Ad Widget

பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் பெயரில் போலி அறிக்கை!

யாழ் பல்கலைக்கழக மாணவ ஒன்றியத்தின் பெயரினை துஸ்பிரயோகம் செய்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கை தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் அப்பட்டமான போக்கிலித் தனத்தை வெளிப்படுத்தி நிற்பதாக யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அறிவித்துள்ளது.

தற்போதைய சூழல் தொடர்பினில் மாணவர் ஒன்றியம் விடுத்துள்ள ஊடக அறிக்கையினில் தாயகம்.தேசியம்.சுயநிர்ணயமெனும் கோசங்களை வலியுறுத்தி ‘ பொங்குதமிழ்’ பிரகடனம் ஊடாக தமிழ் மக்களின் அங்கிகாரத்திற்காக யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் நீண்டதொரு பாதையை கடந்தே வந்துள்ளது.

நடந்தது இன அழிப்பு என்பதில் மாற்றுக்கருத்தேயில்லையென்பதுடன். சர்வதேச போர்க்குற்ற விசாரணையை வலியுறுத்தி அண்மையில் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அனைத்து தரப்புக்களையும் இணைத்து நடத்தியபோராட்டம் மிகப் பெரும் அவதானிப்பை பெற்றிருந்தது.

இத்தகையை சூழலில் தமிழ்த்தேசிய அரசியலில் மாற்றமொன்றை வேண்டி நிற்கும் சூழலில் தமது வங்குரோத்து அரசியல் பொய்த்துப்போகும் அச்சத்தினில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு ஒரு சில மாணவர்களை பயன்படுத்தி ஒட்டுமொத்த மாணவ சமூகத்தையும் விலைபேசி விற்க துணிந்துள்ளதை அம்பலப்படுத்தவேண்டியுள்ளது.

ஓரு புறம் போதைப்பொருள் பயன்பாட்டிற்கான கடுமையான பிரச்சாரங்களை மேற்கொள்வதாக கூறிக்கொண்டு இன்னொருபுறம் சாராயத்திற்காகவும். ஒரு சில ஆயிரம் ரூபாய்களிற்காகவும் பல் கலைக்கழக மாணவர்களில் சிலரை விலைபேசுவது எவ்வகையிலும் ஏற்றுக்கொள்ளமுடியாததொன்று.

யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் பெயரினை பயன்படுத்தி வெளியிடப்பட்ட அறிக்கையினை நாம் முற்றாக நிராகரிக்கின்றோம். இதனை வெளியிட்டவர்களையும். பின்னணியிலிருந்தவர்களையும் விரைவில் அம்பலப்படுத்துவோம்.

யாழ்.பல்கலைக்கழக சமூகத்தின் பங்காக இருக்கும் ஆசிரியர் சங்கம் மற்றும் ஊழியர் சங்கம் என்பவை இத்தேர்தல் தொடர்பினில் விடுத்துள்ள உறுதி மிக்க முடிவை வரவேற்பதுடன் அதுவே எமது தரப்பினது நிலைப்பாடு என்பதை ஆணித்தரமாக அறியத்தருகின்றோம என்றுள்ளது.

முன்னதாக இன்று போலி ஊடக அறிக்கை தொடர்பினில் பல்கலைக்கழகத்தின் அனைத்து பீட மாணவர்களும் ஒன்று கூடி ஆராய்ந்திருந்தனர். அதன் தொடர்ச்சியாக தமது நிலைப்பாட்டை வெளிப்படுத்த ஊடகவியலாளர் மாநாடொன்றை யாழ்.ஊடக அமையத்தினில் நடத்தவும் ஏற்பாடாகியிருந்தது.

எனினும் கூட்டமைப்பினரால் விடுக்கப்பட்ட கொலை அச்சுறுத்தலையடுத்து அவர்கள் பின்னர் ஊடகவியலாளர் மாநாட்டிலிருந்து பின்வாங்கியிருந்தனர்.

Related Posts