Ad Widget

“பலாலி விமானத் தளம் பொது மக்கள் பாவனைக்கு வசதியாக மாற்றப்படும்போதே அங்கு புதிய முதலீடுகளைச் செய்ய வசதியாக இருக்கும்.”- டக்ளஸ்

2016ம் வருடத்திற்கான வரவுசெலவுத்; திட்ட விவாதத்தில் கலந்து கொண்டு ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ்; தேவானந்தா அவர்கள் நேற்றைய தினம் (01.12.2015) ஆற்றிய உரை

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் 2016ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தில் உரையாற்றக் கிடைத்ததற்காக எமது கட்சியாகிய ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி சார்பிலும், தொடர்ச்சியாக ஆறு தடவைகளாக எமக்கு அரசியல் அங்கீகாரம் வழங்கி என்னை இந்த சபையில் உரையாற்ற வைத்த தமிழ் பேசும் மக்களின் சார்பிலும் நான் எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

2016ஆம் ஆண்டுக்கான இவ்வரவு செலவுத் திட்டமானது, ஒருமித்த ஒற்றுமையான தேசிய அரசாங்கமொன்றிற்குள் சகல இலங்கையருக்கும் புதிய பொருளாதார மற்றும் சமூக ஒழுங்குகளை உருவாக்கக்கூடியதாக இருக்கின்றது. இந்த வரவு செலவுத் திட்டத்தில், கௌரவ பிரதமர் ரணில் விககிரமசிங்க அவர்களினது வழிகாட்டலுக்கு அமைவாக கௌரவ நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க அவர்களினால் வரவேற்புக்குரிய பல திட்டங்கள், பரிந்துரைகள் முன் மொழியப்பட்டுள்ளன. அவற்றை வரவேற்கும் அதேவேளை, மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக அழிவு யுத்தத்திற்கும், பல்வேறு இயற்கை அழிவுகளுக்கும் முகம் கொடுத்துள்ள எமது மக்களின் சார்பாக மேலும் சில பரிந்துரைகளையும், ஆலோசனைகளையும் இச் சபையில் முன்வைக்க விரும்புகின்றேன்.
எமது தாய் நாட்டின் முக்கியமான சமூகச் சவாலாகக் கருதப்படுவது வேலைவாய்ப்புப் பிரச்சினைதான். வேலையின்மைச் சுட்டியானது ஊழியச் சனத் தொகையில் ஏறக்குறைய 4.6 சதவீதமாக காணப்படுகின்ற போதிலும், வடக்கு கிழக்கு மாகாணங்களில் இந்த நிலைமை அதிகமாகும்.

வேலை வாய்ப்பு

வடக்கில் உள்ள இளைஞர் யுவதிகளில் பலர் யுத்தத்தில் ஈடுபடுத்தப்பட்டதாலும், யுத்த பாதிப்புகளுக்கு முகம் கொடுத்ததாலும் அவர்கள் தொடர்ச்சியான கல்வியைப் பெறமுடியாமலும், தொழில் முயற்சிகளில் ஈடுபட்டு தமது ஆற்றலை வளர்த்தெடுக்க வாய்ப்புகள் கிடைக்காமலும் இருக்கின்றனர். இது ஒரு முக்கியப் பிரச்சினையாகும்.

இங்குள்ள இளைஞர், யுவதிகள் சுயமாக தொழில் வாய்ப்புக்களை மேற்கொள்ள முடியாமலும், வாய்ப்புக்களை பயன்படுத்த முடியாமலும் இருக்கின்றனர். ஜேர்மன் தொழில்நுட்ப ஒத்துழைப்பு நிறுவனத்தினால் நிதியளிக்கப்பட்டு, கிளிநொச்சியில் நிர்மானிக்கப்படுகின்ற தொழிற்பயிற்சி நிலையம் அண்மையில் திறந்து வைக்கப்படவுள்ளதாக நிதி அமைச்சரினால் குறிப்பிடப்பட்டுள்ளது. அதை வரவேற்கிறேன்.

அதேவேளை அங்கு வழங்கப்படுகின்ற தொழிற் பயிற்சிகள் வடக்கில் புனர்வாழ்வு பெற்றுள்ளவர்கள் மற்றும் கல்விசார் ஆற்றல்களை வளர்க்க வாய்ப்புக் கிடைக்காதோரின் ஆற்றல்களை புரிந்து கொண்டு அவர்களை அதிகமாக உள்வாங்கும் விதமாக அமையப்பெற வேண்டும். ஒவ்வொரு வருடமும் 08, 10, 12 ஆம் வகுப்புப் பரீட்சைகளின் பின் கல்வியைத் தொடரமுடியாமலும், கல்வியை இடை நடுவில் கைவிடுகின்றவர்களாகவும், பெருந்தொகையான இளைஞர், யுவதிகள் நம்மத்தியில் உருவாகின்றார்கள். அவர்களையும் கவனத்தில் கொண்டு, அவர்களுக்குப் பொறுத்தமான தொழில் பயிற்சிகளை வழங்க வேண்டும். அவர்களுக்கு தொழில் வாய்ப்புக்கள் பகிர்ந்தளிக்கப்படாத போதே பலர் சமூக விரோத மற்றும் சட்டவிரோத காரியங்களில் ஈடுபடுவதற்கு ஆளாகின்றார்கள். ஆகவே ஒவ்வொரு வருடமும் இத்தகையவர்களின் அதிகரிப்பையும் நாம் கவனத்தில் எடுக்க வேண்டும். இதற்காக தற்போது இயங்கிக்கொண்டிருக்கின்ற தொழில்நுட்ப கல்லூரிகளின் வளங்களை அதிகரித்து, தொழில் கல்வியை வழங்கும் வகையிலும் தனியார் தொழில் வாய்ப்புக்களை ஊக்குவிக்கின்ற உற்பத்தித் தேவைகளுக்கேற்ற வகையிலும் பயிற்சி செயற்திட்டங்களை ஏற்படுத்தப்பட வேண்டும். இதற்கு மேலதிகமாக இருக்கின்ற இடைவெளியைக் குறைப்பதற்காக தற்காலிகமாக வாழ்க்கைத் தொழிற்பயிற்சி நிலையங்களை ஆரம்பித்து ஊக்குவிப்புக் கொடுப்பனவுடன் விசேட பயிற்சித்திட்டங்களைச் செயற்படுத்த வேண்டுமெனவும் இச்சந்தர்ப்பத்தில் கேட்டுக்கொள்கின்றேன்.

கல்வி

ஒரு காலத்தில் வட மாகாணம் கல்வியில் முதன்மைப் பெறுபேறுகளைப் பெற்றுக் கொண்டது. ஆனால் தற்போதைய வட மாகாணத்தின் கல்வி நிலையோ மிகவும் பின் தங்கியுள்ளது. அதற்குக் காரணமும் நடந்து முடிந்த அழிவு யுத்தம்தான். இருந்தபோதும் அக்கால கட்டத்தில் கல்வியை பாதுகாக்கவும், அதன் பெறுபேறுகளை முன்னோக்கி நகர்த்தவும் கணிசமான முயற்சிகளை நாங்கள் எடுத்திருந்தோம். கடந்த இரண்டு வருடகாலமாக சரியான வழிகாட்டல் இல்லாது ஒருவகை மந்த நிலையிலேயே கல்வியை முன்னேற்றுவதற்கான செயற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.

உதாரணமாக ஐந்தாம் ஆண்டு மாணவர்களுக்கான புலமைப் பரிசில் பரீட்சைகளில் வட மாகாண மாணவர்கள் திறமைச் சித்திகளைப் பெற்றுக் கொண்டாலும், ஜீ.சீ.ஈ சாதாரண தரப் பரீட்சையிலும், உயர்தரப் பரீட்சையிலும் மாணவர்களின் பெறுபேறுகள் மிகவும் வீழ்ச்சியடைந்துள்ளன. வட மாகாண சபையின் கல்வி அமைச்சு, கல்வி மேம்பாட்டுக்காக எவ்வாறான நெறிப்படுத்தல்களைச் செய்கின்றது?. குறிப்பாக வட மாகாணத்தில் உள்ள பாடசாலைகளின் ஆசியர் பிரச்சினை, வளப் பற்றாக்குறை, வளப் பங்கீடு என்பவற்றைத் தீர்ப்பதிலும், விஞ்ஞான ஆய்வு கூடங்களில் காணப்படும் குறைபாடுகளை நிவர்த்தி செய்வதிலும், வாசிக சாலைகளை ஏற்படுத்திக் கொடுப்பதிலும், பாடசாலைச் சூழலை சுகாதாரமானதாக பாதுகாப்பதிலும் எவ்விதமான அக்கறையையும் செலுத்துவதில்லை என்பதை சுட்டிக்காட்ட விரும்புகின்றேன். குறிப்பாக வட மாகாணத்தில் மேலோட்டமாக ஆசிரியர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கலாம். இருந்தும் பாடரீதியாக, கணிதம், ஆங்கிலம், விஞ்ஞானம், தகவல் தொழில்நுட்பம் ஆகிய பாடங்களுக்கான ஆசியர்கள் மிகக் குறைவாகவே இருக்கின்றார்கள்.
குறிப்பாக வட மாகாணத்திலுள்ள பாடசாலைகளின் சுத்தம், சுகாதாரம் மிக மிகமோசமான நிலையிலேயே காணப்படுகின்றது. இதனால் விஷேடமாக பெண் பிள்ளைகள் பாடசாலைகளில் உள்ள மலசல கூடங்களை பாவிப்பதையே வெறுக்கும் அளவுக்கே அவை இருக்கின்றன என்பதை கவலையோடு குறிப்பிகின்றேன்.

