Ad Widget

பறிமுதல் செய்யப்பட்ட ஆடுகள் எரிப்பு!!

Kanavaththai-velvei-aaduகீரிமலை, கவுணாவத்தை நரசிம்ம வைரவர் ஆலயத்தின் இடம்பெற்ற வேள்வியில் வெட்டப்பட்ட கிடாய் ஆடுகளை பொதுஇடத்தில் வைத்து பங்குபோட்டதாகப் பறிமுதல் செய்யப்பட்ட இரண்டு ஆடுகளும் தெல்லிப்பளை கூட்டுறவு வைத்தியசாலை அமைந்துள்ள வாளாகத்தின் வாசலில் வைத்து நேற்று ஞாயிற்றுக்கிழமை (15) எரியூட்டப்பட்டது.

பொதுஇடத்தில் வைத்து பங்கு போட்டதாகக்கூறி குறித்த இரண்டு ஆடுகளையும் தெல்லிப்பளை சுகாதார வைத்தியதிகாரி, பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் இணைந்து நேற்று முன்தினம் சனிக்கிழமை (14) பறிமுதல் செய்தனர்.

1 இலட்சம் ரூபா பெறுமதியான ஒரு ஆடும், 50 ஆயிரம் ரூபா பெறுமதியான மற்றைய ஆடுமே இவ்வாறு பறிமுதல் செய்யப்பட்டன. இந்நிலையில் குறித்த ஆடுகளை மல்லாகம் நீதவான் நீதிமன்ற மேலதிக நீதவான் ஜோய் மகிழ்மகாதேவா முன்னிலைப்படுத்திய போது, அதனை உரிமையாளர்களிடம் கையளிக்கும்படி நீதவான் உத்தரவிட்டார்.

அதற்கிணங்க சுகாதார வைத்தியதிகாரி, பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள ஆடுகளை உரிமையாளர்களிடம் கையளிக்க முற்பட்டவேளை, ‘பிற்பகல் வேளை ஆகியதினால் இனிமேல் ஆடுகளைப் பங்குபோட முடியாது’ எனக்கூறிய உரிமையாளர்கள் ஆடுகளை ஏற்க மறுத்ததுடன், அதற்குரிய பணத்தினைத் தரும்படி சுகாதார வைத்தியதிகாரியிடம் கோரியுள்ளனர்.

இது தொடர்பில் இரு தரப்பினரையும் சமரசம் செய்யும் நடவடிக்கையில் தெல்லிப்பளை பொலிஸார் மேற்கொண்ட போதிலும், அது பயனளிக்கவில்லை. இந்நிலையில் ஆடுகள் பழுதடைந்தமையினால் அவை தீயிட்டு எரிக்கப்பட்டன.

Related Posts