Ad Widget

பறிபோகும் தமிழர் நிலப்பரப்பை தடுக்க சர்வதேசம் உதவ வேண்டும் – த. தே. கூட்டமைப்பு

tnaபறிபோகும் தமிழர் நிலப்பரப்பை தடுக்க சர்வதேசம் உதவ வேண்டும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

தமிழ் மக்களின் காணிகள் இன்று திட்டமிட்ட ரீதியில் மிகவும் சூட்சுமமான முறையில் அரசாங்கத்தால் அபகரிக்கப்பட்டு வருகிறன. இதனைத் தடுத்து நிறுத்த சர்வதேச சமூகம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார்.

யுத்த காலத்தில் தமிழர் பிரதேசங்களை விடுவிப்பதாக கூறி ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளை செய்த அரசாங்கம், யுத்தம் முடிவடைந்து ஐந்து ஆண்டுகள் நிறைவடையும் இவ்வேளையிலும் தொடர்ந்து நில அபகரிப்புக்களை நன்கு திட்டமிட்டு சூட்சுமமான முறையில் மேற்கொண்டு வருகின்றது.

அந்த வகையில், வவுனியா வடக்கு, நெடுங்கேணி பிரதேசத்தின் நைனாமடு – ஆனந்த புளியங்குளம் ஆகிய இரு கிராமங்களுக்கும் இடைப்பட்ட பிரதான வீதியோரத்தில் 500 ஏக்கர் காணி பொம்பே சிலோன் கம்பனிக்கு பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் விசேட உத்தரவின் பெயரில் பண்ணை அமைப்பதற்காக வழங்கப்பட்டு நில அளவை செய்யப்பட்டுள்ளதுடன் காடழிப்புக்கான ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இது தவிர, கரும்புச் செய்கைக்காக 1500 ஏக்கர் காணி வவுனியா வடக்குப் பகுதியில் எடுப்பதற்கான முயற்சிகள் இடம்பெறுகிறது. எமது மக்கள் இன்று தொழில் இன்றி நிரந்தர வீடு இன்றி அல்லல்பட்டுக் கொண்டிருக்கின்றனர். இன்னும் ஒரு பகுதி மக்கள் குடியிருப்பதற்கு நிலம் இன்றி மற்றவர் காணிகளில் குடியிருக்கின்றனர். அவ்வாறு அவர்கள் கஸ்டப்பட்டுக்கொண்டிருக்க இன்று ஒவ்வொரு பயிர்செய்கையின் பெயர்களைக் கூறி தமிழர் பகுதிகளில் நில அபகரிப்புகள் தொடர்ந்த வண்ணமே உள்ளன.

நெடுங்கேணி – முல்லைத்தீவு வீதியில் தண்டுவான் என்னும் கிராமத்தின் வன இலாகாவுக்கு சொந்தமான காட்டுப் பகுதியில் பிரதான வீதியுடன் இணைத்து வீதி அமைப்புப் பணியும் இடம்பெற்று வருகிறது. இவ்வீதி காட்டுப் பிரதேசத்திற்குள் ஏன் அமைக்கப்படுகிறது என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இது சிங்கள குடியேற்றம் நிறுவதற்கான நடவடிக்கையாக இருக்கலாம் என அப் பகுதி மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

ஒரு பிரதேசத்தின் காணி வழங்கும் அதிகாரம் பிரதேச செயலாளருக்குடையது. ஆனால் இன்று வடபகுதியில் இடம்பெறுகின்ற காணி அபகரிப்புக்கள் தொடர்பாக அவர்களுக்கு தெரியப்படுத்தப்படுவதில்லை. அவர்களுக்கு என்ன நடக்கிறது என்பதே தெரியவில்லை. தெரிவித்தாலும் கூட அவர்கள் காணியை வழங்குமாறு நிர்பந்திக்கப்படுகிறார்கள்.

இவ்வாறு பல காணிகள் திட்டமிட்ட ரீதியில் அபகரிக்கப்பட்டு வருகிறன. இது தொடர்பில் கதைப்பதற்கு அரச அதிகாரிகள் பயப்படுகிறார்கள். போரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வாழ்வாதாரம், பொருளாதாரம் சார்ந்த பல பிரச்சினைகளை தீர்க்க முடியாமல் நிற்கின்ற நேரத்தில், இவ்வாறு திட்டமிட்ட அபகரிப்பை ஏற்படுத்துவது தமிழ் மக்கள் மத்தியில் கடும் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நில அபகரிப்புக்கள் தொடர்பில் சர்வதேச சமூகம் விரைந்து நடவடிக்கை எடுத்து பறிபோகும் தமிழர் நிலப்பரப்பை தடுக்க வேண்டும் என அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

Related Posts