வறுமை

தொகை மதிப்பு புள்ளிவிபரத் திணைக்களத்தின் தரவுகளின்படி வறுமைச் சுட்டியானது 6.7 ஆகக் குறிப்பிடப்படுகின்றது. எனக்குத் தெரிந்தவரையில் இந்த புள்ளிவிபரம் முழு நாட்டுக்கும் சராசரியாக பொறுத்தமானதாக இருக்கலாம். விஷேடமாக மேல் மாகாணத்தில் வறுமைச் சுட்டியானது 1.4 ஆக இருக்கின்றது. அதேபோல் வட மாகாணத்தின் வறுமைச்சுட்டியானது 25 ஆக, அதிலும் முல்லைத்தீவின் வறுமைச் சுட்டியானது 28 ஆக இருக்கின்றது.

முல்லைத்தீவின் வறுமைச் சுட்டியானது, மிகவும் வறுமையில் வாடுகின்ற சில ஆபிரிக்க நாடுகளின் வறுமைச் சுட்டி எண்ணுக்குச் சமாந்தரமாகவே இருக்கின்றது. இந்த நிலைமையை விஷேடமாக கவனத்தில் எடுத்து அங்கு வறுமையைப் போக்குவதற்கு அரசாங்கம் உரிய திட்டங்களையும், நிதி ஒதுக்கீடுகளையும் செய்யவேண்டும்.

கடந்த காலத்தில் யுத்தப்பாதிப்புக்களுக்கு முகம் கொடுத்த மக்களின் வாழ்வாதாரத்தையும், பொருளாதாரத்தையும் மேம்படுத்துவதற்கான திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டிருந்தாலும், அவை போதுமானதாகப் பூர்த்தி செய்யப்படவில்லை. வட மாகாண மக்கள் பெரும்பாலும், விவசாயத்தையும், கடல் வளத்தையும் நம்பியே தமது பொருளாதார ஈட்டலைச் செய்கின்றனர்.

எனவே சொந்த நிலத்தில் அச்சமற்று விவசாயத்தை செய்வதற்கும், இந்திய மற்றும் தென் இலங்கை மீனவர்களின் அத்துமீறல்களற்று கடல் தொழிலைச் செய்வதற்கும் வட மாகாண மக்களுக்கு வசதிகள் செய்து கொடுக்கப்பட வேண்டும். குறிப்பாக வட மாகாணத்தின் கடற் பிராந்தியத்தில் அத்துமீறிய கடற்றொழிலில் ஈடுபடுகின்றவர்களை தடுத்து நிறுத்த வேண்டும். தடை செய்யப்பட்ட கடற்றொழில் உபகரணங்களைப் பயன்படுத்தி அத்துமீறுகின்ற கடற்றொழிலாளர்கள் தொழில் செய்வதால் எமது கடல்வளம் பாதிக்கப்படுகின்றது. எமது கடற்தொழிலாளர்களின் வாழ்வாதாரம் அடிக்கடி பாதிக்கப்படுகின்றது. எமது தொழிலாளர்களின் மீன்பிடி உபகரணங்களையும், அத்துமீறி வருகின்றவர்கள் அழித்துச் சேதப்படுத்தி விடுகின்ற அநியாயங்களும் நடந்து வருகின்றது. எனவே எமது கடல்வளத்தை அழிப்பதற்கும், அபகரித்துச் செல்வதற்கும் எல்லைதாண்டியும், அத்துமீறியும் வருகின்றவர்களை தடுக்க அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தடைசெய்யப்பட்ட கடற்றொழில் உபகரணங்களின் பயன்பாடுகளைத் தடுப்பது தொடர்பிலான புதிய சட்டவாக்கம் உருவாக்க வேண்டியது அவசியம். ஏனெனில் அது இன்று சுற்றறிக்கை வடிவிலேயே இருக்கின்றது. இதேபோல் இலங்கை அரசும் தனது நல்லெண்ண உறவுகளைப் பயன்படுத்தி இந்தியாவிலும் அவ்வாறான சட்டத்தைக் கொண்டுவர முயற்சிக்க வேண்டும். எல்லைதாண்டி வருகின்றவர்களை குடிவரவு – குடியகல்வு சட்டத்தின்கீழ் கைது செய்யாமல் 1971 ஆம் ஆண்டு வெளிநாட்டுப் படகுகள் சட்டத்தின்கீழ் அத்துமீறுகின்ற படகுகளையும் அதன் உபகரணங்களையும் கைப்பற்ற வேண்டும். பேச்சுவார்த்தை என்று வரும்பொழுது அத்துமீறிய கடத்தொழிலை நிறுத்திவிட்டே பேச்சுவார்த்தைக்கு வரவேண்டும்.

சுற்றுலாத்துறை

எமது நாட்டின் சுற்றுலாத்துறை தற்போது மேம்பட்டு வருவதை நாம் காணக்கூடியதாக இருக்கின்றது. பேராசியர் புஸ்பரத்தினம் அவர்கள் வடமாகாணத்தின் சுற்றுலாத்துறை தொடர்பாக ஆய்வு செய்து எழுதியுள்ள குறிப்பொன்றில், சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்கும், சுற்றுலாப் பயணிகளை கவர்வதற்கும் எத்தனையோ வாய்ப்புக்கள் வட மாகாணத்தில் காணப்படுகின்றன எனக் குறிப்பிட்டுள்ளார்.

ஆனால், வட மாகாண சபையோ இவ்விடயத்தில் எவ்விதமான அக்கறையையும் எடுத்திருப்பதாக தெரியவில்லை. வரலாற்று ரீதியான இடங்கள், இயற்கை வளங்கள் போதுமான அளவு இருந்தும் மாகாண சபை சுற்றுலாப் பயணிகளை கவரக்கூடிய வகையில் ஆக்கபூர்வமாக எதையும் செய்யவில்லை.

எனவே மத்திய அரசாங்கம் சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்காக முன்னெடுக்கும் திட்டங்களில் வட மாகாணத்தையும் கருத்தில் கொண்டு அங்கும் சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இவ்விடயம் தொடர்பில் வடக்கு மாகாண சபைக்கு வழிகாட்ட வேண்டும். வட மாகாணத்தில் சுற்றுலாத்துறையை மேம்படுத்துவது தொடர்பில் என்ன பேராசியர் புஸ்பரத்தினம் அவர்களின் புத்தகத்திலிருந்து மேலதிக விபரங்களைப் பெற்றுக் கொள்ளமுடியும்.

முதலீடுகள்

தனியார்த் துறை பொருளாதார செயற்பாடுகளுக்கு வசதியளிப்பதுடன் சுதந்திர சந்தைகளின் சிறந்த தொழிற்பாட்டுக்கு முட்டுக் கட்டையாக இருக்கின்ற பல்வேறுபட்ட தடைகளை நீக்குவதற்கு அரசாங்கம் முன்வந்துள்ளதை வரவேற்கின்றேன். என்னைப் பொறுத்தவரையில் உலக தேசகளெங்கும் புலம்பெயர்ந்து வாழும் எமது தாய் நாட்டின் பிரஜைகள் முதலீடுகளைச் செய்யும் வல்லமை பெற்றவர்களாக இருக்கின்றார்கள். அவர்களை முதலீடு செய்வதற்கு வருமாறு அழைக்கவும், ஊக்குவிக்கவும் வேண்டும்.

