Ad Widget

பல்கலை கல்விசாரா ஊழியர்களின் பணிப்புறக்கணிப்பால் அரசிற்கு 60 கோடி நஷ்டம்

நாடளாவிய ரீதியில் உள்ள பல்கலைக்கழகங்களின் கல்விசாரா ஊழியர்களது பணிப்பகிஷ்கரிப்பினால் அரசிற்கு 60 கோடி ரூபா நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக அனைத்து பல்கலைக்கழக தொழிற்சங்க சம்மேளம் தெரிவித்துள்ளது.இன்றுடன் 7வது நாளாக பணிப்பகிஷ்கரிப்பு தொடரப்படுவதாக சம்மேளனத்தின் தலைவர் ஆர்.எம்.சந்திரபால தெரிவித்துள்ளார்.இருப்பினும் தமது கோரிக்கைகளுக்கு சரியானதொரு தீர்வு காணப்படும் வரை பணிப்பகிஷ்கரிப்பை கைவிடப்போவதில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும் இப் பிரச்சினைக்கு தீர்வு காணும் பொறுப்பு தொழில் ஆணையாளரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக உயர்கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களின் சம்பள பிரச்சினைக்கு ஏற்றுக் கொள்ளக்கூடிய தீர்வு வழங்கப்பட்டுள்ள போதிலும் அரச பணத்தை வீணடிக்கும் வகையில் தொடர்ந்தும் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுவருகின்றனர்.

இவர்களது இந்த நடவடிக்கையினை ஒரு போதும் ஏற்றுக் கொள்ள முடியாது என உயர்கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

அத்துடன் இவர்கள் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடும் நாட்களுக்கான சம்பளமும் வழங்கப்பட மாட்டாது என உயர்கல்வி அமைச்சு ஏற்கனவே அறிவித்திருந்தது.

இந்த கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்றினையும் மேற்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

அத்துடன் இவர்களது போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து எதிர்வரும் ஜூலை 4ம் திகதி தொடக்கம் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடவுள்ளதாக பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் தொழிற்சங்க சம்மேளம் தெரிவித்துள்ளது.

தமது சம்பள உயர்வு கோரிக்கை மாத்திரமன்றி பல்கலைக்கழக துறைகளில் வழங்கப்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாமையால் தாமும் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடத் தீர்மானித்துள்ளதாக சம்மேளனத்தின் தலைவர் நிர்மால் ரங்ஜித் தேவப்பிரிய சுட்டிக்காட்டியுள்ளார்.

இரண்டு கல்வி அமைச்சர்கள் இருந்தும் பல்கலைக்கழக கட்டமைப்பு தற்போது வீழ்ச்சியடைந்துள்ளதனாலேயே நாட்டில் தனியார் பல்கலைக்கழகங்கள் அமைக்கும் திட்டம் உருவாகியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Related Posts