Ad Widget

பல்கலைக்கழக போராட்டத்துக்கு வலிகாமம் தெற்கு வர்த்தக சம்மேளனமும் ஆதரவு

போர்க்குற்ற விசாரணை அறிக்கையை உடன் வெளியிடுமாறு சர்வதேசத்தை வலியுறுத்தி யாழ்.பல்கலைக்கழக சமூகத்தாலும் வெகுஜன அமைப்புகளாலும் செவ்வாய்க்கிழமை (24) காலை 9.30 மணிக்கு நடத்தப்படும் அஹிம்சை ரீதியான கவனயீர்ப்புப் போராட்டத்துக்கு வலிகாமம் தெற்கு வர்த்தக சம்மேளனம் தனது பூரண ஆதரவை வழங்கவுள்ளதாக வர்த்தக சம்மேளனத்தின் தலைவர் லயன் சி.ஹரிகரன் தெரிவித்தார்.

இதுதொடர்பாக அவர் திங்கட்கிழமை (23) வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

‘இலங்கை பேரினவாத அரசால், தமிழ் மக்களுக்கு எதிராக அரங்கேற்றப்பட்ட இன அழிப்பு நடவடிக்கைக்கு எதிரான ஐக்கிய நாடுகள் சபையின் போர்க்குற்ற விசாரணை அறிக்கையை உடன் வெளியிடுமாறு வலியுறுத்தி யாழ்.பல்கலைக்கழக ஆசிரியர்கள் சம்மேளனமும் மாணவர்கள் ஒன்றியமும் இணைந்து வெகுஜன அமைப்புக்களையும் ஒன்றிணைத்து ஜனநாயக ரீதியான பேரணியை நடத்துகின்றனர்.

வடக்கில் எமது மக்களின் அறிவுசார் வழிகாட்டிகளாக திகழ்பவர்கள் யாழ்.பல்கலைக்கழக சமூகம். அவர்கள் தமிழ் மக்களின் உரிமை தொடர்பில் குரல் கொடுத்து இவ்வாறான ஒரு மாபெரும் பேரணியை நடத்துகின்றமை வரவேற்கத்தக்கது.

இலங்கையில் நடைபெற்ற யுத்தத்தில் அப்பாவி பொதுமக்கள், குழந்தைகள், முதியவர்கள், மதத்தலைவர்கள் பெண்கள், ஊனமுற்றவர்கள் என இலட்சக்கணக்கானோர் கொல்லப்பட்டனர்.

இது யுத்த தர்மத்துக்கு முரணாகும். மனித உரிமையை மீறும் ஒரு செயலாகும். எமது இனத்தினுடைய மதம், மொழி என்பன அழிக்கப்பட்டுள்ளன. இறுதி யுத்தத்தின் போது எத்தனையோ பெண்கள் விதவைகளாக்கப்பட்டு நிர்க்கதியான நிலையில் உள்ளார்கள். எத்தனையோ ஆண்கள் தபுதாரர்களாக்கப்பட்டு ஏதிலிகளாக உள்ளார்கள். எத்தனையோ பேர் தமது குழந்தைகளை உடன்பிறப்புக்களை உறவினர்களை இழந்துள்ளார்கள்.

அடக்கி ஒடுக்கப்பட்ட இனத்துக்கு ஒரு நிம்மதியை, சுபீட்சத்தை அழிப்பதாக ஐக்கிய நாடுகளின் போர்க்குற்ற விசாரணை அழுலாக்கல் அமைந்துள்ளது.

அதுவும் பின்னோக்கி நகர்வது தமிழ் மக்களுக்கு நொந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதாக அமைந்துள்ளது. கடந்த ஜனாதிபதி தேர்தலில் தமிழ் மக்கள் தமக்கு நீதி கிடைக்கவேண்டும், தமது சொந்த நிலங்களுக்கு தாம் செல்லவேண்டும் என்ற பெரு அவாவிலேயே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை ஆதரித்தார்கள்.

தமிழ் மக்களின் வாக்கு பலம்தான் அவரது வெற்றியை நிர்ணயித்தது. ஆனால் வழமையான சிங்கள தலைமைகள் போன்று அவர் தமிழ் மக்களுக்கு அவர்களின் உரிமை தொடர்பில் இதுவரை எதுவும் செய்யாமை தமிழ் மக்களை மேலும் வேதனைக்குள்ளாக்கியுள்ளது.

யுத்தகாலத்தில் சரணடைந்த அரசியல் கைதிகள் இன்னமும் விடுவிக்கப்படவில்லை. வலிகாமம் வடக்கில் இராணுவம் ஆக்கிரமித்துள்ள மக்களின் வாழ்வாதார பூர்வீக நிலங்களில் இருந்து இராணுவம் வெளியேற்றப்படவில்லை. காணாமற்போனவர்கள் தொடர்பில் புதிய அரசு எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை. தற்போது மார்ச் மாதத்தில் அமுலுக்குவரவுள்ள போர்க்குற்ற விசாரணையும் பின்னோக்கி நகர்ந்துள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையிலுள்ள நாடுகள், தமது அரசியல் நலனுக்காக சர்வாதிகார அரசு மாறவேண்டும் என்பதற்காக போர்க்குற்ற விசாரணையை முன்வைத்தார்கள். தற்போது சர்வாதிகார அரசு மாறி ஆட்சி மாற்றம் ஏற்பட்டுவிட்டது. இனி தமது அரசியல் நலனுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்று சர்வதேசம் எண்ணி போர்க்குற்ற விசாரணை தொடர்பில் அலட்சியப் போக்குடன் உள்ளதோ என்ற ஐயம் தமிழ் மக்கள் மனங்களை நெருடுகின்றது.

சுயாதீனமான போர்க்குற்ற விசாரணையை சர்வதேசம் நடத்தி, இன்னும் தமது ஆதாரத்தை வலுப்படுத்த வேண்டும் என்பதற்கான ஒரு காரணத்துக்காக மட்டும் போர்க்குற்ற விசாரணை அறிக்கை வெளியிடுவதைக் காலந்தாழ்த்தலாமே ஒளிய வேறு காரணங்கள் எதுவும் ஐ.நா. சபைக்குக் கிடையாது.

தமிழ் மக்களைப் பொறுத்த வரையில் உடனே போர்க்குற்ற விசாரணை அறிக்கை வெளியிடப்படவேண்டும். மக்களின் பூர்வீக நிலங்களிலிலிருந்து இராணுவம் உடனே வெளியேறப்படவேண்டும். காணாமற்போனோர் தொடர்பான உண்மையான தகவல்கள் வெளியிடப்படவேண்டும்.

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுப்பிலுள்ள கைதிகள் உடன் விடுவிக்கப்படவேண்டும். போன்றவற்றை வலியுறுத்தி பல்கலைக்கழக சமூகம் முன்னெடுக்கும் போராட்டத்துக்கு வர்த்தகர்களாகிய நாமும் எமது ஆதரவை வழங்குகின்றோம்’ எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.

Related Posts