிபர் மீது ஒழுக்காற்று நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று கூறப்பட்டது.

Related Posts