Ad Widget

பலாலி விமான நிலையத்தின் விரிவாக்கத்திற்கு வடக்கு முதல்வர் எதிர்ப்பு

இந்தியாவின் நிதியுதவியுடன் முன்னெடுக்கப்படவுள்ள பலாலி விமான நிலையத்தின் விரிவாக்க நடவடிக்கைகளுக்கு, வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் எதிர்ப்பு வௌியிட்டுள்ளார்.

பிரதமர் ரணில் விக்ரமசிங்க, சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க மற்றும் வட மாகாண சபை உறுப்பினர்களுக்கு இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே விக்னேஸ்வரன் இவ்வாறு கூறியுள்ளார்.

பலாலியில் இருந்து தென்னிந்தியாவுக்கான நேரடி விமான சேவைகளை ஆரம்பிக்க வேண்டும் என்ற, பிரேரணையை 2014ம் ஆண்டு வட மாகாண சபை நிறைவேற்றியது.

இரு வாரங்களுக்கு முன்னர் இந்தியா மற்றும் இலங்கை வௌிவிவகார அமைச்சர்கள் பலாலி விமான நிலையத்தை விரிவாக்குவது தொடர்பில் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்தனர்.

இந்தநிலையில், முதலமைச்சரின் இந்த எதிர்ப்பு குறித்து, இந்திய ஊடகம் ஒன்றுக்கு கருத்து வௌியிட்டுள்ள வட மாகாண கல்வி அமைச்சர் தம்பிராஜா குருகுலராஜா, பலாலி விமான நிலையத்தின் விரிவாக்கம் மயிலிட்டி மீன்பிடித்துறையை அண்டியுள்ள மக்களின் நலனைப் பாதிக்கும் என்பதாலேயே இவ்வாறு எதிர்ப்பு வௌியிட்டுள்ளதாக, குறிப்பிட்டுள்ளார்.

மேலும், தற்போது பலாலியிலுள்ள வசதிகளைப் பயன்படுத்தி நேரடியாக தமிழகத்தின் மதுரை மற்றும் திருச்சிக்கிடையில் அல்லது கேரளாவின் திருவானந்தபுரத்துக்கு விமான சேவைகளை ஆரம்பிக் முடியும் எனவும் அவர் பரிந்துரைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, குறித்த விமான நிலையத்தைச் சூழவுள்ள தமது காணிகளை மீளப் பெறும் முயற்சிகளில் அதன் உரிமையாளர்கள் ஈடுபட்டுள்ளதாகவும் இந்தநிலையில் பலாலி விமான நிலைய விரிவாக்கப் பணிகளால் அவர்களது நலன்கள் பாதிக்கக் கூடாது எனவும், வட மாகாண சபை உறுப்பினர் சர்வேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், வடக்கில் சர்வதேச விமான நிலையம் ஒன்றை அமைக்க விரும்பினால் வேறு இடங்கள் உள்ளது எனவும் குருகுலராஜா மற்றும் சர்வேஸ்வரன் ஆகியோர் சுட்டிக்காட்டியுள்ளனர்.

மேலும், தென்னிந்தியாவுக்கான விமான சேவைகளை நடத்துவது, மயிலிட்டி மீன்பிடித் துறைமுகத்தை மீனவர்களிடம் கையளிப்பது மற்றும் மீள்குடியேற்றம் போன்ற விடயங்களை ஒன்றாக கவனத்தில் கொள்ள வேண்டும் என, யாழ்ப்பாணத்தை தளமாகக் கொண்ட அரசியல் பொருளியலாளர் அகிலன் கதிர்காமர் குறிப்பிட்டுள்ளார்.

இதனை அரசாங்கம் சரியாக கையாளுமானால் நல்லிணக்கத்தை நோக்கிய மிக முக்கிய நம்பிக்கையை கட்டியெழுப்பும் விடயமாக இது இருக்கும் எனவும் அவர் கூறியுள்ளார்.

இதேவேளை, முதலமைச்சர் விக்னேஸ்வரனின் இந்தக் கருத்து, குறித்த வேதை்திட்டத்துக்கு தடையாக இருக்காது என, இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட அமைச்சர் டீ.எம்.சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.

மீனவர்கள் பாதிக்கப்படக் கூடாது என்பதே முதலமைச்சரின் நிலைப்பாடு, இந்திய அரசாங்கமும் இதனை அறிவார்ந்த முறையில் கவனத்தில் கொள்ளும் என நான் நம்புகிறேன் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Related Posts