Ad Widget

பலாலி விமான நிலைய விஸ்தரிப்பிற்கு மக்களின் நிலம் அபகரிக்கப்படாது: இந்தியா

யாழ்ப்பாணம் பலாலி விமான நிலைய விஸ்தரிப்புப் பணிகள் தொடர்பில் எழுகின்ற குற்றச்சாட்டை நிராகரித்த இந்திய துணைத்தூதுவர் நடராஜ், இந்த நடவடிக்கைகளுக்கு மக்களது காணிகள் ஒருபோதும் அபகரிக்கப்படாது என உறுதியளித்தார்.

அதேவேளை தேவைப்படும் பட்சத்தில் விமான நிலையத்திற்கு சொந்தமாகவுள்ள 500 மீற்றர் தொடக்கம் 800 மீற்றர் அளவிலான நிலம் பயன்படுத்துவது தொடர்பில் இறுதி தீர்மானம் எடுக்கவில்லை என்றும் அவர் கூறினார்.

இந்திய விமான ஆணையகத்தின் சென்னையை சேர்ந்த ஐவர் அடங்கிய அதிகாரிகள் குழு நேற்று வியாழக்கிழமை பலாலி விமான நிலையத்திற்கு விஜயம் மேற்கொண்டிருந்தது.

யாழ்ப்பாணம் பலாலி விமான நிலைய அபிவிருத்தி தொடர்பிலான முதன்மை ஆய்வை மேற்கொள்வதற்காக குறித்த குழுவினர் விஜயம் மேற்கொண்டிருந்ததாக, யாழ். இந்தியத் துணைத்தூதுவர் நடராஜ் தெரிவித்தார்.

பலாலி விமான நிலையத்திலிருந்து, தமிழ் நாட்டிற்கு போக்குவரத்தை ஆரம்பிப்பது தொடர்பில் பரசீலனை செய்யப்பட்டு வருவதாகவும் முதன்மை ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில் தொடர்ச்சியாக இந்த விடயம் குறித்து ஆய்வு செய்யப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை பலாலி விமான நிலைய விஸ்தரிப்பிற்கென மக்களின் காணிகள் சுவீகரிக்கபடுதற்கான திட்டங்கள் ஏதும் உள்ளதா? என வினவியதற்கு பதிலளித்த அவர்,

அவ்வாறான எந்த நடவடிக்கையையும் முன்னெடுப்பதற்கு இதுவரை திட்டம் இல்லை. தற்போதுள்ள விமான நிலையத்தின் அளவை மாத்திரம் வைத்து அபிவிருத்தி பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக தமது குழுவினர் தெரிவித்தாக குறிப்பிட்டார்.

இதுமாத்திரமன்றி விமான நிலையத்திற்கென அபிவிருத்தி பணிகளுக்காக தேவைப்பட்டால் மாத்திரமே 500 மீற்றர் தொடக்கம் 800 மீற்றர் வரையான நிலப்பகுதிகள் எடுக்கப்படலாம் என்றும் அவை தற்போதுள்ள விமான நிலைய காணிகளுக்குள் உள்ளடக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

யாழ்ப்பாணம் – பலாலி விமான நிலையத்தின் புனரமைப்பு திட்டம் தொடர்பில் ஆராய்வதற்காக இந்தியாவிலிருந்து ஐந்து பேர் அடங்கிய குழு ஒன்று, கடந்த செவ்வாய்க்கிழமை இலங்கை வந்தடைந்தது.

இதேவேளை இலங்கை அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் குறித்த குழுவினர் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டதாகவும் விமான நிலைய தொழில்நுட்ப பணிகள் தொடர்பிலான ஆலோசனைகளை வழங்கவுள்ளதாகவும் இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் ஊடகச் செயலாளர் ஈஷா ஸ்ரீவாஸ்தா தெரிவித்தார்.

மக்களின் மீள்குடியமர்வை மேற்கொண்ட பின்னர் பலாலி விமான நிலைய அபிவிருத்திப் பணிகளை மேற்கொள்ளுமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தொடர்ச்சியாக அழுத்தங்களைப் பிரயோகித்து வருகின்றது.

மக்கள் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களிலும் இதேகருத்தை வலியுறுத்தி வருகின்ற நிலையிலுமே, மீள்குடியமர்வு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படாது விமான நிலைய அபிவிருத்தி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Posts