Ad Widget

பற்றைக்காட்டிற்குள் வளர்ந்த சிறுமிகள்!

பற்றைகளால் சூழப்பட்ட பூட்டப்பட்ட வீடு ஒன்றின் முற்றத்தில் தனிமையில் படுத்திருந்த இரண்டு சிறுமிகள் வவுனியா ஊடகவியலாளர்களால் மீட்கப்பட்டு வவுனியா வடக்கு சிறுவர் மேம்பாட்டு உத்தியோகத்தரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

இந்த அதிர்ச்சி சம்பவம்நேற்று நடந்துள்ளது.

வவுனியா, கனகராயன்குளம், பெரியகுளம் பகுதிக்கு வவுனியா ஊடகவியலாளர்கள் மூவர் நேற்று மதியம் சென்றிருந்தனர்.அப்போது, பூட்டப்பட்ட வீடு ஒன்றின் வெளி முற்றப் பகுதியில் தனிமையில் இரண்டு சிறுமிகள் படுத்திருந்ததை அவதானித்துள்ளனர்.

அவர்கள் 4 வயது, 3 வயது சிறுமிகள் ஆவர்.சற்றுநேரம் கழித்து, பாடசாலையிலிருந்து மேலும் இரண்டு சிறுமிகள் அங்கு திரும்பி வந்துள்ளனர்.அவர்கள் 6 வயது, 7 வயதுடையவர்கள்.இந்த நான்கு சிறுமிகளும், சிறுவர் உரிமை மேம்பாட்டு உத்தியோகத்தரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

தேசிய சிறுவர் பாதுகாப்பு பிரிவு மற்றும் வவுனியா வடக்கு சிறுவர் உரிமை மேம்பாட்டு உத்தியோகத்தர், கனகராயன்குளம் பொலிசார் ஆகியோருக்கு ஊடகவியலாளரால் தெரியப்படுத்தப்பட்டதையடுத்து அவ்விடத்திற்கு வருகை தந்த உத்தியோகத்தர்களிடம் அச் சிறுமிகள் ஒப்படைக்கப்பட்டனர்.

குறித்த சிறுமிகளின் தாயார் வெளிநாடு ஒன்றுக்கு தொழில் வாய்ப்புக்காக சென்றுள்ள நிலையில் அச் சிறுமிகள் தமது தாயின் இரண்டாம் தார கணவருடனேயே வசித்து வந்துள்ளனர்.

அவரும் கூலி வேலைக்காக வெளியில் செல்லும் போது வீட்டை பூட்டிவிட்டு செல்வதால் சிறுமிகள் நால்வரும் பற்றைகளால் சூழப்பட்ட அந்த வீட்டின் முற்றப் பகுதியிலேயே தமது பகல் பொழுதை கழித்து வந்துள்ளனர்.

பகல் நேரங்களில் பாடசாலைகளில் கொடுக்கப்படும் சாப்பாட்டையே உணவாக உட்கொண்டும் இரவு நேரங்களில் மது போதையில் வரும் தந்தையால் கொடுக்கப்படும் உணவுகளை உண்டும் அச் சிறுமிகள் வாழ்ந்து வருகின்றனர்.

தொடர்ச்சியாக இவ்வாறு நடைபெற்று வருகின்ற போதும் உரிய அதிகாரிகள் அச் சிறுமிகளின் பாதுகாப்பு தொடர்பில் போதியளவில் கவனம் செலுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts