Ad Widget

பலாலி இராஜ இராஜேஸ்வரி அம்மன் ஆலய வழிபாட்டுக்கு அனுமதி

பலாலி உயர்பாதுகாப்பு வலயத்துக்குள் அமைந்துள்ள இராஜ இராஜேஸ்வரி அம்மன் ஆலயத்தில் பொதுமக்கள் வழிபாடு செய்ய இராணுவத்தினர் அனுமதி வழங்கியுள்ள நிலையில், மகளிர் விவகார பிரதி அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், பொதுமக்களுடன் திங்கட்கிழமை (26) சென்று வழிபாடுகளில் ஈடுபட்டார். ஆலயத்துக்கு சென்ற விஜயகலா, தேங்காய் உடைத்து கற்பூரம் ஏற்றி வழிபாடுகளில் ஈடுபட்டார்.

கடந்த 1990ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல், அப்பகுதி மக்கள் இடம்பெயர்ந்திருந்தனர். அப்பிரதேசம் முழுவதும் உயர்பாதுகாப்பு வலயமாக பிரகடனப்படுத்தப்பட்டு மக்கள் மீள்குடியேற முடியாத பிரதேசமாக அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், கடந்த 2002ஆம் ஆண்டு நாட்டில் யுத்த நிறுத்தம் செய்யப்பட்டு சமாதான பேச்சுவார்த்தை நடைபெற்றுக்கொண்டிருந்த காலப்பகுதியில், மறைந்த அமைச்சர் தியாகராஜா மகேஸ்வரனின் முயற்சியால், மேற்படி ஆலயத்துக்கு சென்று வழிபாடு செய்வதற்கு இராணுவத்தினர் அனுமதி வழங்கினர்.

இராணுவத்தினரிடம் அனுமதி பெற்று இந்த ஆலயத்தில் பொங்கல் பொங்கி வழிபாடுகளை மேற்கொண்ட மக்கள், ஆலயத்தில் அபிஷேகமும் செய்து வந்தனர்.

பின்னர் 2005ஆம் ஆண்டில் சமாதான பேச்சுவார்த்தைகள் முறிவடைந்து நாட்டில் மீண்டும் அசாதாரண சூழல் ஏற்பட்டதால் இந்த ஆலயத்துக்கு செல்வதற்கு இராணுவத்தினர் அனுமதி மறுத்து இருந்தனர். தற்போது, மீண்டும் ஆலயத்துக்கு சென்று வழிபட இராணுவத்தினர் அனுமதி வழங்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts