Ad Widget

பலாலி பொலிஸ் நிலையம் மீள்குடியேற்ற பகுதிக்கு விரைவில் மாற்றப்படும்

தற்போது உயர்பாதுகாப்பு வலய எல்லைக்குள் அமைந்திருக்கும் பலாலி பொலிஸ் நிலையத்தை, இந்த வருட இறுதிக்குள் மக்கள் மீள்குடியேறிய பகுதிக்குள் மாற்றுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பலாலி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி என்.டி.எஸ்.சி நிவுன்னில்ல தெரிவித்தார்.

சிவில் சமூகங்களுக்கு இடையிலான கலந்துரையாடல் வசாவிளான் மத்திய மகாவித்தியாலத்தில் கிராமஅலுவலர் எஸ்.அனுரதன் தலைமையில், செவ்வாய்க்கிழமை (14) நடைபெற்ற போது, அதில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார். தொடர்ந்து கூறுகையில்,

‘பலாலி பொலிஸ் நிலையம் உயர்பாதுகாப்பு வலயத்துக்குள் தொடர்ந்தும் அமைந்திருப்பதால் பொதுமக்கள் உள்ளே வருவதில் பிரச்சினை உள்ளது.

மீள்குடியேற்றம் செய்யப்பட்ட பலாலி, வசாவிளான், குரும்பசிட்டி பகுதி மக்கள் தமக்கான பொலிஸ் சேவைகளைப் பெற்றுக்கொள்ள, 0213202668, 0212213900 ஆகிய தொலைபேசி இலக்கங்களுக்கு அழைப்பை ஏற்படுத்தி தமது பிரச்சினைகளை தெரிவித்தால் பொலிஸார் குறித்த பகுதிக்குச் சென்று, விசாரணைகளை மேற்கொண்டு, பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பார்கள்.

அல்லது அருகிலுள்ள அச்சுவேலி மற்றும் தெல்லிப்பழை பொலிஸ் நிலையங்களிலும் முறைப்பாடுகளை பதிவு செய்ய முடியும். இந்த வருட இறுதிக்குள் பலாலி பொலிஸ் நிலையத்தை மக்கள் வாழும் பிரதேசத்துக்கு கொண்டு வருவதற்கு, தெல்லிப்பழை பிரதேச செயலாளர் ஊடாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்தில் கடந்த வருடத்தை விட இந்த வருடம் சிறுவர் துஷ்பிரயோகங்கள் கனிசமான அளவு குறைந்துள்ளன. கடந்த காலங்களில் மீள்குடியேறிய பகுதிகளில் சிறுவர் துஷ்பிரயோகங்கள் அதிகளவில் பதிவு செய்யப்பட்டுள்ளதை அவதானிக்க முடிந்தது.

பெற்றோர்கள், வீட்டுத்திட்டங்களைப் பெறுவதற்காகவும் ஏனைய விடயங்களை நிறைவேற்றி கொள்ளவும் வெளியில் செல்லும் போது பிள்ளைகளின் பாதுகாப்பு பற்றி சிந்திப்பதில்லை. அவர்கள் வசிக்கும் தற்காலிக வீடுகளின் சூழல் துஸ்பிரயோகங்கள் இடம்பெறுவதற்கு ஏதுவாக உள்ளன.

பிள்ளைகளின் பாதுகாப்பு தொடர்பில் பெற்றோர்கள் அதிகம் சிந்திக்க வேண்டும். பிள்ளைகள் எங்கு செல்கிறார்கள்? என்ன விடயத்தை அன்றையதினம் பாடசாலையில் கற்றார்கள்? என பெற்றோர்கள் கேட்டறிந்து கொள்ள வேண்டும்.

குறிப்பாக பிள்ளைகளுக்கு அலைபேசியை வழங்குவதை நிறுத்துங்கள். பாடசாலை அதிபரைச் சந்தித்து பிள்ளைகள் தொடர்பில் பேசுங்கள். நல்ல விடயங்களை பிள்ளைகளுக்கு போதியுங்கள். பெற்றோர்கள் முன்னுதாரணமாக செயற்பாட்டால், பிள்ளைகளின் எதிர்காலம் சிறந்த ஒன்றாக அமையும்’ என்றார்.

Related Posts