Ad Widget

பாடசாலையில் தஞ்சம் அடைந்த 65 இளைஞர், யுவதிகளை இராணுவம் பிடித்தது! ஒருவர்கூட வீடு திரும்பவில்லை!!

‘யுத்தத்தால் இடம்பெயர்ந்து மண்கும்பான் தமிழ் மகா வித்தியாலயத்தில் தஞ்சமடைந்திருந்த குடும்பங்களில் இருந்து இராணுவத்தினரால் பிடித்துச் செல்லப்பட்ட 65 இற்கும் மேற்பட்ட இளைஞர், யுவதிகளில் ஒருவர் கூட இதுவரை வீடு திரும்பவில்லை’ என இந்தச் சம்பவத்தில் தனது இரண்டு மகன்களை பறிகொடுத்த தந்தை ஒருவர் ஜனாதிபதி ஆணைக்குழுவின் முன்பாக சாட்சியமளித்தார்.

காணாமற்போனோர் குறித்து விசாரணை நடத்தும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணைகள் நேற்று ஞாயிற்றுக்கிழமை வேலணை பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது. இதில் சு.குமாரசாமி என்ற தந்தை சாட்சியமளிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில்..

கடந்த 1990 செப்ரெம்பர் 23 ஆம் திகதி மண்கும்பானுக்கு இராணுவத்தினர் முன்னேறி வந்தனர். இதனால் அங்கிருந்த மக்கள் அனைவரும் அங்கிருந்த தமிழ் மகா வித்தியாலத்தில் தஞ்சம் புகுந்தனர்.

வித்தியாலயத்துக்குள் நுழைந்த இராணுவத்தினர் விசாரணை நடத்தப் போகிறோம் என்ற பெயரில் அங்கிருந்த 65 இற்கும் மேற்பட்ட இளைஞர், யுவதிகளை அவர்களின் குடும்பங்களுக்கு முன்பாகவே பிடித்து இழுத்துச் சென்றனர்.

இவ்வாறு இராணுவத்தால் பிடித்துச் செல்லப்பட்டவர்களில் எனது இரு மகன்களான இந்திரகுமார், விஜயகுமார் ஆகியோரும் அடக்கம். புpடித்துச் செல்லப்பட்டவர்களில் எவரும் இதுவரை வீடு திரும்பவில்லை. இராணுவத்திடம் சென்றும் எனது மகன்கள் தொடர்பாக கேட்டிருந்தேன். அவர்கள் தமக்க தெரியாது என்று கூறிவிட்டனர்.

எனக்கு நட்டஈடு எதுவும் வேண்டாம். எனது இரு மகன்களையும் மீட்டுத் தாருங்கள் என ஆணைக்குழுவிடம் மன்றாட்டமாகக் கேட்டார்.

Related Posts