Ad Widget

பல்கலைக்கழகங்களில் பகிடிவதையை நிறுத்த அரச புலனாய்வு சேவைகளுக்கு அழைப்பு

பல்கலைக்கழகங்களில் பகிடிவதையை முடிவுக்குக் கொண்டுவர அரச புலனாய்வு சேவைகள் (State Intelligence Services) அழைக்கப்பட்டுள்ளது.

“பல்கலைக்கழகங்களில் பகிடிவதையை முடிவுக்குக் கொண்டுவர அரச புலனாய்வு அமைப்பு மற்றும் பிற அரச புலனாய்வு அமைப்புகளும் வழங்கப்படும் என்று பாதுகாப்பு அமைச்சு, பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவுக்கு உறுதியளித்திருந்தது. கல்வி நடவடிக்கைகளுக்கு இடையூறு விளைவிப்பதால், பகிடிவதையில் ஈடுபடும் குழுக்களை நாங்கள் அகற்றவேண்டும்” என்று பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மேஜர் ஜெனரல் கமால் குணரட்ன தெரிவித்துள்ளார்.

பல்கலைக்கழகங்களில் பகிடிவதையைக் கட்டுப்படுத்தும் விவகாரம் தொடர்பாக எட்டு பேர் கொண்ட குழு கடந்த வாரம் தனது அறிக்கையை ஒப்படைத்த பின்னர், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வழக்கமாக, அதிகாரிகள் அழைத்தாலோ அல்லது ஒரு குற்றம் நடந்தாலோ தவிர பொலிஸார், பல்கலைக்கழக வளாகத்திற்குள் நுழைவதில்லை.

இதுதொடர்பில் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளதாவது;

பகிடிவதையை இல்லாதொழிக்கும் நடவடிக்கைகள் குறித்து அரச பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களுடன் ஆலோசிக்கப்பட்டது. அவர்கள் அரச புலனாய்வு சேவையின் உதவியை நாடுவதற்கு ஒப்புக் கொண்டுள்ளனர்.

பல்கலைக்கழகங்களில் பகிடிவதையில் ஈடுபடும் நபர்களைப் பற்றி அதிகாரிகளுக்கு தெரிவிக்க பல்வேறு நடவடிக்கைகளை அறிமுகப்படுத்திய போதிலும், பல்கலைக்கழகங்களில் பொறுப்பான அல்லது மோசமான நபர்களைக் கண்டுபிடிப்பதற்கான ஒரு அதிகாரம் பெற்ற நிறுவனம் எங்களிடம் இல்லை.

இந்த ஏற்பாட்டின் கீழ் பாதுகாப்பு மார்ஷல்கள், புலனாய்வாளர்களுடன் ஒருங்கிணைத்து தகவல்களைப் பகிர்வதன் மூலம் பொலிஸாரின் உதவியுடன் குற்றவாளிகளை கைது செய்ய முடியும். “பகிடிவதை எதிர்ப்பு சட்டம்” வலுவானது. அதன் கீழ் நடவடிக்கைகளை ஆரம்பிக்க முடியும்.

பல்கலைக்கழகங்கள் மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதன் மூலம் தங்கள் சேவைகளை விரிவுபடுத்த முயற்சிக்கும் நேரத்தில் இந்த நடவடிக்கைகள் செயல்படுத்தப்படுகின்றன.

இந்த விவகாரம் தொடர்பாக சட்ட மா அதிபர் திணைக்களத்துடனும் ஆலோசிக்கப்பட்டுள்ளது – என்றார்.

ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதியரசர் சலீம் மார்சூப் தலைமையிலான குழு, பாதிக்கப்பட்ட மாணவர்களை நேர்காணல் செய்த பின்னர், பகிடிவதை மற்றும் அது தொடர்பான வன்முறைகள் குறித்த தனது அறிக்கையைத் தயாரித்துள்ளது.

பகிடிவதையை எவ்வாறு நிறுத்துவது என்பது குறித்து குழு தொடர்ச்சியான பரிந்துரைகளை வழங்கியுள்ளது.

பல்கலைக்கழகங்களில் இடம்பெறும் பகிடிவதை காரணமாக 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் பல்கலைக்கழக கல்வியை கைவிட்டனர் அல்லது பல்கலைக்கழகங்களில் இணையாது தவிர்த்தனர் என்று கூறப்படுகிறது.

பகிடிவதைக்குள்ளான சிலருக்கும் உடல் ரீதியான குறைபாடுகள் ஏற்பட்டுள்ளன.

Related Posts