அதேவேளை, அவர்களுக்கு உண்மைக்குப் புறம்பான தகவல்களை வழங்கி, அநாவசியமான அச்சத்தை ஏற்படுத்தி, முதலீடுகளை செய்ய முன்வராமல் அவர்களைத் தடுக்கின்ற வேலைகளை சில தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களும், சில தமிழ் அரசியல் பிரமுகர்களும் செய்து கொண்டிருக்கின்றார்கள். புலம்பெயர்ந்த நாடுகளில் இவர்கள் உரையாற்றுகின்றபோது, இலங்கையில் இன்னும் நம்பும்படியான இயல்புச் சூழல் உருவாக வில்லை என்றும், அரசாங்கம் தமிழ் மக்களுக்கு கொடுக்கின்ற வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில்லை என்றும், இன்னும் தமிழ் மக்களை பயங்கரவாதிகளாகவே இலங்கை ஆட்சியாளர்கள் நடத்துகின்றார்கள் என்றுமே கூறிவருகின்றார்கள். அதுமட்டுமல்லாமல், இலங்கையில் முதலீடு செய்வதற்கு முன்வருகின்றபோது, இலங்கை அரசு அந்த முதலீட்டை அபகரித்துக் கொள்ளும் என்றும், பல தடைகளை விதித்து முடக்கும் என்றும் பரப்புரை செய்கின்றாரகள். ஆனால் புலம் பெயர்ந்தவர்கள் நேரடியாக இல்லாமல் தமக்கூடாக முதலீடுகளைச் செய்யலாம் என்றும் இவர்கள் இலாபம் தேட முயற்சிக்கின்றார்கள்.

இதே வேளை, இதே அரசியல்வாதிகள்தான் தாமே இந்த அரசை உருவாக்கியவர்கள் என்று மார்தட்டி உரிமை கோரியும் வருகிறார்கள். இன்னும் சிலர் அரசாங்கம் குறித்த அச்ச உணர்வை தொடர்ந்தும் புலம் பெயர் மக்களுக்கு ஊட்டிக்கொண்டு, அதே அரசாங்கத்தோடு தாம் மட்டும் ஒட்டி உறவாடி வருகிறார்கள். அரசாங்கத்தில் ஏதோ ஒரு வகையில் பங்கெடுத்து அதன் பலாபலன்களை தாம் மட்டும் அனுபவித்தும் வருகின்றார்கள். எம்மைப் பொறுத்தவரையில், புலம் பெயர்ந்து வாழும் எமது மக்கள் தமது சொந்த மண்ணில் முதலீடுகளை செய்வதற்கு எந்தவொரு இடைத்தரகர்களும் தேவையில்லை என்றும், எந்த வித அச்சமும் இன்றி புலம் பெயர்ந்து வாழும் மக்கள் தமது சொந்த மண்ணில் தமது சொந்த முதலீடுகளை தாராளமாக செய்யலாம் என்றும் நான் அவர்களை நேசக்கரம் நீட்டி அழைக்கின்றேன்.

இதேவேளை, புலம் பெயர்ந்து போகும்போது அவர்கள் 18 வயதைத் தாண்டியிருந்தால் அவர்களுக்கு இரட்டைக் குடியுரிமையும், இங்கு நடைபெறும் தேர்தல்களில் வாக்களிக்கும் உரிமையும் வழங்க வேண்டும். அப்படி வழங்குவதன் ஊடாக அவர்கள் இங்கு முதலீடுகளைச் செய்ய ஊக்குவிப்பதாகவும் அமையும். புலம்பெயர்ந்தவர்கள் தமது தாய்நாட்டில் முதலீடு செய்வதால் பெருமைபெற்றவர்களாக உனரும் வகையிலும் முதலீட்டாளர்களுக்குரிய அனுகூலங்களைப் பெறமுடியும் என்ற நம்பிக்கையையும் ஏற்படுத்த வேண்டும்.

எனவே, தனியார் பொருளாதார செயற்பாடுகளுக்கும், முதலீடுகளுக்கும் வசதியளிப்பதோடு, தடைகளையும் அகற்றுவதற்கு விரும்புகின்ற அரசாங்கம் குறிப்பாக புலம்பெயர்ந்தோருக்கு இருக்கின்ற பயத்தையும், சந்தேகங்களையும் நீக்கத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இலகுவாக முதலீடுகளைச் செய்வதற்கும், தடைகளற்றுச் செயற்படுவதற்கும் தேவையான வசதிகள் செய்து கொடுக்கப்பட்டால், அவர்கள் முதலீடு செய்ய நிச்சயம் வருவார்கள்.

இவ்வாறு முதலீடுகள் அதிகரிக்கின்றபோது அதிகளவான தொழில் வாய்ப்புக்கள் உருவாகும். அது எமது இளைஞர், யுவதிகளின் ஆற்றலுக்கு அமைவான பயிற்சிகளை வழங்குவதற்கும், தொழில் வாய்ப்புக்களை பெற்றுக் கொள்வதற்கும் வசதியாக அமையும். புலம் பெயர் மக்களின் முதலீடுகளால் எமது வரலாற்று வாழ்விடங்கள் பொருளாதார அபிவிருத்தி அடைந்து விட்டால், தாம் தொடர்ந்தும் அரசியல் நடத்துவதற்கான வாய்ப்புகள் இல்லாமல் போய் விடும் என்பதால் மட்டுமே இங்கு முதலீடு செய்ய வேண்டாம் என்று புலம் பெயர் மக்களை சிலர் தடுத்து வருகின்றனர்.

எனவே, இத்தகைய தடைகளைக் கடந்து காலத்தின் அவசியமாகக் கருதப்படுகின்ற தனியார்துறை பொருளாதார வளர்ச்சியையும், வெளிநாட்டு முதலீடுகளை ஊக்குவிப்பதையும் நாம் செயற்படுத்த வேண்டும். இதேவேளை, புதிய தொழில் நிறுவனங்களின் வருகை, உலக சந்தைக்கு ஏற்ப தயாரிப்புக்கள் என்பவற்றை மனதில் கொண்டு எமது இளைஞர், யுவதிகளுக்கு உரிய பயிற்சிகளை வழங்கி அவர்களின் ஆற்றல்களை வளர்த்தெடுக்க வேண்டும்.

புதிய ஆட்சியின் பெறுபேறுகள்

புதிய அரசாங்கம் ஆட்சிப் பொறுப்பை ஏற்று 11 மாதங்கள் நிறைவடைகின்றன. இக்கால கட்டத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிகேன அவர்களும், பிரதமர் ரணில் விக்ரமசிங்க அவர்களும் பல்வேறு விடயங்களை செயற்படுத்தி வருவதை நான் அறிவேன். ஆனாலும், புதிய அரசோடு இணங்கிச் செயற்படுவதாக மக்களுக்கு காட்டிக் கொள்பவர்களும், அரசின் அதிகார மையங்களில் செல்வாக்குச் செலுத்தக் கூடியவர்களாக இருக்கும் சிலரும் செயற்படுகின்ற விதமானது, புதிய ஆட்சிக்கு அபகீர்த்தியை ஏற்படுத்துவதாகவே அமைகின்றது.

அவர்கள் இந்த புதிய ஆட்சியை தமது அரசியல் மாற்றுக் கருத்துடையோரை பழிவாங்குவதற்கும், அவர்கள் மீது அவதூறுகளை சுமத்துவதற்கும் பயன்படுத்துகின்றனர். இவ்வாறான குறைபாடுகளை குறிப்பாக தமிழர் அரசியல் பக்கத்திலேயே பார்க்கின்றேன். இது இன்று நேற்று தொடங்கிய வரலாறு அல்ல. வரலாற்று காலம் தொட்டு உரிமை பிரச்சினை குறித்து இவர்கள் எழுப்பி வரும் உணர்ச்சி கோசங்கள் அரசுகளிடம் இருந்து எமது மக்களின் உரிமைகளைப் பெறுவதற்காக அல்ல. மாறாக, மாற்றுக்கருத்துள்ளவர்களை, தமக்கு சவாலாக அரசியலில் உள்ளவர்களை ஓரம் கட்டுவதற்கும், பழி வாங்குவதற்குமே உணர்ச்சி கோசங்களைப் பயன் படுத்தி வந்திருக்கிறார்கள்.

மாற்றுக்கருத்து செயற்பாட்டாளர்களை துரோகிகள் என்று தூற்றியவர்களும் இவர்களே, துரோகிகளுக்கு இயற்கை மரணம் இல்லை என்று சொல்லிக் கொடுத்தவர்களும் இவர்களே, படுகொலைகளுக்கு வித்திட்டவர்களும் இவர்களே, வளர்த்த கடா மார்பில் பாய்ந்த கதையாக தாமே வளர்த்து விட்ட துரோகிப்பட்டங்களுக்கு இவர்களுமே பலியாகிப்போனவர்கள் என்பது ஒரு துன்பியல் வரலாறு. இந்த புதிய அரசாங்கத்தை தாமே ஆட்சிப் பொறுப்புக்கு கொண்டு வந்திருப்பதாக தமிழ் மக்களிடம் கூறுகின்ற இவர்கள், கடந்த பதினொரு மாத காலப்பகுதியில் தமிழ் மக்களுக்கு எந்தவொரு அரசியல் இலாபங்களையும் பெற்றுக் கொடுக்கவில்லை. ஆகையால் தமிழ் மக்கள் புதிய அரசினால் ஏமாற்றப்பட்டவர்களாக நினைக்கின்ற அளவுக்கு நிலைமையை மோசமாக்கி இருக்கின்றார்கள்.

தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை, மக்களின் சொந்தக் காணிகளை மீளக் கையளிப்பது, காணாமல் போனோர் தொடர்பில் பரிகாரங்களைக் காண்பது, மாவட்டத்தில் பொலிஸாரினதும், படையினரதும் எண்ணிக்கையை, குடிப்பரம்பலுக்கு ஏற்ப குறைப்பது, இன விகிதாசாரத்துக்கு ஏற்ப பிரசன்னத்தை ஏற்பாடு செய்வது தொடர்பில் இதுவரை புதிய ஆட்சியாளர்களால் நடவடிக்கை எடுக்கப்படவில்லையே என்ற அதிருப்தி தமிழ் மக்களிடம் வளர்ந்து வருகின்றது.

அதேபோல், சில அரச அதிகாரிகளின் அசமந்தப் போக்குகளும், அடாவடித் தனங்களும், புதிய அரசாங்கத்திற்கு அபகீர்த்தியை ஏற்படுத்தும்விதமாக அமைகின்றது. உதாரணத்திற்கு அன்மையில் யாழ்ப்பாணம் மானிப்பாய் பொலிஸார் வீதியால் சென்று கொண்டிருந்த இரண்டு இளைஞர்களை பிடித்து காரணமில்லாமல் தாக்கியுள்ளனர். இவ்வாறான சம்பவங்களாலும் அரசு மீது மக்களுக்கு அதிருப்திகள் ஏற்படுகின்றன.

கொள்கைக் கூற்று

பிரதமர் ரணில் விக்ரமசிங்க அவர்களினால் 2015 நவம்பர் மாதம் 5ஆம் திகதி இச்சபையில் முன்வைக்கப்பட்ட கொள்கைக் கூற்று , 2016 ஆண்டுக்கான இந்த வரவு செலவுத்திட்டத்தின் அடித்தளமாக அமைந்துள்ளது என்பதை நாம் அறிவோம். அதன் அடிப்படையில் ஒரு மில்லியன் வேலை வாய்ப்புக்களை உருவாக்குவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த வேலை வாய்ப்புக்களில் யுத்தப் பாதிப்புக்களை சந்தித்தவர்களுக்கு கூடுதல் முன்னுரிமை வழங்கப்பட வேண்டும். அவர்களுக்கு கடந்த முப்பது வருடங்களுக்கும் மேலாக முறையான வேலை வாய்ப்புக்கள் வழங்கப்படவில்லை. ஏனைய மாகாணங்களுடன் ஒப்பிடுகையில் குறிப்பாக, வடக்கு – கிழக்கில் வேலை வாய்ப்புக்களைப் பெற்றுக் கொள்வதற்கான சந்தர்ப்பங்கள் மிகக் குறைவாகவே இருந்துள்ளன. எனவே இச்சந்தர்ப்பத்திலாவது அவர்களுக்கு கூடுதலான வாய்ப்புக்கள் பகிரப்பட வேண்டும்.

அதேபோல் பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய மாவட்டங்களான கிளிநொச்சி, முல்லைத்தீவு, மொனராகலை போன்ற மாவட்டங்களைத் தெரிவு செய்து அங்கு கிராமிய பொருளாதாரத்தை ஊக்குவிக்கவும், வளர்த்தெடுக்கவும், புதிய பொறுத்தமான செயற்திட்டங்களை வகுக்க வேண்டும். அதனூடாகவே வறுமைச் சுட்டியில் பின்தங்கியுள்ள மாவட்டங்களின் பொருளாதாரத்தை வளர்த்தெடுக்க முடியும்.

காங்கேசன்துறை துறைமுகம்/ பலாலி விமானத் தளம்

அரசாங்கத்தின் கொள்கையானது சந்தைகளில் சுதந்திரமாகச் செயற்படுவதற்கான தடைகளை நீக்குவதனை மையமாகக் கொண்டுள்ளதாக குறிப்பிடுகின்றது. யாழ்ப்பாணத்தில் விற்கப்படுகின்ற இறக்குமதி செய்யப்படுகின்ற பொருட்களில் 65 சதவிகிதமான பொருட்கள் இந்தியாவிலிருந்து, அதுவும் குறிப்பாக தமிழ் நாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டவையாகவே இருப்பதாக அன்மையில் செய்யப்பட்ட ஆய்வொன்று கூறுகின்றது. இவ்வாறு தமிழ் நாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் கொழும்புக்கு கொண்டுவரப்பட்டு பின்னர் நெடும் பயணத்தின் பின்னரே யாழ்ப்பாண சந்தைக்கு வந்து சேருகின்றன. இதனால் அந்தப் பொருட்களின் விலை அதிகரிக்கவும், கால தாமதங்களைச் சந்திக்கவும், பழுதடைந்து அல்லது சேதமடைந்து போகவும் நேரிடுகின்றது.
ஆகவே இறக்குமதி செய்யப்படுகின்ற பொருட்களை நேரடியாகவே யாழ்ப்பாணத்திற்கு கொண்டுவருவதற்கு வசதியாக காங்கேசன்துறை துறைமுகத்தை மக்கள் பயன்படுத்த வசதி செய்யப்பட வேண்டியது அவசியமாகும். கடந்த காலத்தல் பாதுகாப்புப் படையினரின் கட்டுப்பாட்டிலிருந்த காங்கேசன்துறை துறைமுகத்தை தற்போது படையினர் பொதுப்பாவனைக்கு ஒப்படைத்துள்ளனர்.

எனவே துறைமுகத்தை அபிவிருத்தி செய்து விஸ்தரிப்புச் செய்யவும் வேண்டும். காங்கேசன்துறை துறைமுகமானது பொருட்கள் இறக்குமதிக்கு மட்டுமல்லாது, உள்ளுர் உற்பத்திப் பொருட்களை இலகுவாக ஏற்றுமதி செய்து வெளிநாட்டில் சந்தைப்படுத்தவும் வசதியாக இருக்கும். அதுபோல் பலாலி விமானத் தளத்தையும், பொது மக்கள் நெருக்கடிகளற்று உபயோகிப்பதற்கு வழிவகை செய்யப்பட வேண்டும்.

பலாலி விமானத் தளம் பொது மக்கள் பாவனைக்கு வசதியாக மாற்றப்படும்போதே அங்கு புதிய முதலீடுகளைச் செய்ய வசதியாக இருக்கும். முதலீட்டளார்களும் முன்வருவார்கள். பலாலி விமானத் தளத்தை சர்வதேச தரத்துக்கு ( மினி ) புனரமைத்து சேவைகளை வழங்கினால் அதிகமான புலம் பெயர்ந்த மக்களை நாட்டுக்கு வரவழைக்க முடிவதோடு, பெருமளவான வருவாயையும் பெற்றுக் கொள்ளமுடியும்.

நீர் வழங்கல்

யுத்த காலத்தில் கட்டுப்பாடுகள் இல்லாமல் பயன்படுத்தப்பட்ட உரப்பாவனையும், விவாசாய முறைமையும், முறையான வடிகாலமைப்பு மற்றும் கழிவகற்றல் வசதியும் இல்லாததால் யாழப்பாணத்தின் நிலத்தடி நீர் கடுமையான மாசடைவுக்கு உள்ளாகியுள்ளது. யாழ்ப்பாணம் சுன்னாகத்தில் மின் பிறப்பாக்கிகளுக்கு பயன்படுத்தப்பட்ட கழிவு எண்ணையை நிலத்துக்கு அடியில் கசியவிட்டதால் அப்பகுதி நிலத்தடி நீர் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் குடி நீர், விவசாயச் செய்கைகளுக்கான நீர், கால் நடைகளுக்கான குடி நீர் என்பன பாதிக்கப்பட்டுள்ளது. நாளுக்கு நாள் இந்த நிலைமை மோசமடைந்து வருகின்றது இது சம்பந்தமாக மாகாண அரசு விரைவான செயற்பாடு எதையும் கொண்டிருக்கவில்லை. எனவே இவ்விடயத்தில் மத்திய அரசு கூடிய கவனம் எடுக்க வேண்டும்.

மேற்குறித்த காரணங்களால் சுத்தமான குடிநீருக்கான தேவை யாழ்ப்பாணக் குடா நாட்டில் பூதாகரமாக எழுந்து வருகின்றது. இந்தப் பிரச்சினையைத் தீர்ப்பதற்காக இரணைமடுவிலிருந்து மேலதிக நீரை யாழ்ப்பாணத்துக்கு குடிநீர் பயன்பாட்டுக்காக கொண்டுவருவதற்கு திட்டமொன்று முன்னர் கொண்டுவரப்பட்டது. இத்திட்டத்திற்காக 164 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியை வழங்கவும் உலக வங்கி முன்வந்திருந்தது. அந்தத்திட்டம் செயற்படுத்தப்படும்போது அதனோடு சேர்ந்ததாகவே யாழ்ப்பாணத்திற்கான வடிகாலமைப்பு மற்றும் கழிவகற்றல் திட்டமும் இணைக்கப்பட்டிருந்தது.

ஆனால், வட மாகாண சபையினரோ தமது சுய இலாப அரசியல் காரணங்களுக்காக அத்திட்டத்தை நிராகரித்துவிட்டார்கள். இதனால் யாழ்ப்பாணத்தின் நிலத்தடி நீர் வேகமாக மாசடைந்து வருவதோடு, சுத்தமான குடி நீருக்கான தேவையும் அதிகரிக்கத் தொடங்கியிருக்கின்றது. இரணைமடு குடி நீர்த்திட்டத்தை நிராகரித்தவர்கள், அக் குளத்தின் மேலதிகமான நீரை சுண்டிக்குளம் கடலில் திறந்துவிட்டு கடலுக்கு அனுப்பிக் கொண்டிருக்கின்றார்கள். நாட்டின் நீர் வளத்தை இவ்வாறு வீண் விரையம் செய்யும் செயற்றிறன் அற்ற செயற்பாட்டை மத்திய அரசு கவனத்தில் கொள்ளவேண்டும்.

அரசியல் தீர்வு

ஒரு சுமுகமான பொருளாதார வளர்ச்சியும், புலம் பெயர்ந்தோரின் முதலீடுகளும் எமது நாட்டுக்கு கிடைக்கப்பெற வேண்டுமாக இருந்தால் நாட்டில் ஸ்தீரமான அரசியல் சூழல் பாதுகாக்கப்பட வேண்டும். சமாதான சூழல் நிலவ வேண்டும்.

இலங்கையில் வாழம் சகல மக்களுக்கும் ஏற்புடையதான அரசியல் தீர்வு காணப்பட வேண்டியது அவசியமாகும். அந்த தீர்வு எவ்வாறு அமைய வேண்டும் என்பது பற்றி ஜனாதிபதி தலைமையில் கூட்டப்பட்டிருக்கும் சர்வகட்சிகளின் குழுவுக்கு தெளிவான அறிக்கை ஒன்றை நாம் வழங்கியிருக்கின்றோம். அதற்கு முன்னர் உண்மையான நல்லிணக்கத்தை ஏற்படுத்த அரசு முன்மாதிரியான சில காரியங்களை செய்ய வேண்டும். அதற்காக சில முக்கிய தனி நபர் பிரேரணைகளை ஏற்கெனவே இச்சபையில் முன் வைத்திருக்கின்றேன். அவையாவன, அழிவு யுத்தத்தில் இறந்துபோன எம் உறவுகளை நினைவு கூற ஒரு பொதுத்தினத்தை அரசு அறிவிக்க வேண்டும். அதேபோல் யுத்தத்தில் இறந்துபோன எம் உறவுகளை நினைவு கூறவும், மதச் சடங்குகளைச் செய்யவும் வசதியாக பொது நினைவுத் தூபி ஒன்று அமைக்கப்பட வேண்டும். அந்த நினைவுத் தூபியை ஓமந்தையில் பொருத்தமான இடத்தில் அமைக்கலாம் என்பது எமது அபிப்பிராயமாகும். அதேபோல் யுத்தச் சின்னங்களையும், அழிவுச் சின்னங்களையும், யுத்த சிதைவுகளையும் அந்த இடங்களிலிருந்து அப்புறப்படுத்தி அவற்றை ஆக்கங்களுக்கான இடங்களாகவும், நம்பிக்கை தருவதாகவும் மாற்ற வேண்டும்.

அரசாங்கச் சொத்து

அரசாங்கச் சொத்துக்கள் முறையாக முகாமைத்துவம் செய்யப்படுவதில்லை என்ற விடயத்தையும் நாம் புறந்தள்ளிவிட முடியாது. உதாரணமாக வட மாகாண சபையின் கணக்காய்வாளரினால் வெளியிடப்பட்டிருக்கும் அறிக்கை ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதில், வட மாகாண சபையினால் நிலையான சொத்துக்கள் தொடர்பான பதிவுகள் அரச சுற்றறிக்கையின் நிமித்தம் பேணப்படுவதில்லை என்று குறிப்பிட்டிருக்கின்றார்.

அது மட்டுமல்ல அரச சுற்றறிக்கையின் அடிப்படையில் எரிபொருள் பாவனை சம்பந்தமான பதிவேடுகள் கூட முறையாக பின்பற்றப்படுவதில்லை என்றும் வட மாகாண சபையின் கணக்காளர் நாயகத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நிதிச் செலவீனம் தொடர்பாக வட மாகாண சபையின் செயற்பாடுகளை ஆராய்கின்ற போது, இவ்வருடம் சுமார் 38 சதவிகிதத்தையே ஐப்பசி மாதம் இறுதிவரை அவர்கள் மூலதனச் செலவு செய்திருக்கின்றார்கள். கடந்த வருடமும் அவர்களால் 690 மில்லியன் ரூபாய்களை வருட முடிவுக்குள் மூலதனச் செலவு செய்யாமல் அதைச் செலவாகக் காட்டிவிட்டு, அப்பணத்தை வங்கி வைப்பில் வைத்திருந்து இவ்வருடம் ஒக்ரோபர் மாதமளவிலேயே அந்தப் பணத்தை செலவு செய்திருந்தார்கள.; இவ்வாறு செயற்றிறன் அற்று வடக்கு மாகாண சபை செயற்படுவதால் மக்களே பாதிக்கப்படுகின்றனர் என்பதையும் இச்சபையில் கூறிவைக்க விரும்புகின்றேன்.

விஷேட தேவை உடையோர்

இயற்கையாகவே விஷேட தேவையுடையவர்களாக பலர் நம்மிடையே இருக்கின்ற நிலையில் நடந்து முடிந்த அழிவு யுத்தமானது 12000க்கும் மேற்பட்டவர்களை விஷேட தேவையுடையவர்களாக மாற்றியுள்ளது. இவர்களுக்கு சரியான பயிற்சியும், உரிய தொழில் வாய்ப்பும் அவசியமாகும். இவர்களை உள்வாங்குவதற்கு பௌதீக உட்கட்டமைப்பும், முதலீட்டு உதவிகளும் விஷேடமாக வழங்கப்பட வேண்டும். அத்தோடு அவர்களே சுய பொருளாதாரத்தில் தங்கி வாழ்வதற்கு நிலையான தொழில் வாய்ப்புக்களையும் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். அப்படி உழைக்க முடியாதவர்களுக்கு நிவாரணங்களை வழங்கவும் திட்டங்கள் அவசியமாகும். அதேபோல் விஷேட தேவையுடையோருக்கு வசதியாக வீட்டிலும், அலுவலகங்களிலும், தொழில் நிலையங்களிலும் கட்டமைப்புக்கள் ஏற்படுத்தப்பட வேண்டும்.

வட மாகாணத்தை எடுத்துக் கொண்டால், பெண்களைத் தலைமைத்துவமாகக் கொண்டுள்ள சுமார் 40 ஆயிரம் குடும்பங்கள் இருப்பதாகப் பிரச்சாரம் செய்கிறார்கள். ஆனால் வட மாகாண சபையின் நிர்வாகப் பதிவுகளின் படி வடக்கில் 7500 குடும்பங்களே பெண்களைக் குடும்பத்தலைவராகக் கொண்டிருப்பதாக மாகாண சபையின் இணையத் தளத்தில் குறிப்பிடப் பட்டிருக்கின்றது. இந்த விடயத்திலும், வடக்கு மாகாண சபை தெளிவான புள்ளிவிபரத்தை இதுவரையும் திரட்டவில்லை. குடும்பத் தலைவிகளின் பொருளாதாரச் சுமையை குறைப்பதற்கு தேவையான முழுமையான நடவடிக்கைகளை முன்னெடுக்கவில்லை.

உப்பளம்

உப்பளம் வடக்கு மாகாணத்தில் முக்கியமான தொழில் வாய்ப்பாகும். ஆனையிறவு உப்பளத்தை சரியாக இயக்கினால் குறிப்பாக பரந்தன் இராசயனத் தொழிற்சாலைக்கு தேவையான முழுமையான மூலப் பொருட்களையும் வழங்க முடியும். இந்த உப்பளம் முன்னர் எனது அமைச்சுக்குக் கீழே இருந்தபோது, 100 மில்லியன் ரூபாய்களை அதன் மீள்கட்டுமானத்துக்கும், அபிவிருத்திக்கும் ஒதுக்கி மீள இயக்குவதற்கு தேவையான முயற்சிகளை மேற்கொண்டிருந்தேன். உப்பள வயல்களை புனரமைக்கவும், அபிவிருத்தி செய்யவும், கிராமிய பெண்கள் அபிவிருத்திச் சங்கங்களையே ஒப்பந்த அடிப்படையில் இணைத்து பணிகளை முன்னெடுத்திருந்தேன். அதன் ஊடாக அவர்களுக்கு தொழில் வாய்ப்பை ஏற்படுத்தியதோடு, அவர்களது பொருளாதாரத்தை உயர்த்துவதற்கும் திட்டமிட்டுச் செயலாற்றியிருந்தேன்.

ஆனையிறவு உப்பளத்தின் தேவைகளை துரிதமாக பூரணப்படுத்தி உற்பத்தியை ஆரம்பித்தால் பல ஆயிரம் பேருக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் தொழில் வாய்ப்பை பெற்றுக் கொடுக்க முடியும். எனவே ஆனையிறவு உப்பளத் தொழிற்சாலையின் பணிகளை துரிதப்படுத்துமாறு கேட்டுக் கொள்கின்றேன்.

பொருளாதாரம்

நாட்டினுடைய மொத்த உள்ளுர் உற்பத்தியில் 48 வீதம் மேல் மாகாணத்திலேயே முடங்கிக் கிடப்பதாக புள்ளி விபரங்கள் கூறுகின்றன. இலங்கை முதலீட்டுச் சபையினதும், வர்த்தக வாணிபத் திணைக்களத்தினதும் அங்கீகரிக்கப்பட்ட தொழிற்சாலைகளில் 75 வீதமானவையும் மேல் மாகாணத்திலேயே இருக்கின்றன. இது விஸ்தரிக்கப்பட வேண்டும். குறிப்பாக வட மாகாணத்தில் ஆனையிறவு உப்பளம், காங்கேசன்துறை சீமெந்துத் தொழிற்சாலை, பரந்தன் இரசாயனத் தொழிற்சாலை, ஒட்டுசுட்டான் ஓட்டுத் தொழிற்சாலை கிழக்கு மாகாணத்தில் வாழைச்சேனை கடதாசிக் கூட்டுத்தாபனம் என்பவற்றை மீளவும் இயக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.
அதற்கு மேலதிகமாக ஐஸ்கட்டித் தொழிற்சாலைகள், கடல் உணவு வகைககளை பதப்படுத்தும் தொழிற்சாலைகள், மற்றும் எமது இளைஞர், யுவதிகளுக்கு அவர்களின் தகைமைகளுக்கு அமைவாக தொழிற் பயிற்சிகளையும், தொழில் வாய்ப்பையும் வழங்குகின்ற புதிய தொழில் முயற்சிகளையும் உருவாக்க வேண்டும். குறிப்பாக இந்திய அரசின் நிதி உதவியோடு நான் அமைச்சராக இருந்தபோது எடுத்துக் கொண்ட கடுமையான முயற்சியின் பலனாக யாழ்ப்பாணம் அச்சுவேலி கைத் தொழில்பேட்டையை மீளவும் இயக்க ஆரம்பித்தேன். அந்த முயற்சிகளுக்கு பல தடைகளும், முட்டுக்கட்டைகளும் இருந்தன. ஆனாலும் வெற்றிகரமாக அச்சுவேலி கைத்தொழில் பேட்டையை உபயோகமானதாக ஆரம்பிப்பதற்கு பாடுபட்டிருக்கின்றேன். புதிய அரசாங்கமும் ஒத்துழைப்பு வழங்கி அச்சுவேலி கைத் தொழில் பேட்டையை மேலும் புதிய உத்வேகத்துடன் இயங்கச் செய்யவேண்டும் என்று கேட்டுக் கொள்கின்றேன்.

சுற்றுச் சூழல் பாதுகாப்பு

சனத்தொகை பெருக்கத்தையும், தேவைகளையும் கருத்தில் கொண்டு சுகாதார சேவைகளும், சூழலை சுத்தமாக்கும் தொழில் முறையும் நவீன வசதிகளுடன் விஸ்தரிக்கப்பட வேண்டும். குறிப்பான யாழ்ப்பாணத்தை எடுத்துக் கொண்டால் அது குப்பை மேடாகவே காட்சியளிக்கின்றது. உள்ளுராட்சி சபைகள் குப்பைகளை அகற்றும் வேலைத்திட்டத்தில் போதிய திறனோடு செயலாற்றவில்லை. நாளாந்தம் சேகரிக்கப்படும் குப்பைகளையும், கழிவுகளையும் கொட்டுவதற்குகக் கூட முறையான ஏற்பாடுகளையும், அதற்கு பொறுத்தமான இடத்தையும் கொண்டிருக்காத நிலையிலேயே யாழ்ப்பாணத்தில் உள்ளுராட்சி சபைகளின் செயற்பாடுகள் இருக்கின்றன.

இந்தக் குறைபாட்டை நேரடியாக நிவர்த்திக்காவிட்டாலும், அவற்றை ஒழுங்கு படுத்தவேண்டிய பொறுப்பை வட மாகாண சபை சரியாக நிறைவேற்றவில்லை. ‘ஏட்டுச் சுரக்காய் கறிக்கு உதவாது’ என்பதுபோல வெறுமனவே தீர்மானங்களை மட்டுமே அதிகளவில் நிறைவேற்றிக் கொண்டிருப்பதிலேயே காலத்தை வீணடித்துக் கொண்டிருக்கின்றார்கள்.

சிறு வியாபாரம்

சிறுவியாபார முயற்சிகளில் ஆர்வமுள்ளவர்களுக்கு மூலதனக் கடன்களை பெற்றுக் கொள்வதற்கு வசதிகளைப் பெற்றுக் கொடுக்க வேண்டும். யுத்தத்திற்கு முன்னர் சிறு கடன்களைப் பெற்றுக் கொண்டவர்களில் பலர் தற்போது உயிரோடு இல்லை. உயிருடன் இருக்கின்றவர்கள் பலர் தமது சொந்த வாழ்விடங்களை இழந்தும், தொழில் வாய்ப்புக்களை இழந்தும், நிவாரணங்களில் தங்கியிருப்பவர்களாகவே துயரங்களிலிருந்து மீண்டு கொண்டிருக்கின்றார்கள். அவர்களுக்கு பழைய கடன்களை மீளவும் செழுத்த முடியாதுள்ளதை விளங்கிக் கொள்வது அவசியமாகும். அத்தகையவர்களுக்கு புதிதாக கடன்களைப் பெற்றுக் கொள்ள முடியாதுள்ளது. அவர்களில் பலரை வங்கிகள் கறுப்புப் பட்டியலில் சேர்த்துள்ளது.

ஆனாலும் அவர்கள் புதிய தொழில் முயற்சிகளை தொடங்குவதற்கு பழைய பிரச்சனைகளை கருத்தில் கொள்ளாமல் சிறு கடன்வசதிகளை வழங்குவதற்கு விஷேட ஏற்பாடு ஒன்று ஏற்படுத்தப்பட வேண்டும். இவர்களின் கடன் கோரிக்கையை பழைய பிரச்சினைகளின் தொடர்ச்சியாகப் பார்ப்பது பொறுத்தப்பாடாக இருக்காது.

சிறிய கைத்தொழில் பூங்காக்களை யாழ்ப்பாணம், வன்னி மாவட்டங்களில் ஸ்தாபிப்பதற்கு தனியார் துறையினரையும், முதலீட்டாளர்களையும் கௌரவ நிதி அமைச்சர் கோரிக்கை விடுத்திருப்பதை வரவேற்கின்றேன். வெறும் முன்மொழிவுகளாக மட்டும் அவை இருந்துவிடக் கூடாது. ஏற்கனவே நான் குறிப்பிட்டதைப்போல், புலம் பெயர்ந்தோரின் முதலீட்டுக்கும், தனியார் துறையினரின் முதலீட்டுக்கும் தடைகளற்ற, அச்சமற்ற புறச்சூழலை ஏற்டுத்த அரசாங்கம் துரிதமான நடவடிக்கைகைகளை எடுக்க வேண்டும். அப்போதுதான் இச்சபையில் முன்மொழியப் பட்டிருப்பதைப்போல், வட மாகாணத்தில் சிறிய கைத்தொழில் பூங்காக்களையும், தொழில் பேட்டைகளை ஏற்படுத்தவும் பலரும் முன்வருவார்கள் என்பதையும் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.

