Ad Widget

பல்கலைக்கழக பிரவேசத்தில் ஆண் மாணவர்களின் தொகையில் வீழ்ச்சி!

பல்கலைக்கழகங்களுக்கான பிரவேசத்தில் ஆண் மாணவர்களின் தொகை, கடந்த காலங்களை விடவும் கணிசமான அளவு வீழ்ச்சியடைந்திருப்பதாக தென்கிழக்குப் பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் எம்.எம்.எம். நாஜீம் தெரிவித்துள்ளார்.

இந்த வீழ்ச்சிக்கு, தகவல் தொழில்நுட்பத்தை மாணவர்கள் தவறாக பயன்படுத்துவதும் காரணமாக அமையலாம் என்றும் அவர் கூறினார்.

இலங்கை பரீட்சைத் திணைக்களத்தின் ஒன்லைன் ஊடாக பரீட்சை முடிவுகளை பார்ப்பதுபோன்ற ஒரு செயற்திட்டத்தை, கல்முனை சாஹிரா கல்லூரியின் நேற்று (வியாழக்கிமை) அங்குராட்பணம் செய்து வைத்தது.

கல்லுரியின் அதிபர் எம்.எஸ். முஹம்மட் தலைமையில் காரியப்பர் மண்டபத்தில் இடம்பெற்ற குறித்த அங்குராப்பண நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்ட உப வேந்தர் நாஜிம், ஒன்லைன் சேவையை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்து உரையாற்றியபோதே மேற்கண்ட தகவலைத் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், “கல்முனை ஸாஹிரா கல்லூரியில் உருவாக்கப்பட்ட இந்த சேவையானது இப்பாடசாலை தகவல் தொழில்நுட்ப துறையில் ஆர்வம் கொண்டுள்ளதை எடுத்துக்காட்டுகிறது. நாம் வாழும் இன்றைய காலத்தில், தகவல் தொழில்நுட்பத்துடன் மக்கள் பெருவாரியாக இணைந்து சேவைகளைப் பெறுகின்றனர். தகவல் தொழில்நுட்பத்திலேயே தங்களது காலத்தை அதிகமானோர் கடத்துகின்றனர்.

அனேகரின் கைகளில் ஸ்மாட் தொலைபேசிகள் இருக்கின்றன. அவர்கள் உலகத்தை ஒரு நொடியில் சுற்றிவருவருகின்றனர். இதில் சாதகங்களும் பாதகங்களும் உள்ளன. இங்கு முக்கியமாக எடுத்துக்கொள்ள வேண்டிய விடயம் என்னவென்றால் தகவல் தொழில்நுட்பத்தை நாங்கள் எதற்காக பாவிக்கிறோம் என்பதுதான்.

இணையத்தள விளையாட்டில் அதிகம் ஈர்க்கப்பட்டுள்ள குழுவினர் மாணவர்கள்தான். இந்த தொழில்நுட்பத்தை தவறாக பாவித்து அவர்களது முக்கியமான நேரத்தை வீணடிக்கின்றனர். அதனால் அவர்களது வாழ்வில் தோல்வியை சந்திக்கின்றனர்.

நல்ல விடயங்களுக்காக பயன்படுத்தவேண்டிய இந்த நவீன தொழில்நுட்பத்தை சில வளர்ந்தவர்கள் கூட தவறாக பாவித்து அதனூடாக, சில சமூக வலைத்தளங்களில் பொய்யான செய்திகளை பரவவிடுகின்றனர். இவ்வாறான தவறான செயற்பாடுகளால் வரும் செய்திகளின் நம்பகத்தன்மை கேள்விக்கு உள்ளாகி விடுகின்றன.

ஆண் மாணவர்கள் தங்களது கல்வி விடயத்தில் மிகுந்த கரிசனை செலுத்த வேண்டும். அவ்வாறு இல்லாதுபோகுமிடத்து பாரிய சமூக சீர்கேடு ஏற்படும் சந்தர்ப்பம் உள்ளது. அந்த விடயத்தில் பெற்றோரும் ஆசிரியர்களும் மிகுந்த அவதானத்துடன் இருக்கவேண்டும்.

ஒரு பல்கலைக்கழகம் அதன் அமைவிடத்துக்கு அண்மையில் உள்ளவர்களுக்கு பயன்படவேண்டும் என்ற அடிப்படையில் உங்களுக்கு அருகில் உள்ள தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் வளங்களை இப்பிரதேச மானவர்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்” என்றார்.

இந்நிகழ்வில் தென்கிழக்குப் பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி ஏ. றமீஸ் மற்றும் கல்முனை பிரதேச பிரதி கல்விப் பணிப்பாளர் எம்.எம்.எம். றஹீம் ஆகியோரும் குறித்த சேவையை வடிவமைத்த இணைய பொறியியலாளர் ஏ.ஆர்.எம். நிஷாட் உட்பட பலர் அதிதிகளாகக் கலந்து கொண்டனர்.

Related Posts