Ad Widget

பல்கலை போராட்டத்துக்கு சைவ மகா சபை ஆதரவு!

இலங்கையின் போர்க்குற்ற விசாரணை அறிக்கையை தாமதப்படுத்தாமல் எதிர்வரும் மார்ச் மாதம் சமர்ப்பிக்கவேண்டும் என்று வலியுறுத்தி நாளை செவ்வாய்க்கிழமை பல்கலைக்கழக சமூகத்தால் முன்னெடுக்கப்படவுள்ள ஆர்ப்பாட்டத்திற்கு சைவ மகா சபை பூரண ஆதரவைத் தெரிவித்துள்ளது.

மேலும் இழப்புகளுடன் வாழ்கின்ற மக்களுக்கு உடனடியாக நீதி கிடைப்பது அவசியம் என்று தெரிவித்த மேற்படி சபை காலம் பிந்திய நீதி மறுக்கப்பட்ட நீதி என்றும் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக சைவ மகா சபை நேற்று வெளியிட்ட அறிக்கையில் மேலும் தெரிவிக்கபட்டுள்ளதாவது,

தமிழர் பிரதேசத்தில் இடம்பெற்ற யுத்தத்தில் கொல்லப்பட்டோர், அங்கவீனமாக்கப்பட்டோர், காணாமற்போனோருக்கு நீதி வழங்கப்படவேண்டும். இவர்களுக்கு உரிய காலத்தில் நீதி கிடைக்கவில்லையென்றால் அது மறுக்கப்பட்ட நீதியாகவே அமையும். இலங்கையில் நடத்தப்பட்ட யுத்தத்தில் நடைபெற்ற சம்பவங்கள் தொடர்பான விசாரணைகள் துரிதப்படுத்தப்பட வேண்டும்.

காணாமற்போனோர் கண்டறியப்படவேண்டும். சிறைகளில் நீண்ட காலம் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் விடுதலை செய்யப்படவேண்டும். இதன் மூலமே மக்கள் உண்மையான சமாதான சக வாழ்வைப் பெறமுடியும்.

இலங்கை யுத்தம் தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் நடத்தப்பட்ட விசாரணை அறிக்கையை எதிர்வரும் மார்ச் மாதம் வெளியிடுவதே உசிதமானது. அந்த விசாரணை அறிக்கையின் மூலம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நன்மைகள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கின்றோம். எனவே, மேற்படி விசாரணை அறிக்கையை எதிர்வரும் மார்ச் மாதம் வெளியிடக் கோரி யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சமூகத்தால் நடத்தப்படவுள்ள ஆர்ப்பாட்டப் பேரணிக்கு எமது சபை பூரண ஆதரவை வெளிப்படுத்துகின்றது.

இந்தப் பேரணியில் சைவத் தமிழ் மக்கள் அனைவரையம் பங்கெடுக்குமாறும் சைவ மகா சபை கோரிக்கை விடுக்கின்றது.

Related Posts