மீன்பிடித் துறைமுகங்கள்.

கடற்றொழிலுக்கு வசதியளிப்பதற்காக குளிரறைகளைக் கொண்ட களஞ்சிய சாலைகளுடனான நவீன தொழிற்நுட்ப வசதிகளைக் கொண்ட உள் நாட்டு கடற்தொழில் துறைமுகங்களை அபிவிருத்தி செய்வதற்கும், தரமுயர்த்துவதற்கும் முன்மொழியப்பட்டிருக்கும் அதேவேளை, வல்வெட்டித்துறை, காரைநகர் மற்றும் சில கடற்றொழில் துறைமுகங்களையும் அபிவிருத்தி செய்வதற்கு நிதி அமைச்சர் 750 மில்லியன் ரூபாய்களை ஒதுக்கியிருப்பதை வரவேற்கின்றேன். இருந்தபோதும் அபிவிருத்தி செய்வதற்கு துறைமுகங்களை தெரிவு செய்யும்போது அது பலபேருக்கு பயன் உள்ளதாக அமைய வேண்டும் என்பதை ஆராய்ந்து தெரிவு செய்ய வேண்டும். இதில் ஏற்கெனவே திட்டமிட்டதன்படி யாழ்ப்பாணத்தில், பருத்தித்துறை மற்றும் குருநகர் மீன்பிடித் துறைமுகங்களை அபிவிருத்தி செய்ய நிதி ஒதுக்கீடுகள் செய்யப்பட வேண்டும்.

ஆனால் வட மாகாணத்தைப் பொறுத்தவரை ஒரு காலத்தில் கடற்றொழிலுக்கு பெரும்பங்களிப்பு வழங்கியதும், பிரதானமான கடற்றொழில் துறைமுகங்களில் ஒன்றாகவும் இருந்த மயிலிட்டி துறைமுகத்தை மீண்டும் இயக்க அரசு ஆவண செய்ய வேண்டும்.

மயிலிட்டி துறைமுகமானது, நீண்ட காலமாக பாதுகாப்பு வலயமாகவே இருந்துவருகின்றது. யுத்தம் நிறைவுக்கு கொண்டுவரப்பட்டு ஆறு வருடங்களாகிவிட்ட போதும் பாதுகாப்பு வலயப் பகுதியாக மயிலிட்டி துறைமுகத்தை குறிப்பிட்டு மக்கள் பாவனைக்கு தடை ஏற்படுத்துவதை ஏற்றுக் கொள்ளமுடியாதுள்ளது. முன்னைய ஆட்சிக் காலத்திலும் மயிலிட்டி துறைமுகத்தை மக்கள் பாவனைக்கு மீள ஒப்படைக்க வேண்டும் என்றும், அது புதிய வசதிகளுடன் அபிவிருத்தி செய்யப்பட்டு கடற்றொழிலாளர்களின் தொழில் முயற்சிகளுக்கு ஒத்துழைக்கும் வகையில் மாற்றியமைக்கப்பட வேண்டும் என்றும் தொடர்ச்சியான கோரிக்கைகளை விடுத்து வந்திருக்கின்றேன்.
புதிய அரசாங்கமானது மயிலிட்டி கடற்றொழில் துறைமுகத்திற்கான நியாயமான கோரிக்கையைப் புரிந்து கொண்டு, அதை மீண்டும் மக்கள் பாவனைக்கு திறந்துவிட வேண்டும் என்று கேட்டுக் கொள்கின்றேன்.

முல்லைத்தீவு நந்திக்கடல் பகுதியை புனரமைப்பதன் ஊடாக சுமார் 3500 குடும்பங்கள் நேரடியாகவும், மறைமுகமாகவும் நன்மையைப் பெறுவார்கள். அதற்கும் அரசாங்கம் நிதி ஒதுக்கீட்டைச் செய்யவேண்டுமென கேட்டுக் கொள்கின்றேன்.

பொருளாதார வலயம்

வவுனியாவில் புதிய பொருளாதார வலயமொன்றினை ஏற்படுத்துவதற்கு கிராமிய பொருளாதார அமைச்சுக்கு 200 மில்லியன் ரூபாய்களை ஒதுக்கியிருப்பதை வரவேற்கின்றேன்.
அதேவேளை ஒதுக்கப்பட்டிருக்கும் நிதி போதுமானதாக இருக்காது என்பதே எனது அவதானிப்பாகும். எனவே பொருளாதார வலயம் ஒன்றுக்கான திட்டமானது, நவீன தொழில் முயற்சிகளுக்கு உதவும்வகையில் வகுக்கப்படுவதோடு, போதுமான நிதியும் ஒதுக்கப்பட வேண்டும்.

பல்கலைக்கழகம்
புதிதாக கிளிநொச்சியில் பொறியியல் பீடத்தையும், வவுனியாவில் விவசாய பீடத்தையும் அமைக்க முன்மொழிவதாக கௌரவ நிதி அமைச்சர் குறிப்பிட்டிருக்கின்றார். ஆனால் தற்போது கிளிநொச்சியில் புதிதாக பொறியியல் பீடமும், மீள்ளமைவாக விவசாய பீடமும் அமையப் பெற்றிருக்கின்றன என்பதை தெரிவித்துக் கொள்கின்றேன். முன்னைய ஆட்சியின்போது, பாதுகாப்புத் தேவைக்காக படையினர் நிலை கொண்டிருந்த யாழ் பல்கலைக்கழகத்திற்குரிய அறிவியல் நகரை, 658 ஏக்கர் காணியை கடுமையான முயற்சிகளைத் தொடர்ந்து அதை மீண்டும் பெற்றுக் கொடுத்தேன்.

இந்திய நிதி உதவியுடனும், இலங்கை அரசாங்கத்தின் நிதி உதவியுடனும் அவ்விரு பீடங்களும் கிளிநொச்சியில் தற்போது இயங்கிவருகின்றன. எனவே வவுனியாவில் விவசாய பீடத்தை நிறுவுவது என்பது பொறுத்தப்பாடாக இருக்காது. கிளிநொச்சியில் இருக்கின்ற இரண்டு பீடங்களுக்கும் தேவையான வளங்களையும், குறைபாடுகளையும் தீர்ப்பதற்கு நிதி அமைச்சினால் ஒதுக்கப்பட்ட 200 மில்லியன் ரூபாவை ஒதுக்கி உதவுமாறு கேட்டுக் கொள்கின்றேன். உயர் கல்விக்காக, இந்த வரவு செலவுத்திட்ட ஒதுக்கீட்டில் கடந்த ஆண்டை விடவும் 30 சதவிகிதத்தினால் அதிகரிக்கப்பட்டிருப்பதை வரவேற்கின்றேன்.

ஆனால் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா அவர்கள் இந்த வரவு செலவுத் திட்டத்தில் கல்விக்கு 30 சதவிகிதத்தை அரசாங்கம் ஒதுக்கியிருப்பதாக ஊடகங்களுக்கு கருத்துக் கூறியிருப்பது மக்களுக்கு தவறான செய்தி வழங்களாகவே அமைந்திருந்ததை சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.

புற்றுநோய் மருத்துவமனை

யாழ்ப்பாணம் நல்லூரில் புதிய புற்றுநோய் மருத்துவமனை ஒன்றை அமைக்கும் திட்டமொன்றை இவ்வரவு செலவுத்திட்டம் முன்மொழிந்திருக்கின்றது. புற்றுநோய் மருத்துவமனை ஒன்றை அமைப்பதற்கான சுற்றுச் சூழல் நல்லூரில் இல்லை. அப்படி ஒரு தேவை அங்கு இல்லை.

ஆனால் யாழ்ப்பாணத்தில் தெல்லிப்பளையில் ஏற்கனவே ஒரு புற்றுநோய் மருத்துவமனை இயங்கிவருகின்றது. யுத்தத்திற்குப் பின்னர் பாரிய குறைபாடுகளுடன் காணப்பட்ட அந்த மருத்துவமனையை பொது அமைப்புக்களிடமும், பொது மக்களிடமும், குறிப்பாக தென் இலங்கை மக்களிடமும் உதவிகளை பெற்றுக் கொண்டு ஆயுகு அமைப்பு முன்வந்து புனரமைத்துக் கொடுத்துள்ளது. அவ்வமைப்பினருக்கு மீண்டும் இந்தச் சந்தர்ப்பத்தில் நன்றிகூறக் கடமைப்பட்டிருக்கின்றேன்.

