Ad Widget

பலாலி கிழக்கு பிரதேசத்தில் குடியேற முடியாது: மயிலிட்டி மக்கள்

palaly-tellipplaiவலிகாமம் வடக்கு பலாலி கிழக்குப் பகுதியில் மீளக்குடியேறுவதற்கு படையினரால் விடுவிக்கப்பட்ட பிரதேசத்தில் தாம் மீளக்குடியேற மாட்டோம்’ என கோணாப்புலம் நலன்புரி நிலையத்தில் வசித்துவரும் மயிலிட்டியினைச் சேர்ந்த மக்கள் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில் அவர்கள் மேலும் தெரிவித்துள்ளதாவது,

‘பொதுநலவாய மாநாடு நடைபெற்ற போது மயிலிட்டிப் பிரதேசத்தினைச் சேர்ந்த எம்மை பலாலி பிரதேசத்தின் கிழக்காக உள்ள காணிகளில் குடியேற்றுவதற்கு இராணுவம் நடவடிக்கை மேற்கொண்டது.

இதன்போது, குறித்த பிரதேசத்திற்கு அழைத்துச் சென்று அப்பிரதேசத்தில் பொதுமக்களை மீள்குடியேற்றுவதற்கான நடவடிக்கை பிரதேச செயலகத்தின் ஊடாக மேற்கொள்ளப்பட்டது.

தொடர்ந்து பாராம்பரிய மற்றும் சிறு கைத்தொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் கே.என்.டக்ளஸ் தேவானந்தா தலைமையில் கூட்டமொன்று தெல்லிப்பழை பிரதேச செயலகத்தில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் இப் பிரதேசங்களில் மீள்குடியேறும் மக்களின் ஒரு குடும்பத்திற்கு 2 பரப்புக் காணியும், அதற்கான உறுதியும் வீட்டு வசதிகளும் செய்து தரப்படும் என உறுதியளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, அப்பகுதியில் மீளக்குடியேறுவதற்காக பதிவினை மேற்கொண்டோம்.

இருந்தும், குறித்த இடங்களில் நிரந்தரமாகக் மீளக்குடியேறலாம், ஆனால் உங்களுக்கு காணி உறுதிப்பத்திரம் மற்றும் வீடு கட்டுவதற்கான வசதிகள் உள்ளிட்ட ஏனைய வசதிகள் ஏற்படுத்தித் தரமாட்டோமென பின்னர் பிரதேச செயலகம் அறிவித்தது.

இதனால், அப்பிரதேசத்தில் நாங்கள் குடியேறுவதை நிராகரித்துள்ளோம். எங்களிற்கு எவருடைய காணிகளும் தேவையில்லை. எமது சொந்தக் காணிகளே எமக்கு வேண்டும்’ என கோரிக்கை விடுத்துள்ளனர்.

அத்தோடு காங்கேசன்துறை சீமேந்து ஆலைக்குப் பின்னால் உள்ள பிரதேசத்திலும் மீள்குடியேற்றுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், இருந்தும் குறித்த பகுதியில் பெருமளவான கழிவுப்பொருட்கள் கொட்டப்படுவதுடன் சுண்ணக்கல் அகழ்வுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதால் நீர் தேங்கி நின்று தொற்று நோய்கள் பரவும் அபாயம் காணப்படுவதாகவும் அவர்கள் மேலும் தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்திகள்

மயிலிட்டி மக்களை சிமெந்து தொழிற்சாலைக் காணியில் குடியமர்த்துவதற்கு நடவடிக்கை!

மீள்குடியேற்ற ஏற்பாடுகளைப் பார்வையிட்டார் கமல்!

3 கிராம அலுவலர் பிரிவுகளில் மீள்குடியமர்வதற்கு அனுமதி – அரச அதிபர்

பலாலி முகாமை அண்மித்த பகுதிகளில் மீள்குடியேற்றத்துக்கு அனுமதி

Related Posts