பலாலியில் காணி விடுவிப்பது குறித்து பாதுகாப்பு அமைச்சில் உயர்மட்ட கலந்துரையாடல்!!

பலாலிப் பிரதேசத்தில் உயர் பதுகாப்பு வலயத்தில் எஞ்சியுள்ள காணிகளை அவற்றின் தனிப்பட்ட காணி உரிமையாளர்களுக்கு துரிதமாகக் கையளிப்பது குறித்து பாதுகாப்பு அமைச்சில் உயர்மட்ட கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது.

பிரதி பாதுகாப்பு அமைச்சர் ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர தலைமையில் இடம்பெற்ற இக் கலந்துரையாடலில் பாதுகாப்புச் செயலாளர் ஓய்வு பெற்ற எயார் வைஸ் மார்ஷல் சம்பத் துய்யகொந்தா உட்பட சிரேஷ்ட பாதுகாப்பு மற்றும் நிர்வாக அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.

அதற்கமைய குறித்த காணிகளை உரிமையாளர்களடம் மீளக் கையளிப்பதற்காக இராணுவத்தின் கட்டம் கட்டமான வெளியேற்றத்தை மீளாய்வு செய்தல் உள்ளிட்ட செயற்பாடு மற்றும் நிர்வாக ரீதியான தடைகளைத் தீர்ப்பதில் இக் கலந்துரையாடலில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

குறிப்பிட்ட பிரதேசத்தில் உள்ள தனியார் காணிகளை அதன் உரிமையாளர்களிடம் விடுவிப்பது தொடர்பான முன்னேற்றத்தை மீளாய்வு செய்வதற்கும், தொடர்ந்து நிலவும் சவால்களைத் தீர்ப்பதற்கும் இதன் போது தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அத்தியாவசியமான பாதுகாப்புத் தளங்களின் தொடர்ச்சியான பாதுகாப்பை உறுதி செய்யும் அதே வேளையில், சிவில் சொத்துக்களில் ஏற்படும் தாக்கத்தைக் குறைக்கும் நோக்கில் புதிய எல்லைகளை இறுதி செய்வது குறித்தும் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

பிரதி பாதுகாப்பு அமைச்சர் மற்றும் பாதுகாப்புச் செயலாளர் ஆகிய இருவரும், தேசிய நல்லிணக்கத்தின் ஒரு முக்கிய அங்கமாக காணி தொடர்பான பிரச்சினைகளைத் தீர்ப்பதில் அரசாங்கம் கொண்டுள்ள தளராத உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தினர்.

இந்தச் செயல்முறையானது வெளிப்படைத்தன்மை மற்றும் சமத்துவம் கொண்டதாக இருக்க வேண்டும் என்றும், தேசியப் பாதுகாப்புக் கருத்தாய்வுகளுடன் முழுமையாக ஒத்துப்போக வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.

Related Posts