ஆகவே தெல்லிப்பளை புற்றுநோய் மருத்துவமனையை விஸ்தரிக்கவும், வளப்படுத்தவும், நவீன மருத்துவ வசதிகளையும், உபகரணங்களையும் பெற்றுக் கொடுப்பதற்கும் அரசாங்கம் முன்வரலாம். நல்லூரில் புதிதாக அமைக்கப்படுவதற்காக ஒதுக்கப்பட்டுள்ள நிதியை அதற்கு செலவு செய்யலாம்.

சுதேச மருத்துவம்

சுதேச மருத்துவத்தை பாதுகாப்பதற்கும், வளர்த்தெடுப்பதற்கும் இவ்வரவு செலவுத் திட்டத்தில் முக்கிய முன்மொழிவுகள் செய்யப்பட்டுள்ளது. வடமாகாணத்தில் இயற்கை மூலிகைகள் பல பகுதிகளில் காணப்படுகின்றன. குறிப்பாக தீவகப் பகுதிகளில் அதுவும் நெடுந்தீவில் அதிகளவான இயற்கை மருத்துவச் செடிகள் காணப்படுகின்றன. அவற்றை நேர்த்தியாக பராமரிக்க வேண்டும். அவற்றை பாதுகாத்து வளர்த்தெடுக்க வேண்டும். அதற்கு அரசாங்கம் புதிய திட்டங்களை செயற்படுத்த வேண்டும்.

சிறுநீரக சிகிச்சை

சிறுநீரக நோய்த் தாக்கத்துக்கு உள்ளாகி இருப்போருக்கு மின்னேரியாவில் அமைக்கப்பட்டுள்ள மருத்துவமனை ஊடாகவே தற்போது சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.

வடமாகாணத்தில் இருக்கின்ற சிறுநீரக நோய் தாக்கத்திற்குள்ளானவர்கள், தூரப்பிரதேசமான மின்னேரியாவுக்கு சென்றுவர முடியாமல் சீரான மருத்துவ வசதியைப் பெற்றுக்கொள்ளாமல் துயரப்படுகின்றார்கள். எனவே முழு வட மாகாணத்துக்குமாக ஒரு சிறு நீரக மருத்துவமனையை வடக்கில் அமைக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கின்றேன்.

வடக்கு கிழக்கு அபிவிருத்தி

வடக்கு கிழக்கு அபிவிருத்தி தொடர்பாக இருதரப்பு மற்றும் பல் தரப்பு முகவர்களிடமிருந்தும் ஒத்துழைப்பினைப் பெற்றுக் கொள்வதற்காக 2016 ஆண்டில் அபிவிருத்திப் பங்காளர் மாநாடொன்றினை நடத்துவதற்கு அரசு திட்டமிட்டுள்ளதாக கௌரவ நிதி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். இந்த யோசனை பாராட்டுக்குறியதாகும். ஏற்கனவே நான் குறிப்பிட்டதைப்போல், முதலீட்டாளர்களும், அபிவிருத்திப் பங்காளர்களும் பங்களிப்புச் செய்வதற்கு ஏற்ற அரசியல் சூழலையும், அணுகுமுறைகளையும் நாட்டில் ஏற்படுத்த வேண்டியது மிக மிக அவசியமாகும்.

துரதிஸ்ட்டவசமாக வடக்கு மாகாண சபை அத்தகைய மாநாட்டில் பங்கு பற்றிச் செயலாற்றுவதற்கு வினைத்திறனற்று இருக்கின்றது. வடக்கில் எவ்வாறான தொழிற்சாலைகளை, நிறுவனங்களை எங்கே நிறுவலாம் என்பது தொடர்பாக தரவுத் தயாரிப்புக்களை கொண்டிருக்கவில்லை. மேற்படி மாநாட்டுக்கு முன்னர் வடக்கு மாகாண சபையானது தன்னை தயார் செய்துகொள்ள வேண்டும். மாகாணத்திலுள்ள வாய்ப்புக்களையும், வளங்களையும், நடைமுறைச் சாத்தியங்களையும் விரிவாக ஆராய்ந்து மதிப்பீடு ஒன்றை செய்ய வேண்டும். அதற்கு மத்திய அரசாங்கம் வடக்கு மாகாண சபைக்கு உதவவேண்டும்.

இடம் பெயர்ந்தவர்களின் பிரச்சனை

மன்னார், முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களில் 20 ஆயிரம் வீடுகளை அமைக்கவுள்ளதாக இந்த வரவு செலவுத்திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை வரவேற்கின்றேன்.
இதேபோல் புலம் பெயர்ந்து இந்தியாவில் அகதிகளாக இருப்போரின் என்னிக்கை ஒரு இலட்சமாக இருப்பதாக தெரியவருகின்றது. அவர்களும் நாடு திரும்பி வாழ்வதற்கு ஏற்ற வசதிகளை செய்வதோடு அவர்களுக்கும் வீடுகளைக் கட்டிக் கொடுக்க வேண்டும்.

வடக்கிலிருந்து இடம்பெயர்க்கப்பட்ட முஸ்லிம் மக்களையும் அவர்களது பூர்வீக வசிப்பிடங்களில் மீளக் குடியேற்றுவதற்கு தேவையான வசதிகளையும், வீடுகளையும் பெற்றுக் கொடுக்க வேண்டும். யாழ்ப்பாணத்தில் இடம்பெயர்ந்து நலன்புரி நிலையங்களில் இருப்பவர்களுக்கு நிவாரணங்களை முதலில் வழங்கவும், அவர்களுக்கு வீடுகள் அமைத்துக் கொடுத்து சொந்த இடங்களில் மீளக்குடி அமர்த்தவும் அரசாங்கம் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக கொடிய யுத்தத்திற்கும், ஆயுத வன்முறைகளுக்கும், அரசியல் மறுப்புக்கும் முகம் கொடுத்து வந்துள்ள வடக்கு மாகாணம் தொடர்பாக அரசாங்கம் விஷேடமான முன்மொழிவுகளையும், திட்டங்களையும் கொண்டிருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கின்றேன். ஏன் என்றால் யுத்தம் ஏற்படுத்திய பிரச்சினைகளும், குறைபாடுகளும், தேவைகளும் மிக மிக அதிகமாகவே வடக்கு கிழக்கில் இருக்கின்றன. ஏனைய மாகாணங்களைப் போல் வடக்கு மாகாணம் போதுமான இயலுமையுடனும், விருப்பத்துடனும் முன்னகர்த்தப்படவில்லை என்பது புரிந்து கொள்ளப்பட வேண்டும்.

ஆடத்தெரியாதவன் அரங்கு பிழை என்று கூறுவதுபோல் மாகாணசபையை நடைமுறைப்படுத்துவதற்கு அரசு தடை என்று கூறி வந்தார்கள். இவர்கள் சொன்னபடி பார்த்தால் ஆட்சி மாற்றம் நடந்து தாமே உருவாக்கிய
புதிய அரசாங்கம் இன்று ஆட்சி பொறுப்பில் இருக்கின்றது.

மாகாண சபையை செயற்படுத்துவதற்கு இப்போது யார் தடை என்று நான் அவர்களிடம் கேட்கின்றேன். இப்போது வடக்கு மாகாணத்தில் காணப்படும் குறைபாடுகளுக்கு நடைமுறை சார்ந்த காரணங்கள் மட்டுமல்ல, வடக்கின் நிர்வாகத்தை பொறுப்பேற்றிருப்பவர்களின் ஆற்றலற்ற அணுகுமுறையுமே காரணமாக இருக்கின்றது.

வழிமுறை என்பது வேறு, பொறிமுறை என்பது வேறு. நாம் நீண்ட காலமாக வலியறுத்தி வந்த யதார்த்த வழிமுறைகளை அரைகுறை என்றும், உழுத்துபோனது என்றும், அதை தும்புத்தடியால் கூட தொட்டும்பார்க்க மாட்டோம் என்றும் கூறியவர்கள் இன்று எமது வழிமுறைக்கு வந்திருக்கிறார்கள். காலம் கடந்த ஞானம், கண் கெட்ட பிறகு சூரிய வணக்கம் என்பது போல் காலம் தாழ்த்தி வந்திருந்தாலும் அதை நாம் வரவேற்கின்றோம். ஆனாலும், எமது வழிமுறைக்கு வந்தவர்கள் பிரச்சினையை தீர்ப்பதற்கான பொறி முறை குறித்து சிந்திப்பதாக தெரியவில்லை.

அடைந்தால் மகாமேவி, அல்லா விட்டால் மரணதேவி

Related Posts