Ad Widget

பாகிஸ்தானில் இருவருக்கு மரணதண்டனை நிறைவேற்றம்

பாகிஸ்தானின் பெஷாவரில் நடைபெற்ற மோசமான தாக்குதலைத் தொடர்ந்து அந்நாட்டில் ஏற்கெனவே வேறு வழக்குகளில் தண்டிக்கப்பட்டிருந்த இரண்டு கைதிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.

ராவல்பிண்டி நகரில் அமைந்துள்ள பாகிஸ்தான் இராணுவத்தின் தலைமையகத்தில் 2009ஆம் ஆண்டு நடைபெற்ற தாக்குதல் தொடர்பில் கடந்த 2011ஆம் ஆண்டு மரணதண்டனை விதிக்கப்பட்ட டாக்டர் ஒஸ்மான் மற்றும் முன்னாள் அதிபர் ஜெனரல் பர்வேஸ் முஷாரப்பை 2003 ஆம் ஆண்டு கொல்ல முயற்சித்தமை தொடர்பில் அர்ஷத் அஹமது ஆகிய இருவரும் நேற்று வெள்ளிக்கிழமை நள்ளிரவு தூக்கிலிடப்பட்டுள்ளனர்.

கடந்த 2008 ஆம் ஆண்டுக்குப் பிறகு இப்போதுதான் பாகிஸ்தானில் மரணதண்டனை நிறைவேற்றப்படுகிறது. மரணதண்டனை மீண்டும் செயல்படுத்தப்படுவது குறித்து மனித உரிமை அமைப்புக்கள் கவலை வெளியிட்டுள்ளன. அதேநேரம் மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ள தாலிபான் கைதிகள் சிறையை உடைத்துக்கொண்டு தப்ப முயற்சிக்கலாம் என்ற கவலைகளும் எழுந்துள்ளன. பாகிஸ்தானில் தற்போது எட்டாயிரம் பேர் மரண தண்டனையை எதிர்நோக்கியுள்ளனர்.
கடந்த செவ்வாய் கிழமை பெஷாவரில் நடைபெற்ற தாக்குதலில் 141 பேர் கொல்லப்பட்டனர். இதில் பெரும்பாலானோர் சிறுவர்கள். இந்த தாக்குதல் நடவடிக்கைக்கு பதிலடியாக, ஏற்கனவே மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள பயங்கரவாதிகளின் தண்டனையை நிறைவேற்ற வேண்டும் என்று பாகிஸ்தானின் இராணுவ தளபதி கோரியிருந்தார். அதை பிரதமர் நவாஸ் ஷெரிப்பும் ஏற்றுக் கொண்டார். இதையடுத்து ஆறு பேருக்கான மரண தண்டனையை நிறைவேற்றுவதற்கான உத்தரவை இராணுவ தளபதி பிறப்பித்திருந்தார். அந்த ஆறுபேரில் இரண்டு பேர் நேற்று வெள்ளிக்கிழமை இரவு தூக்கிலிடப்பட்டனர்.

Related Posts