Ad Widget

பலத்த கட்டுப்பாடுகளுக்கு மத்தியில் நாகர்கோவில் படுகொலையின் 25ம் ஆண்டு நினைவேந்தல் அனுஷ்டிப்பு

நாகர்கோவிலில் 1995ம்ஆண்டு இலங்கை விமானப்படையின் குண்டுவீச்சு தாக்குதலில் படுகொலை செய்யப்பட்ட 21 மாணவர்களின் 25ம் ஆண்டு நினைவேந்தல் நேற்றைய தினமாகும்.

இதற்கு பாதுகாப்பு தரப்பு மற்றும் வலய கல்வி திணைக்களம் என்பன பலத்த கட்டுப்பாடுகளை விதித்துள்ளன.

ஆகவே, பாடசாலை வளாகத்தில் இடம்பெற்ற நினைவேந்தல் நிகழ்விற்கு பாடசாலையில் கல்வி கற்கும் மாணவர்களில் ஆறாம் ஆண்டிற்கு மேற்பட்ட மாணவர்களே அனுமதிக்கப்பட்டனர்.

இதேவேளை நாகர்கோவில் கிராமத்திற்கு செல்கின்ற அனைவரும் இராணுவத்தினால் சோதனைக்கு உட்படுத்தப்பட்டு, ஆட்கள் பதிவு செய்யப்பட்டே அனுமதிக்கப்பட்டனர். நாகர்கோவில் வட்டார பிரதேச சபை உறுப்பினரும் பழைய மாணவனும் மாணவர்களின் பெற்றோருமான ஆ.சுரேஸ்குமார் மட்டுமே இந்த நினைவேந்தலுக்கு செல்லவிடாது பருத்தித்துறை பொலிஸாரால் தடுக்கப்பட்டார்.

மேலும், நாகர்கோவில் வடக்கு பகுதி எங்கும் இராணுவ பிரசன்னம் அதிகரித்திருந்த நிலையில், நாகர்கோவிலை சேர்ந்த படுகொலை செய்யப்பட்ட மாணவர்களது பெற்றோர்கள் உட்பட கிராம மக்களும் அச்சம் காரணமாண நினைவேந்தலில் கலந்து கொள்ளவில்லை.

இதேவேளை நாகர்கோவில் வடக்கு முருகன் ஆலயத்தில் ஆத்ம சாந்தி வேண்டி சிறப்பு வழிபாடுகளும் இடம்பெற்றதுடன் அன்னதானமும் இடம்பெற்றது.

இந்நிகழ்வு பாடசாலை அதிபர் கண்ணதாசன் தலைமையில் இடம்பெற்றதுடன் பொது ஈகை சுடரினை, அதிபராக பணியாற்றியிருந்த சி.மகேந்திரம் ஏற்றி வைத்து, மலர் மாலை அணிவித்ததை தொடர்ந்து படுகொலை செய்யப்பட்ட மாணவர்களது பெற்றோர்கள், பாடசாலை அதிபர், ஆசிரியர்கள், கிராமத்தவர்கள் சுடரேற்றி மலர்மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தியதுடன் மண்டபத்தில் நினைவுரைகளும் இடம்பெற்றன.

Related Posts