Ad Widget

பலாலி, அச்சுவேலி படைமுகாம்களில் தேடுதல் நடத்த ஜனாதிபதி ஆணைக்குழு பரிந்துரை!

காணாமற்போன ஒருவரைக் கண்டறிவதற்காக பலாலி மற்றும் அச்சுவேலி இராணுவ முகாம்கள் சோதனையிடப்பட வேண்டும் என ஜனாதிபதி விசாரணைக்குழுவுக்கு பரிந்துரை செய்வதாக அந்த ஆணைக்குழுவின் தலைவர் மெக்ஸ்வெல் பரணகம தெரிவித்துள்ளார்.

காணாமற்போனோரைக் கண்டறியும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் நல்லூர் பிரதேச செயலகத்துக்குட்பட்டவர்கள் சாட்சியமளிக்கும் அமர்வு, யாழ்ப்பாணம் மாவட்டச் செயலகத்தில் நேற்று இடம்பெற்றது.

இதன்போது கோண்டாவில் பகுதியைச் சேர்ந்த ஜெயகாந்தன் நர்மிதா என்பவர் சாட்சியமளித்தார். ‘தனது கணவர் ஜெயகாந்தன், (காணாமற்போகும் போது வயது 32) கோண்டாவிலுள்ள எமது வீட்டிலிருந்து கடந்த 2007ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 2ஆம் திகதி அதிகாலை 3.30 மணிக்கு இராணுவத்தினரால் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டார். விசாரித்துவிட்டு அனுப்புவதாகக் கூறிச் சென்றவர்கள், திரும்பவும் அவரை அனுப்பவில்லை.

அவரைப் பிடித்துச் செல்லும் போது, 3 வயது மற்றும் 1 ½ வயதில் இரண்டு பிள்ளைகள் இருந்தன. தொடர்ந்து 2008ஆம் ஆண்டு மே மாதம் 5ஆம் திகதி, படையினர் அணியும் சீருடையுடன், இராணுவ மோட்டார் சைக்கிளில் முகத்தை துணியால் கட்டிய நிலையில் ஹெல்மெட் அணிந்த நிலையில், எனது கணவரை அச்சுவேலி இராணுவ முகாமுக்கு அருகில் கண்டேன். என்னைக் கண்டதும், அவர் முகத்தில் இருந்த துணியை விலக்கி தனது முகத்தை அடையாளம் காட்டினார். தொடர்ந்து, அதேவருடம் ஓகஸ்ட் மாதம் பலாலி வீதியில் இராணுவ உடையில் மோட்டார் சைக்கிளில் கணவர் செல்வதைக் கண்டேன்.

இவ்வாறு இருக்க இந்த வருடம் நல்லூர் பின்வீதியில் அமைந்துள்ள எமது உறவினர் முறையான தாத்தா வீட்டுக்கு இராணுவ உடையில் சென்ற எனது கணவர் அவருடன் உரையாடி விட்டுச் சென்றுள்ளார். இதன் மூலம் எனது கணவர் உயிருடன் இருக்கின்றார் என்பது உறுதியாகத் தெரிகின்றது. இராணுவ முகாம்களில் தேடினால் எனது கணவரைக் கண்டுபிடிக்க முடியும் என்றார்.

அதற்கு பரணகம, எந்த படைமுகாம்களில் சோதனை நடத்தப்படவேண்டும் என கருதுகின்றீர்கள் எனக்கேட்டார். அச்சுவேலி மற்றும் பலாலி படை முகாம்களில் சோதனை நடத்தப்படவேண்டும் என அந்தப் பெண் தெரிவித்துள்ளார். இதனையடுத்து, மேற்படி பரிந்துரையை ஜனாதிபதி விசாரணைக்குழுவுக்கு வழங்குவதாக அவர் தெரிவித்துள்ளார்.

Related Posts